யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்- தமது குடி மக்களை வெளியேறச்சொல்லும் மேற்கு நாடுகள் 

யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்

யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்: யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.

ரஷ்யா யுக்ரேன் எல்லையில்  படையினரை குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, யுக்ரேன் மீது படையெடுப்பு நடந்தால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

படையெடுப்பதற்கான எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையால் ஏற்படக்கூடிய பயம்தான் எதிரிகளுக்கு தேவையாக கருதப்படுகிறது. இதற்கான நகர்வுகளாகத்தான் எல்லாம் நடந்து வருகிறது, என யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.யுக்ரேன் மீது எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்றும், வான்வழி குண்டுவீச்சுடன் அது தொடங்கலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ரஷ்யா,‌ இத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பரப்பப்படுகிறது என குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்நிலையில், யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன.

Tamil News