வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

778 Views

காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச தினம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 2010 ஆம் ஆண்டு 65/209 தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக அறிவித்தது. வலிந்து காணாமல் ஆக்கப்படுவதானது, அனைத்து நிலமைகளிலும் சர்வதேச மனிதவுரிமைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருப்பினும், உலகெங்கும் பல்வேறு அரசியல் போர்வைகளின் கீழ் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசுகளால் பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற போர்வையிலும், அரசு சார்பான ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று அதிகளவான காணாமற் போதல்கள் நடைபெறும் நாடுகளாக இராக், இலங்கை, குவாத்தமாலா, ஆர்ஐன்ரீனா, பெரு, கொலம்பியா மற்றும் பல ஆபிரிக்க நாடுகளும் இடம்பெறுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்இம் மாதம் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை சர்வதேச அளவில் காணாமற் போதல்கள் நடைபெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் காலப்பகுதியில் மிக அதிகளவில் காணாமற் போதல்கள் இடம்பெற்ற காரணத்தினால், மனித நேயத்துக்கு எதிரான குற்றச்செயல்களுள் ஒன்றாக கொள்ளப்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இது குறித்து விரிவாக கீழ்வரும் பத்திகளில் ஆராய்வோம்.

வழக்கறிஞர்கள், சாட்சிகள், அரசியல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் (Human Rights Defenders) குறிப்பாக காணாமற் போதலுக்கான ஆபத்தில் உள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றமையால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் அவர்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு, காணாமற் போனவர்கள் பற்றிய உண்மையை அறியும் உரிமையையும் இழக்கின்றனர். இன்றைய கோவிட் -19 தொற்றுநோய் பரவுகை, காணாமல் போனவர்களைத் தேடும் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளதுடன், வலிந்து காணாமல் போனவர்கள் குறித்தான விசாரணை முயற்சிகளையும் பெரியவில் பாதித்துள்ளதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் மன வேதனையையும் அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (The Convention for the Protection of all Persons against Enforced Disappearances -ICPPED) வலிந்து காணாமற் போனோர்கள் குறித்தான சர்வதேச அளவிலான விசாரணை முயற்சிகளை மேற்கொள்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் முக்கியமான ஓர் உடன்படிக்கையாக இருந்தபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசுகளின் அரசியல் விருப்பும் ஒத்துழைப்பும் இல்லாதவிடத்து, சட்ட நடைமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறன. இவ்வுடன்படிக்கையானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights-ICCPR) தன்னிச்சையான கைது மற்றும் காவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் சட்ட விதிகளை மேலும் விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. அரசின் முகவர்கள் அல்லது அரசின் அங்கீகாரம், ஆதரவு அல்லது ஒப்புதலுடன் செயற்படும் அமைப்புகள் அல்லது நபர்களால் சுதந்திரத்தை இழக்கும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என வலிந்து காணாமற் போவதை (Enforced Disapperance) வலிந்து காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை வரையறுக்கிறது.

இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29, 2021 | Weekly Epaper

வலிந்து காணாமல் போவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைத் தேடவும், குற்றவாளிகளை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும், தண்டிக்கவும் அரசுகள் தங்களின் கடப்பாட்டிலிருந்து விலகி நிற்கின்றமை; இதுகுறித்தான சட்ட நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் இது மிகவும் வெளிப்படையாகவே காணப்படுகின்ற ஓர் உண்மை.

காணாமல் போனவர் மற்றும் காணாமல் போனவர் இருக்கும் இடம் அல்லது நிலைமை குறித்த தகவல் இல்லாதது, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் பெரும்பாலானவர்கள் ஆண்களே. அவர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரே அல்லது முதன்மை ஊதியம் பெறுபவர்கள். காணாமல் போனவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது அவர்களின் அன்புக்குரியவர் எப்போதாவது திரும்புவாரா என்று தெரியாத உணர்ச்சி மற்றும் உளவியல் வேதனையுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மோசமான பொருளாதார சூழ்நிலைக்குத் தள்ளுகின்றது.

