வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 830 கிமீ தொலைவிலும் நிலவுகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில் வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையில், “தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.