இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள்: இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராக எந்த நாடும் தனது நாட்டை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தனது இந்திய விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி காரணமாக அதன் சொத்துக்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ வழங்கும் ஆபத்து இல்லை எனவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையில் குறிப்பாக சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கரிசனை அடைந்துள்ளது – குறிப்பாக சீனா வடபகுதி மீனவர்களை நெருங்குவது குறித்து கரிசனை கொண்டுள்ளது.
எனினும் இந்த அச்சங்கள் தேவையற்றவை என தெரிவித்துள்ள ஜிஎல்பீரிஸ், திருகோணமலை எண்ணெய் குத அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பெற்றுக் கொண்டுள்ளமை காரணமாக இரு நாட்டு உறவுகளும் மூலோபாய உறவுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுப்பாடுகள் உள்ள போதிலும் மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில்கொள்ளவேண்டும் தெரிவிக்கவேண்டும் என ஜிஎல்பீரிஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இந்த விவகாரம் இடம்பெறவுள்ளது.
தவறான அனுமானங்களின் அடிப்படையில் சீனா குறித்த கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சீனாவின் திட்டங்கள் காணப்படுகின்றது என்றால் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களும் காணப்படுகின்றன என மேலும் தெரிவித்துள்ளார்.