அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுங்கள் என அகதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறும் அமைச்சர்

81 Views

Refugee Bandesh அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுங்கள் என அகதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறும் அமைச்சர்

அவுஸ்திரேலியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என அனுப்பப்பட்ட கடிதங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்கடிதங்கள் தனக்குத் தெரியாமல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்  கிளாரி ஓ’நீல் தெரிவித்திருக்கிறார். 

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இந்த கடிதங்கள் 490 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருபவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

இந்த வகையிலான கடிதங்களை எதிர்காலத்தில் தவிர்க்கும்படி தனது துறையினருக்கு தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.  ஈரானிலிருந்து வெளியேறி பத்தாண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த குர்து அகதியான பர்ஹத் பந்தேஷ் இப்படியான ஒரு கடிதத்தை பெற்றிருக்கிறார்.

“அவுஸ்திரேலியாவில் குடியமருவது என்பது தங்களுக்கு ஒரு விருப்பத்தேர்வு ஆகாது. நீங்கள் புலம்பெயர்வதற்கான வேறு வாய்ப்புகளை முயற்சிப்பீர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம், மனுஸ் தீவு, மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாம், மெல்பேர்ன் ஹோட்டல் தடுப்பு என சிறைப்படுத்தப்பட்டிருந்த குர்து அகதியான் பந்தேஷ், இக்கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

வேறு சில அகதிகளுக்கு, “அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவது தொடர்பாக நீங்கள் (சம்பந்தப்பட்ட) துறையுடன் ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என கடிதம் சென்றிருக்கிறது.   அவுஸ்திரேலிய உள்துறையின் ஆட்கடத்தல் கொள்கை அமலாக்க பணிக்குழுவின் முதல் உதவி செயலாளர் அலானா சுல்லிவானால் இக்கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

“இக்கடிதம் எனது அறிவுறுத்தலினால் அனுப்பப்படவில்லை. சொல்லப்போனால், இக்கடிதம் எந்த வகையிலும் பொருத்தமானதாகவோ அல்லது ஆக்கபூர்வமானதாகவோ  இருப்பதாக நான் கருதவில்லை. குறிப்பாக இந்த விஷயம் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொடர்பானது,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் விளக்கமளித்திருக்கிறார்.

அவுஸ்திரேலிய தேர்தலுக்கு முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் ஒழிக்கப்பட்டு தகுதியுடைய அகதிகளுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்படும் என தொழிற்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொழிற்கட்சி ஆட்சி நடந்து வரும் இச்சூழலில் அந்த மாற்றங்கள் பந்தேஷ் போன்ற அகதிக்கு பொருந்தாது என அவுஸ்திரேலிய உள்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற பல அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக சிக்கியிருக்கின்றனர்.

Leave a Reply