Home Blog Page 65

செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த அனுமதி

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின் , நிலைய பொறுப்பதிகாரி யாழ் . நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

செம்மணி புதைகுழிகளில் இருந்து இதுவரையில் , புத்தக பை , சிறுவர்களின் காலணிகள் , குழந்தையின் பால் போச்சி , வளையல்கள் , உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு , அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி , அவற்றை அடையாளப்படுத்த கூடியவர்கள் , நீதிமன்றுக்கோ , குற்ற புலனாய்வு துறையினருக்கோ தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை சான்று பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளைய தினம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்  நினைவு கூரப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக் கட்சியின்  யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (1) மாலை இவ் நினைவேந்தல்  நினைவு கூரப்பட்டது.

இத் போது நிலக்சனின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சமஸ்டிக் கொள்கையை முன்வைத்து 100 நாள் போராட்டம்: கிளிநொச்சியில் ஆரம்பம்!

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம்   கார்த்திகை மாதம் எட்டாம்  திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் முதல்  நாளான இன்று  காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி  மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பினை இலங்கை கொண்டாடுவதற்கான எந்த காரணமும் இல்லை-அலி சப்ரி

ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பினை இலங்கை கொண்டாடுவதற்கான எந்த காரணமும் இல்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பை நாங்கள் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள அவர்அதேவேளை நாங்கள் தேவையற்ற முறையில் தண்டிக்கப்படவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

பிராந்திய போட்டியாளர்களான பங்களாதேஸ் கம்போடியா இந்தியா வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடினமான சூழ்நிலையில்  இலங்கையின் நிலை  ஒரளவிற்கு பரவாயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தகத்தில் இது நிச்சயமற்ற நிலை நிலவும் காலம், வர்த்தக போரில் எவரும் வெற்றியடையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக அமெரிக்காவிற்கான எங்கள் ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருக்கும் ஆடைகள், ரப்பர் பொருட்கள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் மற்றும் தேயிலை போன்ற துறைகளில், குறிப்பிடத்தக்க அளவில் பாதகமான நிலையில் வைக்கப்படாமல் இருப்பதுதான்என அவர் தெரிவித்துள்ளார்.

இது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அனைவரின் அயராத முயற்சிகளுக்கும் ஒரு பாராட்டு. இதில் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஈடுபாட்டுடனும் மூலோபாயத்துடனும் இருப்போம்

வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் இலங்கையின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். பகுத்தறிவும் ஒத்துழைப்பும் இறுதியில் வெற்றிபெறும் என்று நம்புவோம். அதுவரை நாம் மீள்தன்மையுடனும் உறுதியுடனும் பாதையில் செல்வோம்என அவர் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழி: சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் – ஆறு திருமுருகன் வேண்டுகோள்

செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும்.  இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும், சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படும் சோகமான சூழ்நிலையில் திகைத்துப்போய்  இருக்கின்ற சமூகம் எத்தனை பேரை இழந்து, எத்தனை பேர் காணாமல் போய் கவலையுடன் இருக்கும் போது செம்மணி  மனித புதைகுழி சம்பவம்  அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்துள்ளது.

எனவே செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் சர்வதேச ரீதியான விசாரணை இடம்பெறவேண்டும் உண்மையான தீர்வு இந்த விடையத்தின் ஊடாக ஏற்படுத்தப்படவேண்டும்.

எனவே இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதேவேளை இந்த விசாரணை தொடரவேண்டும் இந்த விசாரணையின் ஊடாக தமிழ் இனத்திற்கு நடைபெற்ற கொடுமைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று இந்த வேளையில் வேண்டி செம்மணிப் புதைகுழி தொடர்பாக பச்சிளம் பாலகரில் இருந்து ஆண்கள் பெண்கள் என்று வேறு பாடின்றி இவ்வளவு கொடூரமாக புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற செய்தி உலகத்தை உலுக்கிக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வியப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே இரக்கம் இல்லாமல் நடைபெற்ற யாராலும் மன்னிக்கமுடியாத துயரமான சம்பவத்திற்கு இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும் ,சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சரியான ஒரு தீர்வை செம்மணி விவகாரம் பெற்றுத்தரவேண்டும் என்றார்.

நிலத்தைப் பாதுகாக்க, விழிப்புணர்வு போராட்டத்துக்கும் அழைப்பு!

பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்படு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த ஏற்பாடு குழுவினர் இது குறித்து மேலும் கூறுகையில்:- மன்னார் மாவட்டத்தின் இயற்கை வழங்களில் ஒன்றாக மணல் இருக்கின்றது. இந்த மணல் விசேடமக இல்மனைற் கனிமத்தை கொண்டதாக இருபதனால் அதற்கு உலகளவில் பரந்துபட்ட கேள்வி இருந்து வருகின்றது.

இந்நிலையில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய பல்தேசி நிறுவனம் ஒன்று குறித்த இல்மனைட் மணலை அகழ்ந்து எடுக்க முயற்சித்து வருகின்றது.

அனாலும் அதற்காக அனுமதிகள் இழுபறியில் இருந்து வந்த நிலையில் இந்த அரசாங்கத்தினால் அது வழங்கப்படுவதற்கான சுழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக  அஸ்ரேலிய நிறுவனம் அகழ்வுக்கான சூழலியல் ஆய்வு அறிக்கைக்காக சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் விண்ணபித்திருந்த நிலையில் அந்த நிதுவனம் ஆய்வு செய்து சாதகமான அறிக்கை வழங்கியுள்ளது.

இதையடுத்து நிறுவனமயமான பல்தேசிய நிறுவனங்களுக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படும் ஏது நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு பல்தேசிய நிறுவனங்கள் மன்னாரின் இல்மனைட் மணலை அகழ்ந்தெடுத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னாரின் மக்கள் வாழ் நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களில் இருப்பையும் கருவறுத்துச் சென்றுவிடும் நிலை உருவாகும்.

