எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்- அரசாங்கத்திடம் தவராசா கலையரசன் கோரிக்கை

234 Views

மரணித்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்துகின்ற  கடமையைச் செய்கின்ற சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த காலத்தில் இருந்தாற்போல் ஒரு அடக்குமுறையான நிலைமை தற்போது இல்லாதுவிட்டாலும், இதே நிலைமை தொடர்ச்சியாக நிலவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

மாவீரர் நினைவேந்தலுக்காக அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணியினை மேற்கொள்ளும் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்திலே இருக்கும் ஒரே ஒரு மாவீரர் துயிலுமில்லமாக இந்தக் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் திகழ்கின்றது. எங்களுடைய தமிழ்த் தேசியத்திலே பற்றுக் கொண்ட, தேசியத்தோடு பயணிக்கின்ற அனைவரும் கட்சி பேதங்களின்றி இந்த இடத்தை துப்பரவு செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது மரணித்த மாவீரர்களுக்குச் சுடரேற்றி எங்களது நன்றிக் கடனை அகவணக்கமாகச் செலுத்துகின்ற எங்களுடைய பண்பாட்டு ரீதியான கலாச்சாரத்தை தமிழ் மக்கள் காலாகாலமாகச் செய்து வருகின்றார்கள். ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவ்வாறான வணக்க நிகழ்வுகளைச் செய்ய முடியாதளவிற்கு அப்போதிருந்த அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போது அந்தச் சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

உண்மையிலே எமது உயிர்களுக்குரிய நன்றிக்கடனைச் செய்ய வேண்டியது எமது தலையாய கடமை. இந்த நினைவேந்தல் நிகழ்வினை எமது மக்கள் உணர்வு பூர்வமாகத் தீபமேற்றி வணக்கம் செலுத்தி அனுஸ்டித்து வருகின்றார்கள். அந்த அடிப்படையில் இந்தக் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயலுமில்லத்தில் மாவீரர் நிரைனவேந்தலைச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலத்தில் இருந்தாற்போல் ஒரு அடக்குமுறையான நிலைமை தற்காலத்தில் இல்லாதுவிட்டாலும், இதே நிலைமை தொடர்ச்சியாக நிலவ வேண்டும். அத்துடன் எமது இந்த இடங்கள் தொடர்ச்சியாகப் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியதும், மாவீரர்களை நினைவுகூருகின்ற இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

எனவே மரணித்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்துகின்ற அந்தக் கடமையைச் செய்கின்ற சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனை மறுதளிக்கின்ற செயற்பாடுகளை கடந்தகால அரசாங்கம் போல மேற்கொள்ளக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply