திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை முதலீட்டுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அரசு முழுமையாக நிராகரித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடக வியலாளர் சந்திப்பில், திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை முதலீட்டுக்காக அமெரிக்க நிறுவன மொன்றுக்கு வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“திருகோணமலையில் அமெரிக்காவுக்குக் காணி எதுவுமே வழங்கப்படாது. இந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக்கருத்தை அவர் முழுமையாக நிராகரித்துள்ளார். அவ்வாறு எந்தவொரு வேலைத் திட்டத்தையும் அரசு முன்னெடுக்க வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.