அமெரிக்காவும் பாகிஸ்தானும் உடன்பாடு – ஆபத்தில் இந்தியா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் சாதகமாகவே அமையும்: இலங்கை நம்பிக்கை
ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மெசிடோனியா, மலாவி மற்றும் மொண்டீனீக்ரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
‘மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுபாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது’.’ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும்’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளன.
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியமளிக்க தயார் : சோமரத்ன ராஜபக்ஷ அறிவிப்பு
யாழ்.செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் 7ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கெப்டன் லலித் ஹேவகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயரதிகாரிகளைப் பாதுகாத்துக்கொண்டு, கீழ்மட்ட உத்தியோகத்தர்களை தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரை தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இந்த விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இந்த வாரம் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தமது கணவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘மாறாக 7ஆவது காலணிப்படை தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கெப்டன் லலித் ஹேவகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால், செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படும்’ ‘அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த உடல்களைப் புதைக்குமாறு கெப்டன் லலித் ஹேவகேயினால் ஆணையிடப்படும்’.
‘அதன்பிரகாரம் எனது கணவர் உள்ளடங்கலாக ஐவரால் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்படும்’ என்று சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘வீதியில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செம்மணி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டுவந்த எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஏனைய ஐவரினதும் வேலையாக இருந்தது’. ‘செம்மணி சோதனைச்சாவடியானது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச்சாவடியாக இருந்தது’.
‘அந்த சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கு மேலதிகமாக கெப்டன் லலித் ஹேவகேயின் ஆலோசனைக்கு அமைவாக காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மொழிபெயர்ப்பாளர்கள் என்ற ரீதியில் நாளாந்தம் இந்த சோதனைச்சாவடிக்கு வருகைதரும் லெப்டினன் துட்டுகல, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளரான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் நஸார் ஆகியோரால் அந்த வீதியில் செல்லும் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவர்’.
‘அவர்கள் மாலை 4 மணிக்கு பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்படுவர்’. ‘அங்கு மரணிப்போர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்படுவர்’.
‘அவர்களைப் புதைக்குமாறு எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவை வழங்கிவிட்டு, வந்தவர்கள் மீண்டும் திரும்பிச்செல்வார்கள் என்றே எனது கணவர் கூறியிருக்கிறார்’ என்றும் கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு எதிராக ஜெனீவாவுக்கு கடிதம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார், 500 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு, தற்போது வேறு வழியில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது தொடர்பில் இதுவரையிலும் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சொத்து விபரங்களை வெளியிடாத 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவித்தல் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
உரிய காலத்தில் குறித்த மக்கள் பிரதிநிதிகள் சொத்து விபரங்களை வெளியிட தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!
வட மாகாணத்தில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் கல்வியின் நிலைமை, பாடசாலைகளின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன, என்பது தொடர்பாக குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை என்று அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேவேளை, இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியுள்ளது. இதனால் வறுமையுடன் இணைந்து கல்வி தொடர்பான பிரச்சினையை அணுக வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்
திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி பயணம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றுக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுடன் மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் கலந்துரையாடினார்.
கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.
அதன் பின்னர் அப்பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன.
அந்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன: இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை
தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த வகையில் மேலும் சில பொருட்களுக்கான வரியை எதிர்காலத்தில் குறைத்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில பொருட்களுக்கான அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் தீர்வை வரி இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவுக்கு வருடத்துக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. அதேவேளை 450 பில்லியன் டொலருக்கு இறக்குமதிகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் அதேவேளை, சர்வதேச சந்தைக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்த வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.
கடந்த மாதங்களில் ஏனைய பிராந்தியங்களுக்கும் எமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஆபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 58 சதவீதமாகவுள்ளன. கடந்த 6 மாதங்களில் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன.
அத்தோடு எதிர்காலத்தில் இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்களுக்கு தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை. அந்த வகையில் சில பொருட்களுக்கான தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். மேலும் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதிகளை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தமிழ் மக்களுக்கு தீர்வு கோரி வலுப்பெறும் போராட்டங்கள்!
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி “அனுர – மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி” மற்றும் “ஐ.எம்.எஃப். மரணப் பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டம் இன்று (02) நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுதர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் எனும் வலியுறுத்தியிருந்தனர்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்: நீதி அமைச்சர் கருத்து
இலங்கையில் சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
‘நீதியை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்க, அவர்களுக்கு பொதுச் சட்டம் பற்றிய அறிவும் புரிதலும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைச் சட்டம் குறித்த புரிதல் இல்லாததால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கு எடுத்துச் செல்வது என்று தெரியத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார சிக்கல்கள் மற்றும் மொழிப் பிரச்சினைகளும் நீதியைப் பெறுவதற்கான முக்கிய தடைகளாக இருக்கின்றன.
சில சந்தர்ப்பங்களில், சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவது நமது முதன்மைப் பொறுப்பு என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் சேவைகளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னால் செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அடிப்படை சட்டம் பற்றிய அறிவு இல்லாதது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களுக்கும், ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.