வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 25-ம் திகதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

127 Views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர்வரும் 25ஆம் திகதி ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு   அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டது. ஆனால் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இந்திய மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்து நெருக்கடி கொடுக்க விவசாயிகள் முடிவெடுத்தனர். அதன்படி உத்தரபிரதேசம், பஞ்சாப்பில் பாஜக சார்பில் எங்கு கூட்டம், விழாக்கள் நடந்தாலும் விவசாயிகள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 25ஆம் திகதி ‘பாரத் பந்த்’ நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இடதுசாரி கட்சிகளும் விவசாயிகள் ‘பந்த்’-க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சிபிஐ (எம்), சிபிஐ, பார்வர்ட் பிளாக் மற்றும் ஆர்எஸ்பி (புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி) ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர்

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ”வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கிறது. மோடி அரசின் இந்த பிடிவாதத்தை கண்டிக்கிறோம். விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு (எம்.எஸ்.பி) அமல்படுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளன. பொதுமக்கள் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் இந்த கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply