இலங்கையில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்று உச்சம் பெற்றுள்ளது. நேற்று மட்டும், வடக்கு மாகாணத்தில் 237 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் முழுமையான அறிக்கை வெளியாகாததால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
இதேசமயம் 30 வயது கர்ப்பவதி பெண் உட்பட யாழ்ப்பாணத்தில் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அத்துடன், கிளிநொச்சியில் தேனீகொட்டி இறந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று எழுமாற்றாக அன்ரிஜென் சோதனை நடத்தப்பட்டது. இதில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார தரப்புகள் தெரிவித்தன. இதேசமயம், நேற்று யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 8 பேருக்கும், அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் 6 பேருக்கும் உருத்திரபுரம் பிரதேச மருத்துவமனையில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 94 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட அன்ரிஜென் சோதனையில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று, யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 36 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 9 பேருக்கும், சங்கானை பிரதேச மருத்துவமனையில் 3 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வேலணை மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், தெல்லிப்பழை 5 பேருக்கும், பருத்தித்துறை மருத்துவ அதிகாரிபிரிவில் 3 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒருவருக்கு மென 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிற மாவட்டங்களில் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் 10 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையில் தெரிய வந்தது. இதேசமயம், இந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட அன்ரிஜென் சோதனை அறிக்கைகள், பிற ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகள்வெளியாகவில்லை. இதனால் தொற்றுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
5 பேர் உயிரிழப்பு யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று கர்ப்பவதி பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார். வடக்கில் தொற்றால் உயிரிழந்த கர்ப்பவதி பெண் இவராவார். தவிர, ஊர்காவற்றுறையில் 84 வயது பெண்ணும், மானிப்பாய் – நவாலியில் 68 வயது பெண்ணும், வல்வெட்டித்துறையில் 78 வயது பெண்ணும் என யாழ். மாவட்டத்தில் 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர். இதனால், யாழ். மாவட்டத்தில் கொரோனா மரணம் 145ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் தேனீகொட்டி உயிரிழந்தவருக்கும் கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.