காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சட்டத்தரணி ரட்ணவேல்

395 Views

காணாமலாக்கப்பட்டோர் விடயம்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்

சட்டத்தரணி ரட்ணவேல்

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு சில சலுகைகளைக் கொடுத்து சமரசம் செய்யக்கூடியதொன்றல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் சட்டத்தரணி  ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இலக்கு மின்னிதழிற்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வி,

கேள்வி: பன்னாட்டு மனித உரிமைகள் நாள் இம்மாதம் 10ம் திகதி கொண்டாடப்படவிருக்கின்ற பின்புலத்தில் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்:  சர்வதேச மனித உரிமைகள் நாளில் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு அரசாங்கங்களும் தங்கள்  மக்கள் சார்பாக மனித உரிமைகள் விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இது மனித உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் சந்தர்ப்பமாகவே அமையக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில்   அரசாங்கத்தின்  மனித உரிமை நடவடிக்கையை மீளாய்வு செய்கின்றபோது அது எப்பொழுதும் மோசமானதாகவும், மிக குறைவானதாகவுமே இருக்கின்றது. மிக அப்பட்டமான மனித உரிமை மீறல்களை  அரசாங்கம் சகித்து கொண்டிருப்பது மட்டுமல்ல,  அரசாங்கத்தின் முகவர்களே இந்த மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பின் புலத்தை பார்க்கும் போது ஏனைய வருடங்களைவிட இந்த வருடம் மிகவும் மோசமானதாகவே கருதவேண்டும். ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பலவகை கோணத்தில் காணப்படுகின்றன.

மிகச் சமீபத்தில் இலங்கை மனித உரிமை செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கை காவல்துறை அலுவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஸ்கொட்லாந்து அரசாங்கம் மேற்கொண்டிருந்த பயிற்சி நடவடிக்கைகளை ஸ்காட்லாந்து அரசாங்கம் நிறுத்தியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.  அதுமட்டுமல்ல இந்த பயிற்சிகளை நிறுத்துவதற்கான காரணம் என்னவென்றால் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அது சம்பந்தமான எவ்வித நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. எனவே அதற்கான பயிற்சிகளை கொடுப்பதை தாங்கள் நிறுத்தியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இது அரசாங்கத்திற்கு விடப்படும் ஒரு பாரதூரமான செய்தியாகவே கருதப்படவேண்டும் . ஏனென்றால்  ஸ்கொட்லாந்து அரசாங்கம் பயிற்சிகளை நிறுத்தியதற்கு முன்னதான ஒருவாரத்தில் தான் சர்வதேச உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதாவது இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எவ்வித அக்கறைகளையும் காட்டவில்லை என்ற பின்புலத்தை வைத்து பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன . எனவே இப்போதாவது அந்த அரசாங்கம் செய்தியை கவனத்திலெடுத்து தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இது போன்ற பல நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தினரால் தொடரப்படும் என்பது புலனாகின்றது.

கேள்வி: 2009 நடைபெற்ற போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தற்போதைய இலங்கை அரசு எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது?

பதில்: இந்தப் போரில்  காணாமல் ஆக்கப்பட்டோர், இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்தோர்  விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இவை யாவற்றிலும் அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டிய நிலையிலிருக்கின்றது.

காணாமலாக்கப்பட்டோர் விடயம்ஏனென்றால் அவர்கள் சரணடைந்தது மற்றும் காணாமலாக்கப்பட்டது எல்லாமே அரசாங்கத்தின் பிரிவினராகிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் என பல்துறை சம்பந்தப்பட்டவர்கள். எனவே இதற்கு முற்று முழுதாக அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும் ஆனால் அந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் தட்டிக்கழித்து கொண்டிருக்கின்றது.

மேலும் அந்த குற்றங்களை புரிந்தவர்கள் அந்த நேரத்திலும் சரி, இப்போதும் சரி அரசாங்கத்தின்   பெரும்பொறுப்புக்களிலிருப்பவர்கள் அல்லது பொறுப்புக்களி லிருப்பவர்களுக்கு மிக நெருங்கிய  சம்பந்தப்பட்டவர்கள்.

எனவே இவர்களை காட்டிக்கொக்காமல் இருப்பதற்கும், இவர்களை பாதுகாப்பதற்கும் தான் அரசாங்கம் காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் பற்றிய எந்தவிதமான ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றது. அதே சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிலையத்தையும் அதாவது OMP அலுவலகத்தையும் அவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமிக்காமல் தங்களுடைய அடிவருடிகளை நியமித்து அந்த அலுவலகத்தை சரியான முறையில் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையையும்  மேற்கொண்டிருக்கிறார்கள்.

