அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது குடியரசுக்கட்சி

அமெரிக்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் சபையையும், அரச தலைவர் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சி செனட் சபையையும் கைப்பற்றியுள்ளதால் எதிர்வரும் இரண்டு வருடங்கள் அமெரிக்கா அரசியல் மிகவும் குழப்பம் நிறைந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சி பெற்றுள்ள இந்த வெற்றி என்பது எதிர்வரும் வருடங்களில் பைடன் மேற்கொள்ளும் திட்டங்களில் தலையீடுகளை மேற்கொள்ளவும், நிர்வாகங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவும் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளது. இறுதியாக வெளிவந்த தேர்தல் கணிப்புக்களின் அடிப்படையில் பெரும்பான்மையை பெறுவதற்கான 218 ஆசனங்களை குடியரசுக்கட்சி பெற்றுள்ளது.

குடியரசுக்கட்சியின் வெற்றியை தொடர்ந்து கட்சியின் தலைவர் கெவின் மகதிக்கு பைடன் கடந்த புதன்கிழமை (16) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் பேச்சாளராகவும் கெவின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை போன்ற ஒரு அதிகாரபகிர்வு அரசியலுக்கு வொசிங்டன் சென்றுள்ளது. பணவீக்கம், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றம் போன்ற நெருக்கடிகளே குடியரசுக்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறும் அரசதலைவர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் அரச தலைவர் டொனால்ட் டிறம் தெரிவித்துள்ளார்.