இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்

532 Views

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம்

பகுதி 1

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முதல் பகுதி

கேள்வி:
1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அறியத்தாருங்கள்.

உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களுக்கு ஒருவிளக்கம் ஒன்றை தர விரும்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் நான் பணியாற்றியதால், அந்த நேரம் யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியே தகவல் தரமுடியும்.

பதில்:
இன்றைய சூழலில் முள்ளிவாய்க்காலுக்கு முன் தான் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின் வருகின்ற செய்திகள், ஊடகச் செய்திகள், விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தேசியத் தலைவர் இருந்த போது இருந்தது தான் தமிழீழ விடுதலைப் புலிகள். வரலாறுகளைத் தனிநபர்கள் மாற்றியமைப்பதும், கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் இருந்து கொண்டு அவர்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், தியாகத்தின் வரலாற்றையும், மாபெரும் தலைவனின் தியாகத்தையும் தங்களுடைய அமைப்பாக மாற்றி, வலம் வருவதையும், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், இணையவழி ஊடகங்கள் என்று சொல்லி, அவர்கள் புது வரலாறை எழுதுவதும், தங்களுடைய நேரத்தை ஊடகங்களுக்குக் கடத்துவதற்காக ஊடகவியலாளர்களை அணுகி, சம்பந்தமில்லாமல் மாபெரும் இயக்கத்தின் தியாக வரலாறுகளை திரிபுபடுத்தி, அவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே ஒப்புவிப்பதும், பின்னர் நாங்கள் சொல்கின்றோம். மக்களே நீங்களே கேட்டு தெளிவடையுங்கள் என்று சாட்டாகச் சொல்லிவிட்டு நகர்வதும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் மக்களுக்கு 2009உடன் தேசியத் தலைவரின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. அந்த இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கும் போதுதான் அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அப்போது நாங்கள் யாழ்.மாவட்ட அரசியல் பிரதிநிதிகளாக வேலை செய்தோம். இந்த வகையில் இதைப் பற்றி சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

1989ஆம் ஆண்டு எப்படி இந்த மாவீரர் நாள் உருவானது. அதற்கு முன்னர் ஏன் உருவாகவில்லை என்பதற்கான விடையை நான் உங்களுக்குத் தருகின்றேன். 1982ஆம் ஆண்டு சத்தியநாதன் ரமரணமடைந்த பின்னர் 1989வரையில் ஆயிரத்திற்குட்பட்ட போராளிகள் ரமரணமடைந்திருக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் வீரமரணமடைந்த போராளிகளின் உடல்கள் எங்கள் கைக்குக் கிடைக்கும் போது,  அந்தந்த மாவட்ட தளபதிகள், அந்தந்த மாவட்ட அரசியல்துறைப் போராளிகள் எல்லோரும் வீரமரணமடைந்த போராளியின் பெற்றோரிடம் அவரின் உடல்களை இறுதி நிகழ்விற்காக அவர்களிடம்  ஒப்படைப்போம். அந்த நடைமுறை தொடர்ந்தும் பேணிக் கொண்டு வரப்பட்டது. 1989இல் யாழ். மாவட்டத்தில் குறிக்கப்பட்ட இடங்களில், குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தனர். இலங்கை-இந்திய இராணுவங்கள் நடத்திய போரிலே அவர்கள் எல்லோரும் சிதைவடைந்து, தலைவர் உட்பட எல்லோரும் காட்டிற்குள் சென்று தான் ஒரு கெரில்லாப் போராட்டத்தை நாங்கள் மீண்டும் ஆரம்பித்தோம்.

யாழ். மாவட்டத்தில் நீர்வேலி, பொக்கணை, குப்பிளான், மாதகல், யாழ். நகரம் போன்ற இடங்களில் 3 போராளிகள், 5 போராளிகள் எனத்தான் போராளிகள் நின்றார்கள். இதே போன்று வடமராட்சி, தென்மராட்சியிலும் நின்றார்கள். மீதிப்பேர் வவுனியாக் காட்டிலும் இதே பாணியில் குறிக்கப்பட்ட போராளிகள் நின்றார்கள். காடுகளில் வீரமரணமடையும் போராளிகளை காடுகளிலே புதைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. உடல் எங்களிடம் கிடைக்குமிடத்து, நாங்கள் காடுகளில் புதைப்போம்.  அங்கு எரிக்க முடியாது. எரித்தால், அங்கு எழும் புகை மூலம் நாங்கள் இருக்கும் இடத்தை இராணுவத்தினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால், புதைத்தோம்.

