யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டது.
காணிகளை விடுவிக்க கோரி நேற்று முன் தினமும்(21) மயிலிட்டி சந்தியில் போராட்டம் நடைபெற்றது.
ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள் தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றாருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், முதியோர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பங்கு பற்றி இருந்தனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன என்று போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்று வரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களின் பலத்த ஆதரவை பெற்று அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை கடந்த பின்னும் பெரிய அளவில் காணி விடுவிப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகளை விடுவிக்காமல் வைத்திருக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.