வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மேலாதிக்கம் தீவிரம்-வினோ எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார்கள்.

இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பௌத்த மேலாதிக்கம் செயற்படுவதால் நீதி கட்டமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஐக்கிய நாடுகள் மனித53 ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகின்றது.மனித உரிமைகள்  பேரவையின்  பிரதி ஆணையாளரின் உரையில் இலங்கை தொடர்ந்தும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தாமல் தண்டனையில் இருந்து விடுபடும் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படாமல், அலட்சியமாக செயற்படுகிறது என்று சுட்டிக்காட்டி கண்டித்துத்துள்ளதை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

சர்வதேச விசாரணை பொறிமுறை விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை ஏமாற்றுமாக இருந்தால் அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அகப்படுவதை தடுக்க முடியாது என்பதனையும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகளை நிறைவேற்றாது இலங்கை  இருக்குமாக இருந்தால் அதற்கான தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அதற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி அதற்கு பதிலளிக்கையில் இங்கே அனைத்தும் சுமுகமாக நடைபெறுகின்றது என்றும் இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளில் 98 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆனால் வன்னியில் 98 வீதமான காணிகள் இன்னும் இராணுவத்திடமே இருக்கின்றன.

சிறியளவிலான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மக்கள் இன்னும் மீளவும் குடியேறாது தவித்துக்கொண்டுள்ளனர். அரச படைகள் தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வசனத்தில் அங்கே இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி உரையாற்றும் போது  பொய்களையே கூறுகின்றார். அதேபோன்று ஜெனிவாவில் உள்ள  இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியும் பொய்களையே கூறுகின்றார். எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையகத்தையோ, சர்வதேச சமூகத்தை எந்த வகையிலும் ஏமாற்ற முடியாது என்பதனை கூறுகின்றேன் என்றார்.