நாங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக வைத்திருந்த யாழ். மாவட்டத்திலே நாங்கள் கெரில்லாப் போராட்டத்தையும், இராணுவத்தை தடுத்து நிறுத்தி, சண்டை செய்யும் போதும், பொலிஸ் நிலையங்கள், இராணுவக் காவலரண்களைத் தாக்கும் போது நாங்கள் கைப்பற்றும், போராளிகளின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.  பெற்றோரின் விருப்பப்படி அவர்கள் தங்கள் சமயக் கிரியைகளைச் செய்து, தங்கள் மயானங்களில் உடல்களை எரிப்பார்கள்.  நாங்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்டும் வரையில் இப்படியான நடைமுறையே இருந்தது. காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்படுவது, எழுதப்படுவது என்பது கவலைக்குரிய விடயம். ஆரம்பத்தில் நாங்கள் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை  Body என்றுதான் சொல்வோம். பின்னர்தான் வித்துடல் என்று சொல்லும் வழமை வந்தது. இதேபோன்று நாங்கள் சண்டைசெய்யும் போதும், கால்களில் செருப்பு இல்லாமல் சண்டை செய்தோம். சாரத்துடன் சண்டை செய்தோம். இவை எல்லாம் அன்றைய காலத்தில் வந்த பத்திரிகைகளில் வந்த செய்திகள், புகைப்படங்களில் ஆவணங்களாக இருக்கின்றன.  எழுதுபவர்கள் சரியானதை, சரியான முறையில் தகவல்களைச் சேகரித்து, அந்தக் காலப் பத்திரிகைகளை   nulagam.com இல் பார்த்து எழுதலாம். எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் புதிய கருத்துக்களை, புதிய வடிவில், தாங்கள் பக்கத்தில் நின்றவர்கள் போல் எழுதுவது தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

1990இல் இந்திய இராணுவம் வெளியேறி நாங்கள் வந்த போதும், இதே நடைமுறைதான் இருந்தது. பெற்றோரிடமே உடல்களை ஒப்படைத்து, அவர்கள் சமயக்கிரியைகள் செய்து உடல்களை அடக்கம் செய்தனர். அதற்குரிய பதிவுகளும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகளாக உள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு எழுதுபவர்களும், ஆய்வு செய்பவர்களும் எழுத வேண்டும என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கேள்வி:
www.noolaham.org பற்றி எங்களுக்கு அறியத்தருவீர்களா?

பதில்:
இணையத்தில் நீங்கள் தேடினால், முழுப் பத்திரிகைகளையும், முழுமையாகப் பெறமுடியா விட்டாலும், ஈழநாதம், ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு, உதயன் போன்ற அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எல்லாமே இருக்கின்றன. அவற்றில் குறித்த காலப்பகுதிகளை நீங்கள் பார்க்கலாம். சில பத்திரிகைகள் தற்போது பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களில் பத்திரிகைகள் இருக்கலாம். அல்லது கொழும்பு ஆகாஷ் என்ற ஆவணக்காப்பகத்தில் இருக்கின்றது.

ஆய்வுகள் செய்பவர்கள்தான் அல்லது பிழையாகத் தகவல்களைக் கொடுப்பவர்கள் தான் ஒரு வரலாறை நீங்கள் நினைத்தபடியும், உங்கள் கட்டுரைகளுக்கு ஏற்றபடியும், கேள்வி ஞானத்திலும், கற்பனையிலும் எழுதுவது தான் இங்கே கொடுமையாக உள்ளது. வரலாற்றாசிரியர் என்று சொல்பவர்களும் துயிலும் இல்லம் சம்பந்தமாக  2019ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் பிழையாக கட்டுரை எழுதியதை நான் வாசித்தேன். அது என்னுடன் சம்பந்தப்பட்டது. நான் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கும் போது நடந்த வரலாறு.

அண்மையில் முகநூல் ஒன்றில் காட்டில் விதைத்த மாவீரர்களின் வித்துடல்களை எடுத்துக் கொண்டு வந்து தான் தேசியத் தலைவர் துயிலும் இல்லங்களை அமைத்தார் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். இது திட்டமிட்டு செய்யப்படுகின்றதா? சிலவேளைகளில் எங்களுக்காக வேலை செய்பவர்களே பிழையான கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு சூழ்நிலையும் இருக்கின்றது.

தேசியத் தலைவர் இருக்கும் போது, தேசியத் தலைவராலும், தளபதிகளாலுமே ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கைக்குரியவர்கள் நியமிக்கப்படுவர். இந்திய இராணுவம் போனதன் பின்னர், முதலாவது அரசியல் பொறுப்பாளராக டொமினிக் அண்ணா வந்தவர். இரண்டாவதாக இளம்பரிதி வந்தவர். மூன்றாவதாகத்தான் நான் வந்தேன். பின்னர் நான்காவதாக மீண்டும் இளம்பரிதி வந்தார். இந்திய இராணுவத்தின் பின்னர் 2009 வரை இந்த மூன்று பேராலும் தான் யாழ்.மாவட்ட அரசியல் கட்டமைப்பு வழிநடத்தப்பட்டு வந்தது. தேசியத் தலைவர், பிரதித் தலைவர், தளபதி ஆகிய மூன்றுபேருடைய நெறிப்படுத்தலின் கீழ்தான் நாங்கள் மூன்றுபேரும் இயங்கினோம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் அப்படித்தான் இயங்கினார்கள்.

கேள்வி:
1982இல் முதல் மாவீரர்களின் ஈக வரலாறு தொடங்கியிருந்தாலும்கூட, 1989ஆம் ஆண்டு தான் மாவீரர்நாள் என்பது நினைவுகூரப்பட்டது.  இந்த 7 வருடகால இடைவெளி பற்றி எங்களுக்கு விளக்கம் தருவீர்களா?

பதில்:
ஆரம்பத்தில் கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த எங்கள் போராட்டம், பிற்காலத்தில் பொலிஸ் நிலையத் தாக்குதல்கள், இராணுவ முகாம் மீதான தாக்குதல்கள் மூலம் யாழ். மாவட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் கொடுத்து, அவர்கள் சமய முறைப்படி அவர்களின் ஊர்களில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இயக்க மரபு என்பது ஆரம்பிக்கப்படவில்லை. அந்த நேரம் அந்தச் சிந்தனையில் போராட்டம் நடத்தவும் இல்லை. அதுதான் உண்மை.

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது காலத்திற்குக் காலம் எங்கள் நடவடிக்கைகளில், கொள்கைகளில் மீளாய்வு செய்து, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். இது தான் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்காக இருந்தது. 1989இல் மாவீரர் நாள் என்ற ஒரு நாளை தேசியத் தலைவர் அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களுக்கும் அறிவிக்கிறார். முதல் மாவீரரான சத்தியநாதன் வீரமரணமடைந்த நாளை மாவீரர் நாளாக கொண்டாடும்படி அறிவிக்கிறார். அந்த நேரத்தில் நான் யாழ். மாவட்டத்தில் இருந்தேன். அப்போது யாழ். மாவட்டத்தில் பொட்டம்மான் இருந்தார். குறிக்கப்பட்ட இடங்களில் குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தோம்.  இதை தேவர் அண்ணா எழுதிய புத்தகத்திலே பார்த்தோம்.

விமானப்படைக்குப் பொறுப்பாக சங்கர் அண்ணா இருந்தார்.  அந்தக் காலத்தில் வெளிநாடுகளில் நடந்த போர்களைப் பற்றியும், போர் நடவடிக்கைகளைப் பற்றியும் தலைவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, பிரிட்டனில் நடக்கின்ற பொப்பி தினம் பற்றி தலைவருக்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், தலைவருக்கு சிந்தனைக்கு இந்த மாவீரர் நாள் என்பது வந்தது.

