5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாக தகவல்

Titan submersible incident 2023 : டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5  பணக்காரர்களும் உயிரிழப்பு.. நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதா.? என்னாச்சு?

வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஆடம் ஜான், “டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் நீரில் மூழ்கக்கூடியவை என்று நம்பப்படுகிறது. கடலில் டைட்டன் வெடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அமெரிக்க கடற்படை கடலுக்குள் ஏதோ வெடிப்பு ஏற்பட்ட சத்தத்தை கேட்டது.

அந்த சத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் தனது பயணத்தை தொடங்கிய சில மணி நேரத்தில் மேற்பரப்புடன் இருந்த தகவல் தொடர்பு துண்டானதும் கேட்டதாக நம்புகிறோம். டைட்டனின் பாகங்களை ரிமோட் மூலம் நீருக்குள் இயங்கும் மீட்பு இயந்திரம் கண்டறிந்தது. அதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து சுமார் 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த ஐந்து பேரும் மெய்யான சாகச விரும்பிகள் என ஓசன்கேட் நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் இங்கிலாந்து கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால்-ஹென்றி நர்ஜோலெட், ஓசன்கேட் சாகச பயணத்தை நடத்தும் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பைலட் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் நீர்மூழ்கி வெடித்த காரணத்தால் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு பயணத்தை ஒழுங்கு செய்த நிறுவனமும் தேடுதலில் ஈடுபட்டிருந்த மீட்பாளர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.