ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான இலங்கையர்கள் நால்வரும் முழுமையான விடுதலையை அனுபவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

74 Views

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை அனுபவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால்   வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை அனுபவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக நால்வரின் விருப்பத்திற்கு அமைய தீர்மானிக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமிழக அரசிடமும் இந்திய மத்திய அரசிடமும் வேண்டுகோள் விடுகின்றது.

இவர்கள் தங்கள் வாழ் நாளின் பெரும் பகுதியை சிறையில் அனுமதித்து விட்டார்கள். சிறை வாழ்வில் மரணத்தோடு போராடி மரண வாயிலையும் எட்டிப் பார்த்தவர்கள் இவர்கள்.

விடுதலை நீதி சார்ந்த விடை மட்டுமல்ல. அது வாழ்வு சார்ந்ததுமாகும். இவர்களுக்கு எஞ்சி இருக்கின்ற வாழ்வை சுதந்திரமாக அனுபவிக்க இடம் அளிக்க வேண்டும்.

ஆதலால் சிறப்பு முகாம் வாழ்வில் இருந்தும் விடுவித்து சமூகத்தில் ஒருவராக வாழ்வதற்கு இவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.

மேலும் இவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப இலங்கையிடம் ஒப்புதல் பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதனை நிறுத்தி அவர்கள் விருப்பிற்கு இடம் அளித்து வாழ்வு பாதுகாப்பு கொடுப்பது காந்திய நாட்டின் தார்மீக கடமையுமாகும்.

தமிழக அரசு இலங்கையிலிருந்து கடந்த காலங்களில் அகதியாக சென்றோரையும் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாழ்வு பாதுகாப்பு தேடி சென்றோரையும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்நால்வரையும் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாழ இடமளிப்பது மனிதாபமான தன்மையை உறுதி செய்வதாக அமையும்.

இவர்களின் விடுதலை தொடர்பில் ஆர்வம் காட்டிய புலம்பெயர் அமைப்புகள் இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் புகலிடம் விடயத்தில் ராஜதந்திர ரீதியாக செயல்பட்டு இந்தியா மறுக்குமேயானால் இவர்களுக்கான புகலிடத்தை ஆயத்தப்படுத்துமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு. வேண்டுகோள் விடுக்கின்றது.

Leave a Reply