முதன்முறையாக பிரெய்லி முறையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் வெளியிடப்படவுள்ளது…

இலங்கையில் முதன்முறையாக 1998 ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக்கொள்கை ஆகியவை பிரெய்லி எழுத்துரு முறையில் வெளியிடப்படவுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்னெடுப்பில் இந்தச் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பார்வை குறைபாடுள்ள சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பொறுப்புகள், அதன் கடமைகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக்கொள்கை கட்டமைப்பு போன்ற அவசியமான தகவல்களை நேரடியாக அறிந்துகொண்டு தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த முன்னோடி முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துச் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், விதிவிலக்கின்றி ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான முறையில் தகவல்களை வழங்குவதும் அமைச்சின் முக்கிய குறிக்கோளாகும்.

இதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளை அனைத்து சிறுவர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளடக்கிய நிர்வாகச் சூழலை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது