வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை 5.30 அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இந்தப் பாதை எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
சுமார் 80 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அடர்ந்த காடு, மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளை கடந்து வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்கர்கள் கதிர்காமம் நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.



