அணுவாயுதத்தை தயாரிக்கும் எந்த திட்டமும் ஈரானி டம் இல்லை நாம் அதனை அவர் களிடம் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பிரிவின் தலைவர் ரபேல் குறேசி அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கடந்த செவ்வாய்க்கிழமை(17) தெரிவித் துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மற்றும் படை அதிகாரிகள் மீது தாக்கு தலை நடத்தியிருந்தது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை அணுசக்தி மையத்தின் தலைவர் மறுத்துள்ளார். ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பும் கடந்த செவ்வாய்க் கிழமை(17) தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக் கும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்காவின் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் துல்சி கபாட் தெரிவித்திருந்தார். எனினும் அவரின் கூற்று தொடர்பில் தான் கருத்தில் எடுக்கப்போவதில்லை என ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும் குறேசி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துக் களை மறுதலித்துள்ளதுடன் தற்போது ஈரான் அணுவாயுதம் தயாரிக்கும் நிலையில் இல்லை எனவும், ஆனால் சில வருடங்களில் அது சாத்தியமாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வியாழக்கிழமை(19) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் மற்றுமொரு அணு சக்தி நிலையத்தை தாக்கியுள்ளது. எனினும் அங்கு அணுசக்திக்கான பார நீரை உற்பத்தி செய்வதனால் கதிர்வீச்சுக்கள் ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என ரஸ்யா எச்சரித்துள்ளது. ஈரானின் சில அணுசக்தி நிலையங்களில் தமது அதிகாரிகளும் பணியாற்றி வருவதாகவும், எரிசக்தி தேவைக்காக அணு சக்தியை பயன்படுத்தும் உரிமை ஈரானுக்கு உண்டு எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.