முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என்று பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பின் பிரதி சாக்கிய புத்திர தர்ம அமைப்பின் பிரதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும்” என்றும், “அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் பிரகாரம், தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



