**மண்ணுக்குள் விதையான மாவீரர்களைக் கண்ணுக்குள் வைத்து வழிபடும் நாள்: கார்த்திகை 27** – பா. அரியநேத்திரன்

“மாவீரர் நாள் கார்த்திகை 27” என்பது உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற நாள். அது ஈழ விடுதலைப் போரின் ஈகம், வீரம் வெளிப்படுத்திய உன்னத நாள். 1982 கார்த்திகை 27இல் தமிழீழ விடுதலைப் புலிக ளின் முதலாவது போராளியான யாழ்ப்பாணம் வடமராட்சி கம்பர்மலையைச் சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் எனும் இயற்பெயரையும், சங்கர் என்ற இயக்கப் பெயரையும் கொண்ட மாவீரன் வீரச்சாவைத் தழுவிய நாளே மாவீரர் நாளாகும்.
அவர் வீரச்சாவைத் தழுவி சரியாக ஏழு வருடங்கள் கடந்த நிலையில், இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் இடம்பெற்ற காலத்தில்தான் முதலாவது மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 அன்று வன்னி நிலப்பரப்பின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
முதலாவது விடுதலைப் புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27”ஐ மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றினார். 1989இல் 1307 மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவியிருந்தனர்.
அந்த முதலாவது மாவீரர் நாள் உரையில் தலைவர் வே. பிரபாகரன் கூறியது:
“எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவுகூரும் முகமாக இந்த மாவீரர் நாளை முதல் முறையாக இன்று ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படைவீரர்களின், பாதுகாப்புக்காகப் போரிட்ட படைவீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச் சாவடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பது வழக்கம்.
ஆனால், 1989இல் இந்த வருடத்திலிருந்து வீரச்சாவடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவுகூர்ந்து அந்த நாளையே ‘மாவீரர் நாள்’ ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளோம். அதற்கு இன்னு மொரு காரணமும் உண்டு. எங்களது விடுதலைப் போரா ளிகளில் முதலாவதாக வீரச்சாவடைந்த ‘சங்கரின்’ நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப் படுத்தியுள்ளோம்.
அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள், இப்படிப்பட்டவர்களைத் தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஒரு நோக்கத்துடனும் இந்த நாளை நாம் நினைவுகூர முடிவு செய்துள்ளோம்.” என அந்த உரையில் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
1989 கார்த்திகை 27 தொடக்கம் 2008 கார்த்திகை 27 வரை விடுதலைப் புலிகளின் தலைவர் 20 மாவீரர் தினங்க ளில் பிரதான சுடர் ஏற்றி மாவீரர் தின உரை நிகழ்த்தியுள்ளார்.
2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் போர் மௌ னித்த பின்னர், 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2026 கார்த்திகை 27 வரை 17 வருடங்களாக மாவீரர் நாள் வணக்கம் தலைவரின் உரையின்றி பொதுமக்களாலும், முன்னாள் போராளிகளாலும், உணர்வுள்ள தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்களாலும் வடகிழக்கில் உள்ள இராணுவம் இல்லாத துயிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் தொடர்ச்சியாக மாவீரர் நாள் எழுச்சியாகச் செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல் புலம்பெயர் தேசங்கள், மத்திய கிழக்கு நாடுகள், தமிழ்நாடு உட்பட உலகத் தமிழர்கள் வாழும் இட மெல்லாம் தொடர்ச்சியாக மாவீரர்களை நினைவுகூர்ந்து இந்த நாள் இடம்பெற்று வருகிறது.
வடகிழக்கில் 2008 வரை 27 துயிலும் இல்லங்கள் இருந்தபோதும், இறுதியுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட் டத்தில் மேலும் 06 துயிலும் இல்லங்கள் புதிதாக ஏற்படுத்தி, மொத்தமாக 34 துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லங்களில் விதைக்கப்படாமல் கரும் புலிகளாகக் கடல், தரைகளில் வீரகாவியமான மாவீரர்களின் கல்லறைகளும் துயிலும் இல்லங்களில் நினைவுக் கற்களாக நடப்பட்டும் இருந்தன.
2006 ஜூலை 26இல் திருகோணமலை மாவட்டத் தில் மாவிலையாற்றில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் தொடங்கி, 2009 மே 18 வரை வடக்கு, கிழக்கில் இருந்த அனைத்து துயிலும் இல்லங்களில் இருந்த கல்லறைகளையும் இராணுவத்தினர் உடைத்து சேத மாக்கியதுடன், துயிலும் இல்லங்களில் படை முகாம்களாகச் சில துயிலும் இல்லங்களில் இராணுவம் இப்போதும் நிலைகொண்டுள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லங்களின் விவரம்:
வடமாகாணத்தில் துயிலும் இல்லங்கள்:
விசுவமடு – 2728 கல்லறைகள்.
முள்ளியவளை – 2575 கல்லறைகள்.
கிளிநொச்சி – 1963 கல்லறைகள்.
வன்னிவிளாங்குளம் – 856 கல்லறைகள்.
ஆலங்குளம் – 663 கல்லறைகள்.
முழங்காவில் – 959 கல்லறைகள்.
ஆட்காட்டிவெளி – 660 கல்லறைகள்.
பண்டிவிரிச்சான் – 272 கல்லறைகள்.
அளம்பில் – 147 கல்லறைகள்.
உடுத்துறை – 214 கல்லறைகள்.
கோப்பாய் – 1832 கல்லறைகள்.
சாட்டி – 154 கல்லறைகள்.
கொடிகாமம் – 968 கல்லறைகள்.
எள்ளங்குளம் – 795 கல்லறைகள்.
ஈச்சங்குளம் – 707 கல்லறைகள்.
மணலாறு – 81 கல்லறைகள்.
டடிமுகாம் – 90 கல்லறைகள்.
கிழக்கு மாகாணத்துத் துயிலும் இல்லங்கள்:
தரவை – 2452 கல்லறைகள்.
தாண்டியடி – 485 கல்லறைகள்.
வாகரை கண்டலடி – 284 கல்லறைகள்.
மாவடி முன்மாரி – 62 கல்லறைகள்.
கஞ்சிகுடிச்சாறு – 686 கல்லறைகள்.
ஆலங்குளம் – 262 கல்லறைகள்.
பெரியகுளம் – 65 கல்லறைகள்.
தியாகவனம் – 35 கல்லறைகள்.
இந்த 26 துயிலும் இல்லங்களின் கல்லறைகள் விவரம் 2005 நவம்பரில் விடுதலைப் புலிகள் மாவீரர் பணி மனையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மொத்தம் இருபதாயிரம் (20,000) கல்லறைகள் விவரம் அந்தக் குறிப்பில் காணப்பட்டன. அதன்பின்னர் மேலதிகமாக இறுதிப்போர் வரை யும் 08 துயிலும் இல்லங்கள் இருந்தன.
அவை:
சுதந்திரபுரம்,
தேவிபுரம்,
இரணைப்பாலை,
ஆனந்தபுரம்,
ஆனந்தபுரம்,
இரட்டைவாய்க்கால்,
முள்ளிவாய்க்கால் கிழக்கு,
மணலாறு கோடலிக்கல்.
மொத்தம் 34 துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் வித்துடல் கள் விதைக்கப்பட்டன. 2006 தொடக்கம் 2009 மே 18 வரை துயிலும் இல்லங் களில் விதைக்கப்பட்ட மாவீரர்கள் எண்ணிக்கை (கல்லறை கள்) தொடர்பான விவரம் கிடைக்கவில்லை.
கடந்த 17 ஆண்டுகளாகத் துயிலும் இல்லங்களில் நினைவுகள் படையினரின் கெடுபிடிகள் மத்தியிலேயே செய்யப்பட்ட வரலாறே காணப்பட்டது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் மஞ்சள், சிவப்புக் கொடிகளைக் கட்டவிடாமல் தடுக்க ஏற்பட்டன. ஆனால், அந்தத் தடைகள், இராணுவ அச்சுறுத்தல் கள் இருந்தபோதும் அவைகளுக்கு முகங்கொடுத்து துயிலும் இல்லங்களில் நினைவுச் சுடர்கள் கார்த்திகை 27ஆம் நாள் மாலை 06.05 மணிக்கு ஏற்றப்பட்டதே வரலாறு.
எதிர்வரும் 2026 நவம்பர் 27 (கார்த்திகை 27) வழமைபோன்று உணர்வுபூர்வமாக மக்கள் திரண்டு சகல துயிலும் இல்லங்களிலும் மண்ணிற்காய் உயிர்நீத்த மாவீரர்களுக்குத் தீபம் ஏற்றி வணங்குவார்கள்.
தேசியத் தலைவர் இறுதி மாவீரர் நாளான 2008 கார்த்திகை 27இல் அவர் கூறிய இறுதிப் பகுதி:
“தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிர மாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.” இதுதான் அவருடைய 20ஆவது மாவீரர் நாள் இறுதி உரை. தேசியத் தலைவர் 1989 கார்த்திகை 27இல் முதலாவது மாவீரர் தின உரையில் தொடங்கி, 2008 கார்த்திகை 27இல் ஆற்றிய முடிவு உரையையும் ஈழத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் இணைந்து எமது தேச விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதையே ஆழமான கருத்தாகக் கூறியுள்ளார் என்பதே உண்மை. இனவிடுதலைக்காகப் போராடி ஆகுதியாகிய மாவீரர்கள் அனைவரையும் நினைவுகூருவது எல்லாத் தமிழர்களுடைய கடமையும் உணர்வுமாகும்.