நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது இரு கைதிகள் மரணமடைந்தமைக்கான பின்னணி குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. கைதிகள் இடமாற்றப்பட்ட சிறைச்சாலைகளுக்கு ஆணைக்குழு மேற்கொண்ட விஜயங்களின் போது, பல கைதிகள் காயமடைந்திருந்ததோடு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் தாமதிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சிகிச்சைத் தாமதங்கள் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக அமையலாம் என எச்சரித்துள்ள ஆணைக்குழு, அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. மேலும், கடந்த 7ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு முக்கியமான தருணத்தில் அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு ஆணைக்குழு தற்போது அழைப்பாணை விடுத்துள்ளது.
தற்போது சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்த விசாரணைகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரவில்லை எனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, விசாரணைகளின் முன்னேற்றங்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



