வரவு செலவு, திட்டம் ஊட்டச்சத்து சவால்களுக்கு போதிய தீர்வு வழங்க தவறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!

மக்கள் அதிகளவில் அரிசியை உட்கொள்வதாகவும், தமக்குக் கூடுதல் புரதச்சத்துத் தேவைப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மக்களின் புரதச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் எவையும் வழங்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோழி இறைச்சிக்கான வரிகள் குறைக்கப்படவில்லை என்றும், மாறாக அதன் மீதான 18 சதவீத வரியுடன் மேலதிகமாக 2.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழித் தீவனத்திற்கு முக்கியப் பொருளான சோளத்தின் இறக்குமதி வரி கடந்த மே மாதம் இருமடங்காக உயர்த்தப்பட்டதோடு, உரிம முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் சோள விவசாயிகளுக்கு எத்தகைய நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தில் காய்ந்த கருவாட்டுக்கான வரிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அதிகளவு உப்புச் சத்து அதில் உள்ளதால், அதனை மட்டுமே முக்கிய புரத மூலமாக நம்பியிருக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அரச துறைச் சம்பள உயர்வுத் திட்டம் தொடர்பாகவும் ஹர்ஷ டி சில்வா விமர்சித்தார்.

அப்போது பணவீக்கம் மறை 0.4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலைக் கருத்தில் கொள்ளாமல் அத்திட்டம் தொடரப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்தத்தில், வரவு – செலவுத் திட்டம் சாதாரண குடும்பங்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துச் சவால்களுக்குப் போதுமான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக ஹர்ஷ டி சில்வா கடுமையாக விமர்சித்துள்ளார்.