காணாமலாக்கப்பட்டோர் விடயம்இந்த காணாமல் ஆக்கப்பட்டவருக்கான  அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் ஆணையாளர்களாக தொடக்கத்தில் பணியாற்றியவர்கள் மக்களிடம் அந்த விடயத்தை கொண்டுசென்று ஓரளவேனும் தங்களது கடமைகளை உணர்ந்ததாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தற்போது பதவிக்கான காலம் முடிந்த பின்னர் இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணையாளர்கள் முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருப்பவர்கள். அதன் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர். அரசாங்கத்தின் ஒரு சார்பாளராக பதவிக்காலத்தில் பதவியிலிருந்தபோது கருதப்பட்டவர். எனவே அவரின் நடவடிக்கை எப்படியிருக்குமென நாங்கள் கூறத்தேவையில்லை .

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அசமந்தமாக இருப்பது மட்டுமல்ல  அந்த விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தையே காணாமலாக்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றன. இதை  தற்போதைய அரசாங்கம்  சரி,   முன்னைய அரசாங்கமும் சரி எந்த நடவடிக்கை களையும் எடுக்கவில்லை. எனவே எந்த அரசாங்கம் வந்தபோதிலும்  இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் காப்பாற்றுவதற்காகவே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்து (2015)  குறுகிய காலத்தில்   பயங்கரவாத நடவடிக்கையை நாங்கள் ஒழிக்கப்போவதில்லை, பதவிவிலக்கப் போவதில்லை அவர்கள் தங்களுடைய பணிகளை செய்துகொண்டிருக்க வேண்டும் அதே சமயம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  உயிருடன் இல்லை என மனிதாபிமானமற்ற முறையில் கூறியிருந்தார். அதைத்தான் தற்போது பதவியிலுள்ளவர்களும் பின்பற்று கின்றார்கள்.

எனவேதான் சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய கட்டத்தில் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள்.

அத்துடன்    எதற்காக காணாமல் போனார்கள்?, எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? அவர்களுடைய கதி என்ன? என்ற  உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் தான் வேறு ஏதாவது கோரிக்கைகள் என அந்த உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் எங்களுக்கு அவர்கள் காணாமலாக்கப்பட்டமுறை, அதற்கு யார் பொறுப்பாளர்கள், பொறுப்புகூறல் விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மிகமிக ஆக்ரோஷமாக கடுமையாக இருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தை பூசிமெழுகுவதென்பது அரசாங்கத்தினால் இயலாத காரியம். எனவே இந்த போராட்டம் தொடரும். அந்த நடவடிக்கைகள் அரசாங்கம் நினைப்பதுபோல் அல்லது அரசாங்கத்தை சார்ந்தவர்கள் நினைப்பதுபோல் ஒரு சில விடயங்களை கொடுத்து சமரசம் செய்யக்கூடிய ஒரு விடயமல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும் .

கேள்வி: மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்து செயற்படுகின்ற இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம் எப்படிப்பார்க்கிறது?

பதில்:   ஏனைய நாடுகளின்  பன்னாட்டு சமூகத்தில் இலங்கை அரசாங்கத்தை சேர்த்து கொள்ளக் கூடிய தகுதி வாய்ந்தவர்கள் அல்ல என்ற பட்டம் ஏற்கனவே இருபது முப்பது வருடங்களாகவே இலங்கைக்கு  இருக்கிறது.

மனித உரிமைகள் மட்டுமல்ல பொருளாதார கொள்கைகள், அரசு சம்பந்தமான மக்களை கையாளுகின்ற விதம் அந்த மாதிரியான விடயங்கள் எல்லாவற்றிலும் இலங்கை ஒரு பின்தங்கிய  நாடாகவே, பின்தங்கிய அரசாங்கமாகவே எத்தனையோ தசாப்தங்களாக நிலையினை பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

எனவே அதையிட்டு பன்னாட்டு   சமூகம் புதிதாக ஒன்றையும் கூறுவதற்கு இல்லை. ஆனால் தற்போது பெரிய பாரதூரமான  படுகுழியில் ,பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற இந்த நாட்டை யாரும் தீண்டுவதற்கு தயாராக இல்லை. எந்த ஒரு நாடோ ஸ்தாபனமோ அவர்களுக்கு உதவியளிக்க கூடிய விருப்பத்தை கொண்டிருக்க வில்லை.

ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்கள் இவற்றை கவனத்தில் கொண்டு இத்தகைய ஒரு அரசாங்கத்தை அவர்கள் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

மேலும் மேலும் அதிகமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலையே இலங்கை அரசாங்கம் தங்கி நிற்கின்றது. இந்த நாட்டின் வளங்களை எல்லாம் அவர்களை சூறையாடவிட்டு மிக மிக மோசமான நிலையில் மக்களை தள்ளுவதற்கான நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. அதனை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றது. இது தான் இப்போதைய நிலை.

  ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் - சட்டத்தரணி ரட்ணவேல்

1 COMMENT

  1. […] காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் சட்டத்தரணி ரட்ணவேல் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு சில சலுகைகளைக் கொடுத்து சமரசம் செய்யக்கூடியதொன்றல்ல என்பதனை அரசாங்கத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.  […]

Leave a Reply