இந்த அழிவை தடுப்பதற்கும் எமது பூர்வீக நிலத்தையும் மக்கள் இருப்பையும் பாதுகாக்கவே கரு, நில பாதுகாப்பு என்றா கதுப்பொருளுடன் மக்களை விழிபுணர்வு செய்ய போராட்டம் ஒன்றை செய்ய இளையிராகிய நாம் வீதிக்கு இறங்கவுள்ளோம்.

எமது இந்த போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

எமது இந்த போராட்டத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து போராட்டம் என்பன முதன்மை பெறவுள்ளதுடன் போராட்டத்தின் இறுதியில் மன்னாத் மாவட்ட அரச அதிபருக்கு மனு ஒன்றும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘வேட்டையாடிகள் அகப்படுகின்றனர், ஆனால், வேட்டைக்கு ஆணையிட்டவர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை’

“தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வேட்டைக்கு ஆணையிட்ட வேட்டைக்காரர்கள் இன்னும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது விடயத்தில் அம்புகள் மாட்டிக் கொண்டுள்ளன. எய்தவர்கள் இதுவரை கைதாகவில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

அவரால்  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இந்தக் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தம் 2005இல் இருந்து 2009 வரை தீவிரமாக நடைபெற்றது. அதன்போது மனிதக் கடத்தல், சித்திரவதைகள், காணாமல் ஆக்குதல் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதற்குக் கருவிகளாகச் செயற்பட்டதாகக் கூறப்படுவோர் இந்த ஆட்சியில் கைதாகி வருகின்றனர் . ஆனால், கர்த்தார்களாக இருந்த இயக்குநர்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்திலும் அம்புகள் அகப்படுகின்றனர். தொடுத்த வில்லர்கள் இன்னும் கைதாகவில்லை.

எனவே, இந்த விடயத்தில் நாசகார வேலைகளின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை அளிப்பதற்கு உதவும். மாறாக வேட்டையாடிகளை மாத்திரம் கைது செய்வதால், நீதி கிடைக்கப் போவதில்லை.

1956 இல் இருந்து 2015 வரை இன அழிப்பில் ஈடுபட்ட வேட்டைக்காரர்களோ, வேட்டையாடிகளோ இதுவரை தண்டிக்கப்படாத குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் அதியுச்சப் பதவிகளையும் வகித்து வந்துள்ளனர். இவைதான் இந்த நாட்டின் சாபக்கோடாகவுள்ளது. இதனால் குற்றவாளிகளின் ஆளுகையினால் நாடு குட்டிச்சுவராகியுள்ளது.

ஊழல், மோசடிகள், கொள்ளை, கொலை தாண்டவமாடியதால் நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. பாரிய குற்றச் செயல்களுக்கான பெரிய பெருந்தலைகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கான பெருந்தலைகள் மறைக்கப்படும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை. குற்றச் செயல்களுக்கான சூழலை உருவாக்குதல், குற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல், குற்றவாளிகள் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தல் என்பன நடைபெறுவதால் இந்த நாட்டில் தீர்வுக்கான உள்நாட்டுப் பொறிமுறை உருக்குலைந்து போயுள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

வெலிக்கடைப் படுகொலைக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விமானக் கடத்தலில் ஈடுபட்ட சிங்களக் கைதி மற்றும் மிருசுவில் படுகொலையாளியும் மரண தண்டனைக் குற்றவாளியுமான சுனில் ஆகியோர் ஜனாதிபதிகளின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதும் பாரிய குற்றவாளிகளை இனவாத ரீதியில் பாதுகாக்கும் செயல்களாக அமைந்தன.

எனவே மனிதக் கடத்தல் காணாமல் ஆக்குதல், படுகொலைகள், வதைகள், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் போன்ற பாரிய குற்றங்களுக்குக் கால்கோளிட்ட சூத்திரதாரிகள் வெளிச்சப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அம்புகள், வேட்டையாடிகளை மாத்திரம் தண்டிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ, பரிகாரமோ கிடைக்காது. மனிதமும் நீதியும் செத்தால் சனநாயகம் பிணநாயகம் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான வரியை குறைத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசேட அறிவிப்பு

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை கடந்த மாதங்களாக அறிவித்து வந்துள்ள நிலையில், அந்த வரிகள் இன்று ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது அந்த வரி 20 வீதமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் இலங்கையின் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கனடாவின் மீதான வரிகள் 25 வீதத்திலிருந்து 35 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதித்ததால், இதற்குப் பதிலடியாக இந்த வரி உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், இந்திய இறக்குமதிகளுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத ஏனைய நாடுகளுக்கு 10 வீதம் என்ற அடிப்படை வரியைச் சந்திக்கும்.

இந்த புதிய வரி விதிப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ள போதிலும், இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஏற்கனவே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரி விதிப்புக்கள் அமுல்படுத்தப்படுகின்ற நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன்’: அவுஸ்திரேலிய டிஜே சமூக ஊடகத்தில் அதிர்ச்சி

Unknown 'நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன்': அவுஸ்திரேலிய டிஜே சமூக ஊடகத்தில் அதிர்ச்சி

இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார்.

நான் அறுகம் குடாஇலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவி போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள அவர் அந்த உணவகங்களின் பெயர்கள் ஹீப்ருவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சில கட்டிடங்களில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதையும் அவர் காண்பித்துள்ளார். இஸ்ரேலியர்கள் அறுகம்குடாவில் நிகழ்வுகளை நடத்துகின்றனர் அதில் கலந்துகொள்வதற்கு உள்ளுர் மக்களிற்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் இரத்து!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.