ஆண்கள் முதன்மையாக பாதிக்கப்படுவதால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவர்கள், மகன்கள் அல்லது சகோதரர்கள் குறித்து தகவல் மற்றும் நீதியைத் தேடுபவர்களாக மாறுகிறார்கள். பல நாடுகளில் இந்த சூழ்நிலைகளில், காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடமிருந்து தகவல்களைத் தேடுவதால் பெண்கள் பாதிக்கப்படுவதோடு சுரண்டலுக்கும் ஆளாகின்றார்கள். உண்மைக்கான தேடல் குறித்த அவர்களின் தொடர்ச்சியான பயணம் இறுதியில் அவர்களின் உயிருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு புலனாய்வு அமைப்புகளால் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிப்படையும் சந்தர்ப்பங்கள் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் பொதுவானதோர் விடயமாகவுள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதியும்வலிந்து காணாமல் போவதானது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது. போதுமான நிதி உதவியின்றி, போதுமான வாழ்க்கைத் தரம், சுகாதாரம் மற்றும் கல்விக்கான மனித உரிமைகள் பாதிக்கப்படுவதால், வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றமை ஓர் குடும்பத்தின் பாதுகாப்பிற்கான உரிமையை அரசு நேரடியாக மீறுகிறது.

பெரிய அளவில், கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல் போதல் பெரும்பாலும் ஒரு சமூகத்தில் கவலை மற்றும் பயத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பொதுச் செயல்பாடுகளில் அது ஏற்படுத்தும் உளவியற் தாக்கம், பல்வேறு மனித உரிமைகள், குறிப்பாக கருத்து சுதந்திரம், நம்பிக்கை, மற்றும் அமைதியான முறைகளில் போராடுவதற்கான சட்ட உரிமைகளை மறைமுகமாக நசுக்குகிறது. அரசியல் எதிரிகளுக்கு எதிராக வலுக்கட்டாயமாக காணாமல் போதல் பயன்படுத்தப்படும் போது, அது அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாட்டிற்கு எதிரான தடையையும் மீறுகிறது.

கடுமையான மனித உரிமை மீறல்

சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்பட்டு, சமூகத்திலிருந்து ‘காணாமல்’ வலிந்து ஆக்கப்பட்டதால், கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்கள் உண்மையில் அவர்களின் அனைத்து உரிமைகளையும் இழப்பதுடன், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கியவர்களின் தயவில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றமை கீழ்வரும் அடிப்படை மனித உரிமைகளை தொடர்ச்சியாக மீறுகின்றன.

  • சட்டத்தின் முன் ஒரு நபராக அங்கீகரிக்கும் உரிமை
  • சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கான உரிமை
  • சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடைமுறை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படாத உரிமை
  • காணாமல் போன நபர் கொல்லப்படும் போது வாழும் உரிமை
  • அடையாளத்திற்கான உரிமை
  • நியாயமான விசாரணை மற்றும் நீதி உத்தரவாதங்களுக்கான உரிமை
  • இழப்பீடு மற்றும் இழப்பீடு உட்பட ஒரு பயனுள்ள தீர்வுக்கான உரிமை
  • காணாமல் போன சூழ்நிலைகள் பற்றிய உண்மையை அறியும் உரிமை

மேலும் வலிந்து காணாமல் போதல் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மீறுகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் உதவிக்கான உரிமை மேலும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான உரிமை மீறப்படுகின்றன.

 ஜூலை 1, 2002 அன்று நடைமுறைக்கு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் (Rome Statute of the International Criminal Court) மற்றும் ஐநா பொதுச்சபையால் 20 டிசம்பர் 2006 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வலிந்து காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (International Convention for the Protection of All Persons from Enforced Disappearance) ஆகிய இரண்டும் பொது மக்களுக்கு எதிரான எந்தவொரு பரவலான அல்லது திட்டமிடப்பட்ட முறையில் தாக்குதலின் ஒரு பகுதியாக, வலிந்து காணாமல் போதல்கள் நிகழும் போது அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக (crimes against humanity)

 தகுதி பெறுகின்றமையை ஏற்றுக்கொள்கின்றன. இதனால் சர்வதேச சட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றமை சட்ட வரம்புகளுக்கு உட்பட்டது அல்ல. இது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான உரிமையை வழங்குகிறது, மேலும் அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போனது பற்றிய உண்மையையும் கோரி நிற்கின்றது.

இவ்வாறானதோர் பின்னணியில் இலங்கையில் வலிந்து காணாமல் போவதிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கான நீதியானது தனியே மனிதவுரிமைச் சட்டங்கள் குறித்ததாக மட்டமின்றி மனிதநேயச் சட்டங்களுடனும் தொடர்பு பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு இலங்கையானது இராக்குக்கு அடுத்ததாக மிகப் பெரியளவிலான வலிந்து காணாமல் போனவர்களுக்கான முறைப்பாடுகளைக் கொண்ட நாடாக ஐக்கிய நாடுகளின் செயற் குழு அணி (UN Working Group, WGEID) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 ஆக்கம்:

கணநாதன்

Master of International Relations

Geneva School of Diplomacy & International Relations

2 COMMENTS

Leave a Reply