மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானக்குமார்

ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம்

மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம்

தாயகத்தில் மாற்றுத் திறனாளிகள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றார்கள். இப்போதைய தலைமுறையால்தான் இவர்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனைத்து உறவுகளும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தின் மூலமாகத்தான் இந்த மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட முடியும்” என்று கூறுகின்றார் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பி.ஞானக்குமார். உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

கேள்வி: மாற்றுத்திறனாளிகள் நாள் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்த உங்களுடைய பார்வை என்ன?

பதில்: மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அவர்களை அழைத்து கௌரவப் படுத்துவதுடன் தமது கடமை முடிவடைந்து விட்டதாக சமூகம் கருதுகின்றது. உண்மையில் அது மட்டும் எமது பிரச்சினையல்ல. பொருண்மிய, பண்பாட்டு தடைகளைத் தாண்டிச் செல்வதற்கு இவர்களுக்கு இந்தச் சமூகம் ஒத்துழைக்க வேண்டும். இதுதான் மாற்றுத் திறனாளிகள் தினத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். சமூகத்திலே நாங்கள் பல இடர்களைச் சந்திக்கின்றோம். அவற்றைத் தாண்டிச் செல்வதற்கான வழிகள் காணப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதைய தலைமுறையால்தான் இவர்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனைத்து உறவுகளும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தின் மூலமாகத்தான் இந்த மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட முடியும். இவ்வாறான ஒரு பொறிமுறையை அமைக்காவிட்டால், இவர்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது மிகவும் கவலையாக இருக்கும்.

கேள்வி: வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த அமைப்பை எதற்காக உருவாகினீர்கள்? அதன் செயற்பாடுகள் என்ன என்பதை கூறமுடியுமா?

பதில்: வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை 2013ஜுலை மாதம் 22 ஆம் திகதி நாம் ஆரம்பித்தோம். 2009க்கு பின்னர் பார்வையற்றோரை தாங்குவதற்கு, அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதற்கு யாருமற்ற ஒருநிலை இருந்தது. அந்த வேளையில் இந்தச் சங்கத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவதாக, போரின் போது பார்வை இழந்த எமது உறவுகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சில நிறுவனங்களை நாம் அணுகிய போது, அந்த நிறுவனங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளையில், மருத்துவ ரீதியாக பராமரிக்க முடியாத சூழலில் எமது நான்கு உறவுகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

இது போன்ற காரணங்கள் ஒருங்கிணைந்த ஒரு அமைப்புக்கான தேவையை எமக்கு உணர்த்தியது. இதனால்தான் நாம் வடக்கு கிழக்கில் உள்ள உறவுகளை இணைத்து வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் என்ற பெயரிலான இந்த அமைப்பை உருவாக்கினோம். கிளிநொச்சியிலிருந்து அது இயங்கி வருகின்றது. வன்னி என்பது ஒரு பிரதேசத்தை மட்டும் குறிப்பிடவில்லை. வடக்கு, கிழக்கில் இப்போது 278 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இதில் நேரடியாகப் பார்வை இழந்தவர்களும் இருக்கின்றார்கள். பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இந்த நிறுவனத்துக்கு ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்குநர் சபை இருக்கின்றது. இதில் பொருளாளர் மட்டும்தான் பார்வை உள்ளவர். மற்ற அனைவரும் பார்வையற்றவர்கள். இதனைவிட பொதுச் சபை உள்ளது. காப்பாளர் சபை ஒன்றும் உள்ளது. எமது நிதி விவகாரங்களையும் ஏனைய முக்கிய விடயங்களையும் இவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இவற்றைவிட, எதிர்ச்சபை ஒன்றையும் அமைத்துள்ளோம். 3 பேரைக் கொண்ட இந்த சபை, இயக்குநர் சபையின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். இவ்வாறு நேர்த்தியான ஒரு யாப்பின் அடிப்படையில்தான் எமது சங்கம் செயற்படுகின்றது.  பார்வையற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், போக்குவரத்து மற்றும் உரிமைகள் போன்ற விடயங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி: போரினால் விழிப்புலன் அற்றவர்களின் நலன்களுக்காக அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்வாறான உதவிகள் கிடைத்துள்ளது?

பதில்: எமது அமைப்பை உருவாக்கி எட்டு ஆண்டுகளைக் கடந்திருக்கின்றோம். இந்த எட்டு ஆண்டுகளுக்குள் போரால் பாதிக்கப்பட்டு விழிப்புலன் இழந்தவர்களைப் பொறுத்தவரையில், சமூகசேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவுதான் கிடைக்கிறது. அதுவும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இதனைவிட, அரச தரப்பிலிருந்து எந்தவிதமான உதவிகளும் கிடைப்பதில்லை. எமக்கு அலுவலகத்தை அமைப்பதற்காக இப்போதுதான் ஒரு காணி கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்த எமது உறவுகளின் உதவியால்தான் அது சாத்தியமானது.

கேள்வி: விழிப்புலன் அற்றவர்களைப் பொறுத்தவரையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே தமது பார்வையை இழந்தவர்கள். அவர்களின் கல்வி வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் உள்ளனவா?

பதில்: 2009 க்கு முன்னர் பார்வை இழந்தவர்களும் இருக்கின்றார்கள். அதற்குப் பின்னர் பார்வை இழந்தவர்களும் இருக்கின்றார்கள். 2009 க்கு முன்னர் எமக்கு நல்ல ஒரு சூழல் இருந்தது. கிளிநொச்சியில் நவம் அறிவுக்கூடம் என்பது பார்வை யற்றவர்களுக்கு உதவும் வகையில் செயற்படுத்தப்பட்டது. அங்கு அனைத்து வகையான கல்விச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது.

மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிடஉண்மையில், இன்று இல்லாத வசதிகளையும், வாய்ப்புக்களையும் நாம் அப்போது பெற்றிருந்தோம். இப்போது வருகின்ற புதிய நவீன கருவிகள் அனைத்தும் அப்போதே எம்மிடம் காணப்பட்டன. அதன் மூலமாகக் கல்விச்செயற் திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. முக்கியமாகச் சொல்லவேண்டியது என்னவென்றால், 2000 ஆம் ஆண்டிலிருந்தே எமக்கு கணினி கற்பிக்கப்பட்டது. 2002 இல் அதற்கான முறையான கணினிக் கல்வியை நாம் பெற்றுக் கொண்டோம். அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒருவர் மூலமாக பார்வை யற்றவர்களுக்கான கணினிப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் மூலமாகப் பெற்றுக் கொண்ட அறிவு, அனுபவத்தின் மூலமாக இப்போது இன்றுள்ளவர்களுக்கு பல நிறுவனங்களின் உதவியுடன் பயிற்சிகளைக் கொடுக்கின்றோம்.

3 பிரிவுகளாக இந்த கணினிப் பயிற்சிகளை நாம் வழங்குகின்றோம். பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாக வெளியேறியவர்களுக்கு ஒரு பிரிவாக பயிற்சியளிக்கிறோம். இரண்டாவதாக, உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருப்பவவர்களுக்காக மற்றொரு பிரிவு. இதன்மூலம் இவர்கள் தமது அடுத்த கட்டத்துக்கான தேடல்களை இணையத்தின் மூலமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். மூன்றாவதாக, போரால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கான கணினிப் பயிற்சி. இதன் மூலமாக சுயதொழில் முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த முடியும்.

இறுவட்டுக்களைப் பதிவு செய்து விற்பனை செய்தல் போன்றவற்றை இவர்களால் செய்யக்கூடியதாக இருக்கும். தற்போது கொரோனா இடர் காரணமாக இவற்றை இடை நிறுத்தியிருக் கின்றோம். ஆனால், இதனைத் தொடர்ந்து முன்னெடுப்போம். போரின் போது முழுமையாகப் பார்வையை இழந்த பலர் வேறுவிதமான பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். இவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெறக்கூடிய வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது சிரமமானதாக இருக்கின்றது. இவ்வாறானவர்களுக்கு ஒரு தொகைப் பணத்தை அவர்களுடைய பெயரில் நிலையான வைப்பிலிட்டு மாதாந்தம் அதன் மூலமாக அவர்கள் ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையிலான திட்டம் ஒன்றைச் செயற்படுத்துகின்றோம். 32 பேருக்கு இவ்வாறான திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றோம். புலம்பெயர்ந்த எமது உறவுகள் தாயக மேம்பாட்டு அமைப்பின் மூலமாக இதனைச் செயற்படுத்தியுள்ளார்கள்.

கேள்வி: இவ்வாறான திட்டங்களின் மூலமாக பார்வையிழந்தவர்கள் தமது வாழ்வாதாரத்தை தாமே தேடிக்கொள்ள முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்: ஆம்! தாயக மற்றும் புலம்பெயர்ந்த மக்களோடு ஆலோசனை நடத்தப்பட்டு ஒரு குழுவின் ஊடாக சிறந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு இதனைச் செயற்படுத்திக்கொண்டு வருகின்றோம். இந்தத் திட்டத்தின் அடிப்படை யில்தான் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவர்களாக 104 பேரை இனங் கண்டுள்ளோம். அதன் தொடர்பாக வரக் கூடிய வெற்றிகள், தோல்விகளைக் கண்காணித்து அவர்களை முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொறிமுறை ஒன்றை அமைத்திருக்கின்றோம். இந்தப் பொறிமுறையின் மூலமாக அவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நம்புகிறோம்.

கேள்வி: இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகள், பயிற்சிகள் உங்களுக்குத் தேவை?

மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிடபதில்: அனுபவம் உள்ளவர்களுடைய பயிற்சிகள் போன்றன எமக்குத் தேவையாக இருக்கின்றது. இவற்றை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதிலும் தாயக மேம்பாட்டு அமைப்பும், ஏனைய அமைப்புக்களும் முயற்சிகளை முன்னெடுக்கின்றன. பயிற்சிகள் எமக்கு நிச்சயமாகத் தேவை. அதற்காக அனுபவம் உள்ளவர்களை நாம் அணுகிக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறானவர்கள் இருந்தால், அவர்களுடைய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பார்வையற்ற பலர் படித்து பட்டதாரிகளாகி இருக்கின்றார்கள். கணினித் துறையிலும் படித்துள்ளார்கள். அவ்வாறானவர்களின் அனுபவத்தை நாம் மற்றவர்களுக்கும் பெற்றுக் கொடுக்க முடியும். அதற்குப் பெருமளவு நிதி தேவையாக இருக்கின்றது. ஏற்கனவே ஆறு மாத கால கணினிப் பயிற்சி நெறி ஒன்றை நடத்தியிருந்தோம். அது போன்ற பயிற்சிகளை நடத்துவதற்கான திட்டங்கள் உள்ளது. அதற்கு நிதிதான் தேவையாக இருக்கின்றது.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் - வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானக்குமார்