மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன்

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா்.

கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன.

சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணியிலேயே அரசாங்கத்திற்கும் தமிழ் தலைமைக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இரண்டாம் கட்டத்திற்கு சென்றிருக்கின்றது. புதன்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஜனவரி மாதத்தில் தான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பினரும் தமிழரசு கட்சியினரும் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும், முன்னாள் வடமகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. இதனால் தமிழர் தரப்பில் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே பங்கேற்று இருந்தார்கள். இது உத்தியோகப்பற்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒரு பேச்சுவாா்த்தை என்று ஜனாதிபதி தரப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த சந்திப்புக்கான அழைப்பு அனுப்பப்பட்ட முறை குறித்தும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமிழ் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு நேரடியாக அனுப்பப்படவில்லை. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தாந்தன் ஆகியோருக்கு இந்தக் கூட்டம் தொடர்பாக சுமந்திரனே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். சுமந்திரன் மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்.

இருந்த போதிலும் இந்தக் கூட்டத்தில் முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சுமந்திரன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் தரப்பில் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த விடயத்தில் ஐந்து கைதிகளை ஜனவரி முதல் வாரத்தில் விடுதலை செய்வதற்கு இணக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனையவர்கள் தொடர்கள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருக்கின்றது. சில காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் தேசியப் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் பின்னர் அது குறித்து இறுதி முடிவு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் ஜனவரி 5ஆம் தேதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றும் சந்திப்பு இடம் பெறும்.

இவை தவிர அரசியல் தீர்வு முயற்சி தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனவரி 13ஆம் திகதியிலிருந்து நான்கு தினங்களுக்கு தொடா்ச்சியாக இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. அதாவது, பொங்கலுக்கு முன்னதாக முக்கியமான முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது எனக் காட்டிக்கொள்வதற்கு ரணில் விரும்புகின்றாா் என்பது தெரிகின்றது.

பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான சந்திப்புகளை அவசரமாக மேற்கொண்டு வருகின்றார்.

சமாதான தூதுவராக இலங்கைக்கு தான் வரவில்லை என அவர் தெரிவித்து இருக்கின்ற போதிலும் கூட பிரதான அரசியல் கட்சியுடன் பேச்சுக்களின் போது இன நெருக்கடிக்கான தீர்வு குறித்து அவர் முக்கிய கவனத்தை செலுத்தி இருந்தார். இது அவா் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு அனுசரணையாளராகச் செயற்படுகின்றாா் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாகத்தான் இருந்தது.  காலநிலை ஆலோசகா் சம்பந்தன், மனோ கணேசன் போன்றோருடன் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பொருளாதார ரீதியாக இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு இன நெருக்கடிக்கான ஏதோ ஒரு தீர்வை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, சா்வதேச நாணய நிதியம், மற்றும் புலம்பெயா்ந்த அமைப்புக்கள் போன்றன இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றன. நிதியை நாட்டுக்கு வரவளைப்பதற்கு ஏதோ ஒருவகையில் இனநெருக்கடி தீா்க்கப்பட்டு சுமூக நிலை உருவாகியிருப்பதாகக்காட்ட வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்குள்ளது.

இவ்விடத்தில் ரணில் விக்கிரமசிங்க இரண்டு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார். ஒன்று – சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வது. இரண்டு – தமிழ் தரப்புகளை பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டு வந்து அதனை முன்னெடுத்து செல்வது.  பொருளாதார நெருக்கடித் தீா்வுக்கு மட்டுமன்றி, ரணிலின் கனவாகவுள்ள அடுத்த ஜனாதிபதித் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவதற்கும் இந்த இரண்டும் அவருக்கு அவசியம்.

இந்த இரண்டையும் சமாளிப்பதற்கு தன்னால் முடியாது என்ற நிலைமையில்தான் சொல்ஹெய்மை அவா் களமிறக்கியுள்ளாா். உண்மையில் காலநிலை ஆலோசகர் என்ற பெயரில் இலங்கையில் அவர் மீண்டும் கால் வைத்திருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்கின்ற இந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை முன் வைப்பது அல்லது அந்த தீர்வுக்காக உதவுவதுதான் அவரது நியமனத்தின் நோக்கம்.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் இல்லை என ரணில் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாாா். மூன்றாம் தரப்பு என்றால் சிங்களக் கடும் போக்காளா்கள் குழம்புவாா்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தமிழ்த் தரப்பையும், சா்வதேசத்தையும் ஒரேயடியாகக் கையாள்வதற்கு இவ்விடயத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவா் தேவை என்பது ரணிலுக்குத தெரிந்தே இருந்தது. அதுதான் சொல்ஹெய்மை காலநிலை ஆலோசகா் என்ற பெயரில் களமிறக்க காரணம்.

சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ள பின்னணியில்தான் தமிழ் தரப்புடன் இரண்டாம் கட்ட பேச்சுக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க, அவசர அழைப்பை விடுத்திருந்தார். விரைந்து தீர்வொன்றை காண வேண்டும் என்பதிலும் அவர் அவசரம் காட்டுகிறார். சமாதான முயற்சிகள் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டும் நிலையில் அடுத்த நவம்பருக்கு பின்னா் திடீா் ஜனாதிபதித் தோ்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு ரணில் திட்டமிடலாம். இதன்மூலம் மக்கள் ஆணையுடன் அதிகாரத்துக்கு வந்து பிரச்சினையைத் தீா்த்துவைப்பதாக சொல்லி தமிழ் மக்களுடைய ஆதரவை அவா் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடுகின்றாா்.

சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புகள் பலவும் இலங்கைக்கான நிதி உதவிய வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்கும் பின்னணியில் இலங்கையில் ஒரு சமூகமான நிலைமை ஸ்திதமான அரசு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்காவுக்கு இருக்கின்றது. அதற்கான ஆலோசகராக மட்டுமின்றி அனுசரணையாளராகவும் எரிக் சொல்ஹெய்ம் செயல்பட்டு வருகின்றார் என்பதை கடந்த சில தினங்களாக அரசியல் அரங்கில் இடம் பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் சமாதான செயல்பாட்டாளராக பிரவேசித்த எரிக்சொல்ஹெய்ம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. சமாதான செயற்பாட்டாளர் என்ற முறையில் பிரதேசித்த சொல்ஹெய்ம் இறுதி போரின் போது இடம் பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூறவேண்எயவராகவும் இருக்கின்றாா்.

சொல்ஹெய்ம் இப்போது எவ்வாறான பாத்திரத்தை ஏற்று செயல்படுகின்றார் என்பது தெளிவாக தெரியாத போதிலும், தற்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் மதிநுட்பமாகவும், சிறந்த இராஜதந்திரத்துடனும் கையாள்வதன் மூலமாக மட்டுமே தாம் சாா்ந்த மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.