Home Blog Page 66

‘நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன்’: அவுஸ்திரேலிய டிஜே சமூக ஊடகத்தில் அதிர்ச்சி

Unknown 'நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன்': அவுஸ்திரேலிய டிஜே சமூக ஊடகத்தில் அதிர்ச்சி

இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார்.

நான் அறுகம் குடாஇலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவி போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள அவர் அந்த உணவகங்களின் பெயர்கள் ஹீப்ருவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சில கட்டிடங்களில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதையும் அவர் காண்பித்துள்ளார். இஸ்ரேலியர்கள் அறுகம்குடாவில் நிகழ்வுகளை நடத்துகின்றனர் அதில் கலந்துகொள்வதற்கு உள்ளுர் மக்களிற்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் இரத்து!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 30 சதவீத ஏற்றுமதி வரி, இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்!

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி சந்தையில் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் அமெரிக்காவின் வரி விதிப்பு இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. தற்போது இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியில் ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்று அல்லது எதிர்வரும் வாரங்களில் கிடைக்கக் கூடும். எவ்வாறிருப்பினும் இன்று முதல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரி செலுத்தப்பட வேண்டும்.

அதற்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இலங்கையில் அதிகரிக்கப்படாது. அந்த வகையில் ஏற்றுமதியூடாக மிகக் குறைந்த இலாபமே கிடைக்கப் பெறும். எவ்வாறிருப்பினும் மில்லியன் கணக்கான உற்பத்திகள் மூலம் பாரிய வருமானத்தைப் பெற முடியும். எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரியுடன் எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை ஒப்பிட்டு பார்ப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது.

இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எமக்கு சவாலாக அமையும். கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளே தற்போது எமக்கு போட்டியாகவுள்ளன. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க போட்டித்தன்மையை எமக்கு ஏற்படுத்தும்.

இலங்கை தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரியை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைப் போன்று, இந்தியாவும் இன்னும் வரியைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி கிடைத்துள்ளதால் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அடிக்கடி வரி திருத்தம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதற்கமைய எதிர்காலத்திலும் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவது எமக்கு சவாலாகவே இருக்கும் என்றார்.

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31)  முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (31) மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புக்கூடடு தொகுதிகள் இன்றையதினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.

அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 105 எலும்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமை முடிவடையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணி நிறுத்தம்…

Unknown 16 இன்று திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணி நிறுத்தம்...

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் பொது மயானத்தில் இனியபாரதி தரப்பினரால் கொன்று புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் திருக்கோவிலைச் சேர்ந்த சிம் அட்டை விற்பனை முகவரான அருளானந்தன் சீலன் எனும் 22 வயது இளைஞனைக் கொலை செய்து புதைத்ததாகக் கூறி அரச சாட்சியாக மாறிய மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த இனியபாரதியின் சகாவான அலோசியஸ் சுரேஸ் கண்ணா (ஜுட்) வின் வாக்குமூலத்திற்கமைவாகவே இன்று (31.07.2025) இவ் அகழ்வுப் பணி நடைபெற்றது.

இந்த அகழ்வுப் பணியானது அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி திரு.ACL றிஸ்வான் அவர்களின் மேற்பார்வையில் திருக்கோவில் பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..

திருக்கோவில்,தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வான்,குற்றப் புலனாய்வு அதிகாரிகள்,தடயவியல் அதிகாரிகள்,பொலீசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயானத்தின் பல இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போதும் எதுவித சான்றுப் பொருட்களோ,தடயங்களோ மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டது.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனை முன்வைக்க திட்டம்!

இலங்கை தொடர்பான பிரித்தானியா தலைமையிலான முக்கிய குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் புதிய யோசனையை முன்மொழியவுள்ளது. கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த யோசனையை முன்மொழியவுள்ளன.

இந்த யோசனை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடவும் மாறுபட்ட வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிராகரித்துள்ள போதிலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 51ன் கீழ் 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் 46ன் கீழ் 1 தீர்மானத்தையும், 51ன் கீழ் 1 தீர்மானத்தையும் இலங்கை நிராகரித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதேநேரம், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (volker turk) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் தரப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்தநிலையில் அவரும் தமது அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான சாட்சியென தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

இந்த பின்னணியில் இலங்கை தொடர்பான புதிய யோசனையை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டதா?

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அனுமதி வழங்கினார்.

ஜூலை 21 ஆம் திகதியன்று கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரால் வெளிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில், டி56 ரக தாக்குதல் துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

டி-56 துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்பு பகுதிக்கு கொண்டு சென்று, குற்றத்தைச் செய்வற்காக, அதனை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்து, பின்னர் அதை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டங்கள், தமது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வவுனியா குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, முக்கிய சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. அவர்கள் செட்டிகுளம் காவல் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்ததாக விசாரணையாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்து ஆயுதங்கள் தெற்கில் குற்றங்களைச் செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா அல்லது பணத்திற்காக பாதாள உலகக்குழு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தங்களது நாட்டில் இருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம், பரமத்தி வேலூரில் உள்ள காவல்துறை, அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி முகாமில் உள்ள 62 பேர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுலா வீசாக்களில் தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் முகாம்களில் ஏற்கனவே தங்கியிருந்த அவர்களின் உறவினர்களுடன் தங்கிவிட்டனர்.
அவர்கள் விசாக்களை புதுப்பிக்கவோ அல்லது இலங்கைக்கு திரும்பவோ முயற்சிக்காமல் பதிவின்றி சட்டவிரோமாக முகாமிலேயே தங்கிவிட்டனர்.

இதில் சிலர் இலங்கைக்கு மீண்டும் சென்று முகாமுக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், காஷ்மீர் பஹல்கம் தாக்குதல்களை அடுத்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளுக்கு அமையவே, தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னரும் இதுபோன்ற உத்தரவுகள், அதிகாரிகளால் வாய்மொழி மூலம் கூறப்பட்டாலும் கூட, தற்போது இந்த உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று தாம் கருதுவதாக நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த அகதிகள், நீண்ட கால வீசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கு சட்டப்பூர்வமாகத் தங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று இந்திய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில், இலங்கை அகதிகள் தொடர்பான விடயங்களை கையாளும் வெளிநாட்டு தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணைக்குழுவிடம், தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல விரும்பும் இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அவ்வாறு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளில், இந்திய குடியுரிமையை கோரியுள்ளவர்கள் தொடர்பான தகவல்களும் அந்த ஆணைக்குழுவிடம் இல்லை என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நட்டக் கணக்குடன் லாபம் ஈட்டும் தோட்ட கம்பனிகள் – மருதன் ராம்

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை கடந்திருந்தாலும், ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நிலையும் வாழ்வாதார மும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது மறுக்க முடியாத உண்மை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அவர்கள் கடந்த 200 ஆண்டுகளாக அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து விடிவின்றி, இன்றும் அதே நிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் பெருந்தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகவே மாறியுள்ளது.
அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை மாற்றுவதில், பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கான வேதனம் ஒரு முக்கிய அம்சமாகும். அவர்களுக்கான வேதன உயர்வுக்காக பலரும் வாதங்களை முன்வைத்தாலும், அவை வெறும் பேச்சுக்களாகவே முடிவடைகின்றன. யார் என்ன கூறினாலும், பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்கினால் மட்டுமே அவர்களுக்கான வேதனத்தை அதிகரிக்க முடியும்.
வேதன விவகாரத்தில் பல வாக்குறுதிகளை வழங்கி, 159 பாராளுமன்ற ஆசனங்களுடன் ஆட்சி யமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என மட்டுமே தெரிவிக்கிறது.
மறுபுறம், பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குகின்றன என் பதைக் காரணமாகக் காட்டி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் உள்ளிட்ட ஏனைய சலுகைகளை வழங்குவதில் பின்னடைவாக செயல்படுகின்றன.
இவ்வாறான நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்.தற்போது பெருந்தோட்டங்களை அரசும் தனியாரும் இணைந்து நிர்வகிக்கின்றனர். 22 பெருந்தோட்டக் கம்பனிகள் 453 பெருந் தோட்டங்களை நிர்வகித்து வருவதாக தெரி விக்கப்படுகிறது. இந்த 22 கம்பனிகளில் பெரும் பாலானவை தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறப்பட்டாலும், அதற் கான காரணங்களை ஒட்டியுள்ள விவாதங்கள் கடுமையாக நிலவுகின்றன.
இந்த விடயத்தில், பாராளுமன்ற விவாதம் ஒன்றின் போது கருத்துரைத்த முன்னாள் அமைச் சர் ஜீவன் தொண்டமான்,“19 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனி கள் சுமார் 16 வருடங்களாக நட்டத்தில் இயங்குகின் றன என்று அறிவித்தாலும், அவை அதிக இலாபத்தை பெற்றுள்ளன” எனக் கூறினார். அவர், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி,  “அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் ரூ.1782 மில்லியன், பலாங்கொடை – ரூ.1343 மில்லியன், எல்பிட்டிய – ரூ.1830 மில்லியன், ஹப்புகஸ்தன்ன – ரூ.159 மில்லியன், ஹொரணை – ரூ.170 மில்லியன், கேகாலை – ரூ.689 மில்லியன் வருமானம் பெற்றுள்ளன” எனவும் உறுதிப் படுத்தினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியினர், மற்றும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்களும் இதே விடயங்களை உரைத்துள்ளனர். ஆனால் எவரும் அதற்கெதிரான தீர்வுகளை மேற்கொள் வதற்குத் தயாராக இல்லை.நட்டம் ஏற்படும் கம்பனிகளை அவர் கள் நடத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதனை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைப் பதற்கான சட்ட அனுமதிகள் அவர்களிடம் உண்டு.
வெளியான உண்மை தரவுகள் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் தகவல்களுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனி கள் முன்வைக்கும் நட்ட கணக்கு உண்மையா? பொய்யா? என்பது புலனாகியுள்ளது.
2024 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடி வடைந்த 2023–2024 நிதியாண்டுக்கான பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளில், தோட்டக் கம்பனிகள் தங்களு டைய வருமான செலவுகளை வெளியிட்டுள்ளன.
ஆனால், 2022 முதல் 2024 மார்ச் வரையான காலப்பகுதியில் 19 பெருந்தோட்டக் கம்பனிகள் சுமார் 4022 கோடி ரூபா வருமானமாக பெற்றுள் ளன என்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் நான்கு கம்பனிகள் மட்டுமே 213 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளன.
இதனடிப்படையில் பெரும்பாலான கம்பனிகள் இலாபத்தில் இயங்குகின்றன என்பது தெளிவாகிறது. இருந்தபோதிலும், தொழிலாளர்க ளின் வேதன உயர்வைச் சம்பந்தமாக கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பங்களில், இந்தzelfde கம்பனிகள் தங்கள் கணக்குகளில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டுகின்றன.
இதேவேளை, மலையகத் தமிழ் சமூகத்துக் கான தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
“தோட்டங்களை நிர்வகிக்கும் தற் போதைய முறை முற்றிலும் தோல்வியடைந் துள்ளது. அரச துறையை விட தனியார் நிறுவங் களால் தோட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தில் 22 தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடம் ஒப் படைக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக, இந்த கம்பனிகள் ஒன்றுமட்டும் முகாமைத்துவக் கோட்பாட்டைக் கொண்டு இயங்குகின்றன – அதாவது தொழிலாளர்களின் நிதி மற்றும் பிற உரிமைகளை பறித்து, இலாபத்தை அதிகரிக்க முயல்கின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் இக்கம்பனிகள் அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மையில் நட்டமடைந்திருப்பின், தற்போது தோட்டங்களை குத்தகைக்கு பெற் றுள்ள நிறுவனங்களை மீளாய்வு செய்து, தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கத் தயாராக உள்ள நிறுவனங்களிடம் ஒப் படைக்கப்படும்.”ஆனால், ஆட்சிக்கு வந்த பின், “1700 ரூபாய் வேதனத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன” என்று அரசாங்கம் தெரிவித் தது.
வேதனப் பிரச்சினையில், முன்னையதும் தற்போதையதுமான ஆட்சியாளர்கள் மாறிமாறி போலி வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 2025 ஜூலை 22 அன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ்,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.2000 வேதனம் வழங்கப்படும்”
என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தற்போதைய நிலைமையில் ரூ.1700-க்கு பேச்சுவார்த்தை நடை
பெறுகிறது; அதன் பின்னர் ரூ.2000-க்கு முன் னேறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், 2025 ஜூலை 23 அன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை ரூ.1700 ஆக உயர்த்தும் எதிர்கட்சியினர் முன்வைத்த பிரேரணையை அரசாங்கம் நிராகரித்தது.
இதன் விளைவாக, பெருந்தோட்ட மக்களின் நலனில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்னவென்பது வெளிப்படையா கத் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும், தற்போது தோட்டங்களை குத்தகைக்கு பெற்றுள்ள கம்பனிகளை கணக் காய்வுக்குட்படுத்தி, அவற்றின் வருமானங்கள் மற்றும் சொத்துகள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர வேண்டும். இதனடிப்படையில், இலாபங்களை மறைக்கும் கம்பனிகளுக்கு எதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
முடிவில், பெருந்தோட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையி லான அரசாங்கம், “தொழிலாளர்களை சுரண்டும் கம்பனிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப் படுத்தி, தொழிலாளர்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும்.”
பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகார த்துக்கு உட்பட்டு செயற்படும் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதே சந்தர்ப்பத்தில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை கண்காணிப்பதற்கான புதிய பொறி முறையை உருவாக்கவும் வேண்டும்.

திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் சோதனைகளும் அகழ்வும் ஆரம்பம்

கருணா குழு (TMVP) இன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைது இடம்பெற்ற பின்னர் இடம்பெற்று வரும் தொடர் கைதுகளும் விசாரணைகளும் பல திருப்பங்களைக் கொடுத்துவரும் நிலையில்,
அவர்களின் கல்முனை அலுவலகப் பொறுப்பாளர் என அறியப்படும் நபர் மூலம் கல்முனை, திருக்கோவில் உள்ளிட்ட பல அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டதோடு நேற்று முன்தினம் திருக்கோவில் தம்பிலுவில் மயானத்திற்கும் அவர் அழைத்து வரப்பட்டு சில இடங்களும் அடயாளப்படுத்தப்பட்டதாக அறிய முடிந்தது.

இந்நிலையில் இன்று (31.07.2025) தம்பிலுவில் மயானத்தில்தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.