நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழுவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச நிர்வாகம்,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை (29) ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் கூடினர். இதன் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு,வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு குறித்து கலந்துரையாடின.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச, அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன அதிகாரிகள், மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படாத காரணத்தால் தோற்றம் பெற்றுள்ள அசௌகரியங்கள், நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள், ஆகியவற்றை வெவ்வேறாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுப்பதற்கு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு தேவையான ஆலோசனைகள் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு ஊடாக வழங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியிருந்தது.
விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களை நிபந்தனைகளில் அடிப்படையில் மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொண்டுள்ள போது ஒருதரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் (262 பிரிவு) 53 அ (1) (ஆ) ஆகிய அத்தியாயங்களுக்கு அமைய வாக்கு பதிவு செய்யும் போது கை விரலில் மை பூசுவது ‘பொருத்தமான அடையாளம்’என கருதப்படுகிறது.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில்; உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் 76அ அத்தியாயத்தின் பிரகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ‘பொருத்தமான அடையாளம்’என்பதற்கு 53அ(3)(ஆ) அத்தியாயத்துக்கு அமைய’ஏதாவதொரு குறியீட்டில் அடையாளமிடல்’தொடர்பில் வர்த்தமானி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.