பொது இடங்களிலும் ஆலயங்களிலும் துணிந்து அஞ்சலியை செலுத்த முன்வர வேண்டும்-சிவாஜிலிங்கம்

186 Views

அஞ்சலியை செலுத்த முன்வர வேண்டும்

குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், “மாவீரர் நாளை  நினைவு கூறுவது தொடர்பாக இலங்கை அரசு,  காவல்துறையினர் ஊடாகவும் படையினர் ஊடாகவும் நீதிமன்றங்களை அணுகி, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழல் பின்னணியிலேயே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார்கள் எனக் கூறி, எங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள். சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன.

மேலும், மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள் தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றது.

இந்நிலையில் தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவரிடம் கேட்டிருக்கின்றோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது, துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செலுத்த முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 பொது இடங்களிலும் ஆலயங்களிலும் துணிந்து அஞ்சலியை செலுத்த முன்வர வேண்டும்-சிவாஜிலிங்கம்

Leave a Reply