இணையவழி மோசடிகளைத் தடுத்து, நாடுகடந்த குற்றப்பின்னணி வலைப்பின்னல்களை அழிப்பதற்காக இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் FBI அமைப்பின் சிறப்பு விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது, அமெரிக்காவின் சார்லோட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த FBI அதிகாரிகள், இலங்கையில் இயங்கிவரும் மோசடி மையங்கள் குறித்த விசாரணைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.
சர்வதேச மோசடி வலைப்பின்னல்களைக் கண்டறிந்து முடக்குவதற்காக FBI அமைப்பு பிரத்தியேகக் குழுவொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடரும் விசாரணைகளுக்குத் தேவையான சிறப்புத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் இரு நாடுகளின் புலனாய்வுத் திறனை மேம்படுத்துவதையும் இக்குழு வழங்கவுள்ளது.
இந்த விஜயத்தின்போது, குற்றவியல் விசாரணை நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு மேம்பாடு தொடர்பில் FBI அதிகாரிகள் தங்களது இலங்கை சகாக்களுக்குப் பயிற்சியளித்து இணைந்து செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், குற்றச் செயல்களைத் தடம் பார்த்தல் மற்றும் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான வழக்குகளை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு இக்கூட்டு நடவடிக்கை கைகொடுக்கும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடுகடந்த குற்றவியல் வலைப்பின்னல்கள் இலங்கையைத் தங்கள் இணையவழி குற்றச் செயல்களின் தளமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஆற்றலையும் இது பலப்படுத்தும்.
வெளிநாடுகளில் இயங்கும் குற்றவியல் வலைப்பின்னல்கள் பில்லியன் கணக்கான டொலர்களைத் திருடி வருவதாகவும், அவற்றை நிறுத்த தாங்கள் உறுதிகொண்டுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) தெரிவித்துள்ளார்.
FBI இன் புலனாய்வு நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறையின் திறன்களுடன் இணைப்பது, அதிக அமெரிக்கர்களும் இலங்கையர்களும் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பதற்கும் குற்றவாளிகளைக் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



