முல்லைத்தீவு மாவட்ட கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம் ஏற்பாடு

521 Views

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான இடம் ஒன்று இன்று (02) அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், மாவட்ட மருத்துவமனையில் உடல்கள் தேங்கிக் காணப்படுகின்றன. வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத அறையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்ட உடல்களை அடக்கம் செய்வதற்கான ஒரு இடம் முதற்கட்டமாக அமைய வேண்டும் என்ற மாவட்ட அரசாங்க அதிபரின் திட்டமிடலில், அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு.உமைமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முதற்கட்டமாக கூட்டு கள ஆய்வினை மேற்கொண்டு, இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று  ஈடுபட்டிருந்தனர்.

தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கு அருகில் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதாகவும் முதற் கட்டமாக ஒன்றரை ஏக்கர் வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தருவதாக வனவளத் திணைக்கள அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளார்கள்.

குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் உடலங்களை எரிப்பதற்கு ஏற்ற வகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் இதற்கான நிதி உதவிகளை  நலன் விரும்பிகள் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்பதாகவும் தெரியவந்துள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply