மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

04. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு மற்றும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை இதுகுறித்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம், கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம், பண்ணையாளர் மற்றும் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட 12 சிவில் அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த மக்கள் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளன.

இதனை ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் நில வளம், உணவு உற்பத்தி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொது மக்கள் போராட்டம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது