2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா

வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் வினோத உத்தரவுகளை பிறப்பித்து எப்போதும் பரபரப்பை கிளப்பக் கூடியவர். ஊடகங்கள் கூட கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியப் பின்னர் தான் அங்கு செய்திகளை வெளியிட முடியும்.

இந்நிலையில், வடகொரியாவில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வடகொரியாவில் நிலவும் அடக்குமுறை தொடர்பாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை பின்பற்ற தடை உள்ள நிலையில், சுமார் 70 ஆயிரம் பேர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்தினர் கையில் பைபிள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் கையில் பைபிள் வைத்திருந்ததற்காக 2 வயது சிறுவனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 70,000 பேரின் நிலை மிக மோசமாக உள்ளது எனவும் அவர்கள் உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.