அணுவாயுதப் பரிசோதனை – தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம். – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

597 Views

அணுவாயுதப் பரிசோதனை - தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம்

அணுவாயுதப் பரிசோதனை - தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம்அணுவாயுதப் பரிசோதனை – தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம்: ஆகஸ்ட் 29 ஆம் நாள் அணுவாயுத பரிசோதனைக்கு எதிரான அனைத்துலக தினமாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் 2009 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த தீர்மானம் 2010 ஆம் ஆண்டு நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அணுவாயுதங்கள் பேரழிவை ஏற்படுத்துவதைப் போலவே அதனை பரிசோதிப்பதும் மக்களுக்கும், சூழலுக்கும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே தான் அதனை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலாவது அணுவாயுத பரிசோதனை

1945 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மெக்சிகோவில் அமெரிக்கா மேற்கொண்ட முதலாவது அணுவாயுத பரிசோதனையில் இருந்து 2017 ஆம் ஆண்டு வடகொரியா மேற்கொண்ட பரிசோதனை வரையில் 2050ற்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அணுவாயுதப் பரிசோதனைமெக்சிகோவில் முதலாவது அணுவாயுத பரிசோதனை இடம்பெற்ற இடத்தில் இருந்த மண் ஆனது வெப்பத்தை தாங்காது கண்ணாடியாக மாற்றம் அடைந்ததுடன், 12 மைல்கள் சுற்றளவுக்கு பெருட்களும் தூக்கி வீசப்பட்டிருந்தன.

இது இடம்பெற்று சில வாரங்களுக்குள் ஹிரோசிமா மற்றும் நாகசாஹி மீது இரு அணு குண்டுகள் வீசப்பட்டன. மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் நோயினால் பாதிப்படைந்தனர்.

இரத்தம், தைரொயிட், மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்கு இந்த கதிர்வீச்சுக்கள் காரணமாகின்றது. மேலும் வேறு பல நோய்கள், பயன்படுத்த முடியாது கிடக்கும் பெருமளவான நிலங்கள், அந்த நிலத்தில் இருந்து அழிக்கப்பட்ட ஏனைய உயிரினங்கள் என்பனவும் இதன் விளைவுகளாகும். பல பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் பரிசோதனை நடத்தப்பட்ட 60 இற்கு மேற்பட்ட பிரதேசங்களின் நிலங்கள் பயன்படுத்த முடியாது உள்ளது.

முதலாவது அணுவாயுத பரிசோதனை நிகழ்ந்து 76 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உலகம் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அணுப் பரிசோதனை பயன்படுத்தப்பட்ட போதும், எரிசக்திக்காக பயன்படுத்தப்படும் அணுசக்தியின் போது வெளிவரும் கழிவுப் பொருளான புளுட்டோனியம் 29,400 ஆண்டுகள் கதிர்வீச்சை தரவல்லது அதனை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பது தொடர்பில் உலகம் அச்சம் கொண்டுள்ளது.

வானில் நிகழ்த்தப்பட்ட 528 பரிசோதனைகளானது ஹிரேசிமாவில் வெடித்த அணுகுண்டைப் போல 29,000 குண்டுகளுக்கு இணையானது. அதன் நச்சுத் தன்மையான கதிர்விச்சானது நிலம், காற்று மற்றும் நீர் என எல்லாவற்றையும் மாசுபடுத்தியுள்ளது.

அணுவாயுத தடை மற்றும் பரிசோதனைக்கு எதிரான குரல்

அணுவாயுதப் பரிசோதனைஹிரேசிமாவில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அமெரிக்காவனது 1954 ஆம் ஆண்டு மிகவும் சக்தி வாய்ந்த அணுவாயுதம் ஒன்றை மார்ஷல் தீவுகளில் பரிசோதனை செய்திருந்தது. 15 மில்லியன் தொன் ரி.என்.ரி எனப்படும் வெடிமருந்துக்கு இணையான சக்தி கொண்ட அந்த ஆயுதம் உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அணுவாயுத தடை மற்றும் பரிசோதனைக்கு எதிரான குரல்களும் ஒலிக்க ஆரம்பித்தன. எனினும் 1952 ஆம் ஆண்டில் இருந்து 1958 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்கா 67 சோதனைகளை அங்கு செய்திருந்தது.

வானில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைளில் இருந்து சிதறும் மூலகங்கள் வெளிவிடும் கதிர் வீச்சுக்களால் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டன. Strontium-90 எனப்படும் கதிர்வீச்சு மூலகம் பாலூட்டும் தாய்மரையும் அவர்களின் குழந்தைகளையும் பாதித்தது. அதன் பின்னர் வான்வெளி, விண்வெளி மற்றும் நீருக்கடியிலான பரிசோதனைகளை தடுக்கும் தீர்மானம் ஒன்று 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும் அதில் பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் முதலில் கையொப்பமிடவில்லை. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முற்று முழுதான தடை கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்கான முழுமையான ஆதரவுகளை நாடுகள் வழங்கவில்லை என்றே கூறலாம். 1998 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானும், 2017 ஆம் ஆண்டு வரையில் வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனைகளை மேற் கொண்டிருந்தன.

இருந்த போதும், இந்த தடை உத்தரவு அணுவாயுத தடை உடன்படிக்கையாக 2017 ஆம் ஆண்டு 122 நாடுகளின் ஆதரவுகளுடன் பலப்படுத்தப்பட்டது.

அணுவாயுதப் பரிசோதனைஇந்த நாடுகள் மேற்கொண்ட அணுவாயுத பரிசோதனைகளால் பல தீவுகளில் இருந்த பழங்குடி மக்கள்கள் தமது வாழிவிடங்களை விட்டு நிரந்தரமாக வெளியேற வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று தான் அவுஸ்திரேலியாவின் கொஹதா பிரதேசம் (Kokatha nation). இது தெற்கு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ளது. பிரித்தானியா மேற்கொண்ட அணுவாயுத பரிசோதனைகளால் அவர்களின் வழ்விடங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளன.

எமது பூர்வீக நிலங்களில் இருந்து நாம் நிரந்தரமாக பிரிந்துள்ளோம், எனினும் சிலர் அதற்கு அருகில் வாழ்கின்றனர் அவர்கள் அதன் பாதிப்புக்களையும் சுமக்கின்றனர் என கூறுகின்றார் அந்த பிரதேசத்தின் பெண் ஒருவர்.

எமது குழந்தைகளுக்கோ அல்லது பேரப் பிள்ளைகளுக்கோ நாம் வாழ்ந்த மண்ணும், எமது வழிபாட்டு தலங்களும், தென்மையான இடங்களும் தெரியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அணுவாயுத பரிசோதனைகளிலும், மக்களின் மீதான இனத்துவேசம் வெளிப்பட்டுள்ளது. பூர்வகுடிகளை அழிக்கும் திட்டமும் இடங்களை தெரிவு செய்வதில் பின்னிருந்தன என்பதும் உண்மையானதே.

அணுவாயுதப் பரிசோதனைகாலனித்துவ அரசுகளால் இந்த மக்கள் விலங்குகள் போல பயன்படுத்தப் பட்டிருந்தனர். இது தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பசுபிக் தீவுகளைச் சேந்த மக்களாவார்கள். தாம் புற்றுநோய் உட்பட பல நோய்களினால் பாதிக்கப் பட்டதாக பாதிக்கப்பட்ட மக்களின் குழுவினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த தீவுகளில் 300 இற்கு மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தன.

அதாவது தமது நாடுகளை தவிர்த்து தம்மால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் அல்லது வேறு பிரதேசங்களில் தான் இந்த நாடுகளால் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. எனவே தான் இந்த பரிசோதனைகளும் கூட ஒரு வகையான இனஅழிப்பாக பார்க்கப் படுகின்றது.

1991 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 430,000 மரணங்கள் இந்த கதிர் வீச்சக்களால் நிகழ்ந்ததாக International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தனது அணுவாயுத அணுவாயுத தடை உடன்படிக்கைக்கு ரஸ்யாவையும், சீனாவையும் உடன்பட வைப்பதற்காக மீண்டும் அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக 2020 ஆம் ஆண்டு மிரட்டியிருந்தார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிறம். ஆனால் இந்த அறிவிப்பு என்பது மேலும் புதிய வகையான அணுவாயுதங்களை பரிசோதிக்கும் வழியை ஏனைய நாடுகளுக்கு திறந்துவிடும் என்பதுடன், சீனா இந்தியா போன்ற நாடுகள் தாம் ஆதிக்கம் செலுத்த முயலும் நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அதனை மேற்கொள்ள முயற்சிக்கலாம்.

தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழ் மக்களின் நிலங்களையும், அவர்களின் வாழ்விடங்களையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு பயன்படுத்தும் இலங்கை அரசு சீனாவின் பரிசோதனைக்காக வடக்கில் உள்ள தீவகப் பகுதிகளையோ அல்லது கிழக்கில் உள்ள பிரதேசங்களையோ வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் மக்கள் வாழமுடியாத பகுதிகளாக மாற்றம் பெறும் தமிழர் தாயகம்.

எனவே உலக அரசியலிலும், பிராந்திய அரசியலிலும் தமிழ் மக்கள் கவனம் செலுத்துவதும், உலகின் நகர்வகளை உன்னிப்பாக கவனிப்பதும், பூகோள அரசியல் மாற்றங்களை உள்வாங்குவதுடன், தம்மை அதில் அதில் இணைத்துக் கொள்வதும் தான் அவர்கள் தம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஏது நிலைகளை ஏற்படுத்தும்.

1 COMMENT

Leave a Reply