முல்லைத்தீவில் 1 – 4 என்ற காட்டில் தேசியத் தலைவரும், வவுனியாவில் 3 -7 காட்டில் பிரதித் தலைவரும் இருந்தனர். அங்கிருந்து தான் அரசியல், இராணுவ நிர்வாகங்கள் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ். மாவட்டத்தில் பொட்டம்மானுக்கு தகவல் வருகின்றது. யாழ். மாவட்டத்தில் நின்ற பல்வேறு போராளிகள் இன்றும் உலகப்பரப்பில் வாழ்கின்றோம். பொட்டம்மானுக்கு வந்த அறிவித்தலை எங்களுக்குச் சொல்கிறார். அந்த வேளையில் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக நான் இருந்தேன். வீரமரணமடையும் போராளிகளுக்கு சுவரொட்டி அச்சிடும் பணியை நான் செய்தேன்.  திலீபன் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளியிடுவர்.  இவற்றிற்காக மனோகரா திரையரங்கிற்கு அருகிலிருந்த அச்சகமும், நாவலர் வீதியில் தவம் அண்ணர் என்பவரிடம் அச்சிடும் பணிகளை மேற்கொண்டோம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும், இந்தியாவிலிருந்தும் சுவரொட்டிகள் வரும். வீரமரணமடைந்த போராளிகளின் வீரவணக்கம்,  அவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களால் தான் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொண்டாடுங்கள் என்ற அறிவித்தல் தேசிய மட்டத்தில் வந்துவிட்டது. பொட்டம்மான் என்னைக் கூப்பிட்டு, ஒரு  சுவரொட்டி வெளியிட வேண்டும். ஒரு வசனம் எழுதும்படி என்னைக் கேட்க, நான் “உங்கள் சுவடுகளில் தொடரும் எங்கள் பாதங்கள்” என்று ஒரு வசனத்தை எழுதினேன்.  பொட்டம்மான் ஒரு திருத்தம் செய்வோம் எனக் கூறிவிட்டு, கறுப்பு மையை கொண்டுவரும்படி கூறி, சூட்டின் காலின் அடிப் பாதத்தில் மையைத் தடவி அதை சுவடு என்ற சொல்லிற்கு பதிலாக வைத்து, சுவரொட்டியை அடித்து விடுவம் என்று கூறுகிறார்.  இது நல்லது என்று அதில் நின்ற போராளிகள் சொன்னோம். சூட்டின் கால் சிறியதாக உள்ளதால், ஜக்சன் என்ற போராளியின் காலில் மையைத் தடவி அந்த பாதத்தை நாங்கள் சுவரொட்டியாக ஒட்டினோம். ஜக்சன் என்ற அந்தப் போராளி இன்று வெளிநாட்டில் வாழ்கிறார். அவரையும் தேடிக் கண்டுபிடித்து அவரிடமும் நேர்காணல் ஒன்றை எடுப்பது வரலாற்றிற்கு சான்றாக இருக்கும்.

நாங்கள் புத்தூரில் நிற்கும் போது அங்கு மாவீரர் நினைவாலயம் என்ற மண்டபம் ஒன்றைக் கட்டினோம். அதன் திறப்பு விழாவை நடத்தும் போது, இந்திய இராணுவம் அதை தடுப்பதற்காக அங்கே வந்தது. அப்போது அப்பகுதிவாழ் மக்கள் வயோதிபர்கள், இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்று அந்த இராணுவத்தை தடுத்து நிறுத்தி, இது எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் செய்கிறோம் அவர்களின் நினைவாக நாங்கள் செய்வதை நீங்கள் தடுக்கக்கூடாது என்று சொல்லி அந்த இராணுவத்தினரை திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த இராணுவத் தளபதி மனமிரங்கித் திரும்பிப் போய்விட்டார் என்பது தான் உண்மை. அதேவேளை தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் மாவீரர்களின் படங்களைத் தூக்கி எறிந்ததும், அவர்களுக்காக சோடனை செய்ததை அகற்றியதுமான வரலாறுகள் உள்ளன. ஆகவே இந்த வரலாறுகள் தான் யாழ். மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு நடந்தது.  அந்த நினைவு மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்.மாவட்டத்தில் இவ்வாறுதான் நடந்தது. மற்றைய மாவட்டங்களில் இதேபோன்றுதான் நடந்தது. இது விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது.

தொடரும்….

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் - ராஜன்

2 COMMENTS

  1. […] இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் பகுதி 1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முதல் பகுதி  […]

Leave a Reply