Home Blog Page 64

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன: இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த வகையில் மேலும் சில பொருட்களுக்கான வரியை எதிர்காலத்தில் குறைத்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சில பொருட்களுக்கான அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் தீர்வை வரி இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவுக்கு வருடத்துக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. அதேவேளை 450 பில்லியன் டொலருக்கு இறக்குமதிகள் இடம்பெறுகின்றன.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் அதேவேளை, சர்வதேச சந்தைக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்த வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.

கடந்த மாதங்களில் ஏனைய பிராந்தியங்களுக்கும் எமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 58 சதவீதமாகவுள்ளன. கடந்த 6 மாதங்களில் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன.

அத்தோடு எதிர்காலத்தில் இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்களுக்கு தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை. அந்த வகையில் சில பொருட்களுக்கான தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். மேலும் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தமிழ் மக்களுக்கு தீர்வு கோரி வலுப்பெறும் போராட்டங்கள்!

திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி “அனுர – மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி” மற்றும் “ஐ.எம்.எஃப். மரணப் பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டம் இன்று (02) நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுதர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் எனும் வலியுறுத்தியிருந்தனர்.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்: நீதி அமைச்சர் கருத்து

இலங்கையில் சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

‘நீதியை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்க, அவர்களுக்கு பொதுச் சட்டம் பற்றிய அறிவும் புரிதலும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைச் சட்டம் குறித்த புரிதல் இல்லாததால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கு எடுத்துச் செல்வது என்று தெரியத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார சிக்கல்கள் மற்றும் மொழிப் பிரச்சினைகளும் நீதியைப் பெறுவதற்கான முக்கிய தடைகளாக இருக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில், சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவது நமது முதன்மைப் பொறுப்பு என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் சேவைகளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அடிப்படை சட்டம் பற்றிய அறிவு இல்லாதது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களுக்கும், ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 350

வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே இந்தியா ரஸ்யாவுடன் இருந்து எண்ணெய் மற்றும் பறக்கும் போர்க்கருவிகள் இறக்குமதி செய்வதற்குத் தனியான தண்டனை வரியும் விதிக்கும் புதிய அமெரிக்க இறக்குமதி வரிக் கொள்கையை நடைமுறைபடுத்தியுள்ளார்.
இந்தியாவையும் ரஸ்யாவையும் தோற்றுப்போகும் பொருளாதாரங்கள் என விமர்சித்துள்ள ட்ரம்ப் இந்தியாவை ரஸ்யாவுடன் சேர்த்துப் புறம்தள்ளிவிட்டு எப்படி குவாட் அமைப்பில் இந்தியாவுடன் இந்து பசுபிக் கடலில் சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேவேளை ரஸ்யாவுக்கு உக்ரேன் போரை 10 முதல் 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று இறுதி எச்சரிக்கை  விடுத்து விளையாடுகிறார் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் எனச் சொன்ன முன்னாள் ரஸ்ய அரசத்தலைவரும் இந்நாள் ரஸ்ய பாதுகாப்புக் கவுன்சிலின் பதில் தலைவருமான டிமிரி மெட்டியாவ் “ட்ரம்புக்கு 1. ரஸ்யா இஸ்ரேலும் அல்ல ஈரானும் கூட அல்ல 2. ஓவ்வொரு புதிய இறுதி எச்சரிப்புக்களும் அச்சப்படுத்துவது மட்டுமல்ல போரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுமாகும். ரஸ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் அல்ல அவருடைய நாட்டுடனேயே. கண்ணை மூடிக்கொண்டு ஜோ பைடன் சென்ற பாதையில் செல்ல வேண்டாம்.” எனப் பதிவிட்டார்.
இதற்குப் பதிலளிப்பாக அமெரிக்க அரசத்தலைவர் அமெரிக்காவின் இரண்டு அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை தேவையான இடங்களுக்கு அமெரிக்கா நகர்த்தி விட்டதாகக் கூறியுள்ளமை,  போருக்கு  அமெரிக்கா முனைப்புடன் உள்ளதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. இச்சூழலில் உலகின் நான்காவது எண்ணெய் வளமுள்ள கடலாகப் பாகிஸ்தான் கடல்வளம் அறியப்படும் இன்றைய நிலையில் அமெரிக்கா பாகிஸ்தானில் தெற்காசியாவுக்கான மிகப்பெரிய எண்ணெய் சேகரிப்பு மையத்தை அமைப்பதற்கான  உடன்படிக்கையைச் செய்துள்ளதன் மூலம்  இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலையை வருவிக்கும் என்று ஆரூடம் வேறு கூறியுள்ளார்.  இந்நிலையில் சிறிலங்காவுக்கு முதலில் 44 வீதமும் அதாவது சிறிலங்கா அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு விதித்து வந்த வரியில் அரைவாசியும் பின்னர் சிறிலங்கா தொடங்கிய பேச்சுக்களின் வழி 30வீதமும் தற்போது 20 வீதம் இறுதி வரியாகவும் விதித்து அமெரிக்க சிறிலங்கா நட்பு நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்த அமெரிக்க ஆதரவுக்கு முக்கிய காரணி இரண்டாவது உலகப்  போரில் உலக வான்வழிப்பாதுகாப்புக்கான இயற்கைத் தளமாகப் பிரித்தானியாவுக்குத் திருகோணமலை விளங்கிய போரியல் வரலாற்று உணர்வு என்பது உலகறிந்த விடயம். அத்துடன் சமகாலத்து வான்வழிப்போர் முறைகளின் வளர்ச்சியில் ஈழத்தமிழர் தாயகத்தின் கடல் நில வான் அமைப்புக்கள் குறைந்த செலவிலான வான் உந்துதல்களை மேற்கொள்வதற்கான  இயற்கை அமைப்புக்களைக் கொண்டுள்ளதும் முக்கிய விடயம். எனவே மாங்குளம், பரந்தன் காங்கேசன்துறை குறித்த இன்றைய சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமிடல்கள் உலகின் “பொருத்தி ஆக்கும் சந்தைக்கான” குறைந்த செலவிலான மனிதவலுவையும் குறைந்த செலவிலான ஆய்வுப் பல்கலைக்கழகங்களை வழங்கும் அதே நேரத்தில் ஈழத்தமிழர் தாயகத்தின் கடல் நில வான் இயற்கை நிலைகளை உலகப்பாதுகாப்புக்கான தேவைகளுக்கு உலகிற்கு வழங்குவதான இரட்டை நோக்கைக் கொண்டதாகவே தொடரும் என்பது உறுதி. ஆனால் அந்த வானுக்கு கடலுக்கு மண்ணுக்குச் சொந்தக்காரரான ஈழத்தமிழர்கள் அது தங்களின் சொந்தம் என்கின்ற இறைமையினை வெளிப்படுத்தும் வழக்கில் பழக்கப்படவில்லை. இதுவே 22.05. 1972 முதல் ஈழத்தமிழரின் வானையும் கடலையும் மண்ணையும் ஆட்சிப்படுத்தத் தகுதியற்றவரான சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசே  ஈழத்தமிழர் தாயகத்தின் ஏகபோக உரிமையாளர்களாக இன்று வரை ஆக்கிரமிக்கும் உலக அனுமதியுள்ளவர்களாகத் தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றனர். எனவே இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற ஈழத்தமிழர்களின் வரலாற்று உண்மையை அவர்கள் தங்கள் அடையாளமாக வெளிப்படுத்தி அதனை மீளுறுதி செய்ய வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களுடைய தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே அதனைச் செய்ய முடியும் என்பதை வலியுறுத்துவதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இம்மாதத்துக்குள் சிறிலங்கா குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆண்டறிக்கை வெளிவருமுன்பாக  ஒருங்கிணைந்த கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாடு என்பது உடனடி அரசியல் தேவையாக உள்ளது. இதனை நடைமுறைச் சாத்தியப்படுத்தக் கூடிய முயற்சியாக கொழும்பில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய பேரவை சார்பில் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் சட்டத்தரணி சுமந்திரன், எஸ் சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், சிவில் சமுகம் சார்பாக முனைவர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கலந்து கொண்டு ஆயத்த முயற்சிகளில் ஈடுபட்டதை இலக்கு வரவேற்கிறது.
அதே வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது 31.07.2025 அன்று வெளியான ஆசிரியத் தலையங்கமான “உள்ளக-வெளியக விசாரணை” என்பதில் “கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் முகாமிட்டவர்களால் ஒரு சிறுவிடயத்தைக் கூட நகர்த்த முடியவில்லை என்னும் போது தொடர்ந்து பொய்களைக் கூறிக் கொண்டிருப்பது தவறானது” எனச் சுட்டிக்காட்டியிருப்பதையும் இங்கு மீள் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.” இந்த ஈழநாடு ஆசிரிய தலையங்கம் இலக்கு இதுவரை கூறிவருகின்ற உண்மையை மீள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சரியானதை சரியான நேரத்தில் சரியான முறையில் செய்வதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாட்டை ஈழத்தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. அதே நேரம் ஈழத்தமிழரின் தாயக வாழ்விலும் போதிசத்துவ குழந்தைகளாய் புத்தியைப் பயன்படுத்துவதுடன் இதயத்தையும் பயன்படுத்திட வைக்கும் புதிய கல்வி திட்டத்தை உருவாக்குமாறு கடந்த வாரத்தில் சிறிலங்காவின் அஸ்கிரிய மல்வத்த மகாநாயக்க தேரர்கள் சிறிலங்காவின் பிரதமரை நெறிப்படுத்தி உள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் தேசிய ஒருமைப்பாட்டுடன் தங்களின் வரலாற்றைத் தங்களின் பேராசிரியர்கள் வழியாகவும் தங்களின் தொழிற்கல்வி தேவைகளைத் தங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் வழியாகவும் தங்களின் அழகியல் தேவைகள் பரதநாட்டியமும் கர்நாடக சங்கீதமுமல்ல ஈழத்தின் இசை நடன வடிவங்களின் மீளுருவாக்கல் என்பதையும் சிறிலங்காவின் இன்றைய அரசுக்கு வெளிப்படுத்தி அதனை உலகின் கல்விச் சமூகத்துக்கும் தெரிவிக்க வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு வேகமாக இயற்றப்பட்டு கொண்டிருக்கின்ற இக்காலத்தில் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யாதவரை இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை யாராலுமே நிமிர்த்த முடியாது என்ற உண்மையையும் சிறிலங்காவுக்கும் உலகிற்கும் ஈழத்தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டுடன் வெளிப்படுத்த வேண்டிய இம்மாதத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு அதனை தொடங்குகிறர்கள் என்பதை மீளாய்வு செய்து பார்த்தால் ஈழத்தமிழர்களின் இயலுமை இயலாமையாக உள்ளமையின் உண்மை தெளிவாகும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
 ஆசிரியர்

Tamil News

காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

காசாவில் “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு” காரணமாக மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 குழந்தைகள் உள்ளடங்கலாக 162 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரின் தென்மேற்கே உதவி வாகனத்துக்காக காத்திருந்த பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 60,332 பேர் கொல்லப்பட்டதுடன் 147,643 பேர் காயமடைந்தனர்.

Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025

Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரமாக வளர்க்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்
  • மீண்டும் புதிய அரசியலமைப்பு ‘மர்மமான நகர்வுகளுக்குள் மறைந்துள்ள பேராபத்துக்கள்’ – விதுரன்
  • மற்றைய மனிதப் புதைகுழிகளிலிருந்து செம்மணி ஏன் மாறுபட்டது?ஜெரா
  • பிள்ளையான் உள்ளே..! பெருச்சாளிகள் வெளியே..! – பா. அரியநேத்திரன்
  • விவசாய நிலங்கள் அபகரிப்பு: நீதி கேட்க சென்ற மக்களை தாக்கிய காவல்துறை! – கிண்ணியான்
  • கறுப்பு யூலை இனவழிப்பு மறந்து செல்லும் மலையக மக்கள் – மருதன் ராம்
  • மேற்குலகத்தை அதிரவைக்கும் சீன ஈரான் இரகசிய இராணுவ உடன்பாடு – வேல்ஸில் இருந்து அருஸ்
  • 40 வருடங்களாகப் போராடிய ஒரு குழு, இன்று தனது ஆயுதங்களைக் கையளிக்கிறது (பகுதி 2-இறுதிப்பகுதி)- தமிழில்: ஜெயந்திரன்

 

திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் போராட்டம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி  திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02)   போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

செம்மணி புதைகுழியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் – கஜேந்திரகுமார்

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என்பன கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருந்தன.

அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது.

இருப்பினும் தாம் அனுப்பிவைக்கவுள்ள வரைபினைத் தயாரிக்கும் பணிகள் இவ்வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும், அவ்வரைபு தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் தேசிய தின நிகழ்வைத் தொடர்ந்து, அதே ஹோட்டலிலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த்தேசிய பேரவை) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த்தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும், சிவில் சமூகம் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மற்றும் பி.என்.சிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன் அவ்விடயங்களுடன் உடன்படும் பட்சத்தில் அதுபற்றி விரைவில் ஒரு முடிவை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (1) யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவிப்பதாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த அனுமதி

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின் , நிலைய பொறுப்பதிகாரி யாழ் . நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

செம்மணி புதைகுழிகளில் இருந்து இதுவரையில் , புத்தக பை , சிறுவர்களின் காலணிகள் , குழந்தையின் பால் போச்சி , வளையல்கள் , உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு , அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி , அவற்றை அடையாளப்படுத்த கூடியவர்கள் , நீதிமன்றுக்கோ , குற்ற புலனாய்வு துறையினருக்கோ தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை சான்று பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளைய தினம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.