அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டீசெரோத் (54) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகேமன் (71), ஜார்ஜ் நாகல் (73) ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
மனித மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. கடந்த 2005-ம் ஆண்டில் ஆப்டோஜெனடிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகல் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்க தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பார்க்கின்சன், கை-கால் வலிப்பு, அல்சைமர், மனச்சோர்வு உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த நோய்களை இந்த தொழில்நுட்பம் மூலமும் குணப்படுத்தவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டீசெரோத் முதல்முறையாக ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். ஒற்றை செல் பாசியில் காணப்படும் ஒளியை உணரும் திறன் கொண்ட சேனல்ரோடாப்சின் என்ற புரதத்தை அவர் பிரித்தெடுத்தார். மரபணு பொறியியல்
மூலம் அந்த புரதத்தை எலியின் மூளையில் செலுத்தி மூளை நரம்புகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். இதேமுறையில் மனிதர்களின் நரம்பு செல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார்.
ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகல் ஆகியோரும் ஆப்டோஜெனடிக்ஸ் முன்னோடிகளாக விளங்குகின்றனர். மூன்று விஞ்ஞானிகளும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சூழலில் ஆப்டோஜெனடிக்ஸதொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருப்பதால் மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
அக். 6-ம் தேதி இயற்பியல், 7-ம் தேதி வேதியியல், 8-ம் தேதி இலக்கியம், 9-ம் தேதி அமைதி, 12-ம் தேதி பொருளாதாத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. வரும் டிசம்பர் மாதம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுகள் வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வழங்கப்படும். 24 காரட் தங்கத்துடன்கூடிய பதக்கம், பட்டயம் மற்றும் ரூ. 11.44 கோடி பரிசுத் தொகை ஆகியவையும் அளிக்கப்படும்.



