அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக பாராளுமன்றில் ஊழல் குற்றச்சாட்டு

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா பாராளுமன்றில் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கே.டி.லால் காந்த, வசந்த சமரசிங்க மற்றும் குமார ஜயகொடி ஆகிய நான்கு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவையில் சபாநாயகர் பிரசன்னமாகியிருந்த காரணத்தினாலும், அவை நடைமுறைகளுக்கு மதிப்பளித்தும் மேலதிக விவரங்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் அஜித் பெரேரா கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

50 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதாகவும் 450 குளங்களை நிர்மாணிப்பதாகவும் அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதி அளித்தப் போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கொள்கலன்கள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

அஜித் பெரேராவின் இந்தக் கருத்துக்களுக்கு ஆளும் தரப்பினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் சிறிது நேரம் அமைதியின்மையும் ஏற்பட்டது.