Home Blog Page 67

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் – மக்கள் போராட்ட இயக்கம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு பிரசுரம் விநியோக நடவடிக்கை ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு , மக்கள் போராட்ட இயக்கம் என்பன  இணைந்தே இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் ; அத்தோடு மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தோட்ட அடிமை முறைமை நீக்கப்பட வேண்டும் ; காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டு பிரசுர விநியோகம் இடம்பெற்றது.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கடற்பரப்பில் கண்காணிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே பத்தலங்குண்டுவா மற்றும் மன்னார் வடக்குப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த அந்த 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கதை வலியுறுத்தியுள்ளார்.

சம்பூரில் மனித என்புத்தொகுதி தொடர்ச்சியான அகழ்வு தேவை: நீதிமன்றத்தில் அறிக்கை

திருகோணமலை – சம்பூர் பகுதியில் அண்மையில் மனித என்புச்சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் தேவை என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றபோது மனித என்புத்தொகுதிகள் சில மீட்கப்பட்டிருந்தன. இதையடுத்து,  மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் தொடர்பிலும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கை வழங்குமாறு தொடர்புடைய மருத்துவ அதிகாரிகளுக்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பூரில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் நீண்டகாலத்து உட்பட்டவையாகக் காணப்படுகின்றன. அந்தப்பகுதியில் விரிவான அகழ்வுப்பணிகளை மேற்கொண்டாலே தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் விரிவான கலந்துரையாடலை நடத்தி, தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படவுள்ளது

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் – பிரதமர் அறிவிப்பு

பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு,காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என  அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள்: பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டுக்கான உரிமையை வலியுறுத்தியுள்ளனர்.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பல அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 40,000 என்கின்றன என தெரிவித்துள்ள அவர்கள் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும் என தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளுதல்,சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்முறைகள்,பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,சித்திரவதை மற்றும் போதிய மருத்துவ உணவு வசதியின்றி தமிழர்களை இடைத்தங்கள் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது என பல ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றமையும் 80 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்தும் அங்கு அமைதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் நீதியை  கோரி நிற்கின்ற போதும்,இதுவரை சுயாதீன விசாரணையெதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செய்திக்குறிப்பில் இலங்கையின் வடக்குகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை பட்டியலிட்டுள்ளதுடன், இது இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விலக்களித்து வருவதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும்,என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் நம்பகதன்மை மிக்க நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன என பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் வசிக்கும் 220,000 தமிழ் வம்சாவளி மக்கள், அவர்களில் பெரும்பாலோர் 1980 களில் போரிலிருந்து தப்பி ஓட வந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற தமிழ் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு அவசரமாகத் தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுப் பிரகடனத்தில் LFI-NFP கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (வால் டி’ஓய்ஸ்), எரிக் கோக்வெரல், அலி டியோரா மற்றும் தாமஸ் போர்டெஸ் (சீன்-செயிண்ட்-டெனிஸ்), பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் (ரீயூனியன்) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு – உமா குமரன் வரவேற்பு

செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான் அரசியலில் தீவிரமாக இருந்த காலம் முதல் பலஸ்தீன தேசத்தை ஆதரித்து வருகிறேன்.

இது குறித்து நான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பதிவு செய்து வருகிறேன்.

ஸ்ட்ராட்ஃபோர்டு மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், வெளியுறவுக் குழுவில் எனது பங்கிலும், கடந்த ஒரு வருடமாக பலஸ்தீன அரசை அங்கீகரிக்கக் கோரி தொடர்ந்து எனது குரலைப் பயன்படுத்தி வருகிறேன்.

இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ஆழமான அர்த்தமுள்ள நடவடிக்கையாகும்.

இது இஸ்ரேலியர்களுடன் சேர்ந்து பலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துகிறது, மேலும் இரு நாடுகள் தீர்வுக்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகையால் காசா எல்லையில் ஆயிரக்கணக்கான டன் உதவிகள் நிற்கும் அதே வேளையில், பலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

காசாவிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க இங்கிலாந்து தயாராக உள்ளது. இங்கிலாந்திலிருந்து அரை மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய உயிர்காக்கும் பொருட்கள் ஏற்கனவே காசாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்குக் கரையில் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் திருப்புதல் மற்றும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை இங்கிலாந்து அரசாங்கம் அவசரமாகத் தொடர வேண்டும்.

இது ஒரு முக்கியமான படியாகும். ஆனால் கொடூரமான மற்றும் சகிக்க முடியாத வன்முறை சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம்.

பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்கள் இருவருக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கு மேலும் விரைவான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புப்பேரவையை புதிய அரசியலமைப்பு பலவீனப்படுத்தக்கூடாது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் அதேவேளை, அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப்பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிர்வாக தீர்ப்பு சபை ஆகிய கட்டமைப்புக்கள் பலவீனப்படுத்தப்படக்கூடாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இயங்கிவரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள கருத்தைப் பெரிதும் வரவேற்கிறோம். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாகவும், அதனூடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவும் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின்போது அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்மீது நம்பிக்கை வைத்தே இக்கருத்தை வெளியிடுகிறோம்.

அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்காமல் அரசாங்கம் அதனை நிறைவேற்றும் என ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்திருப்பதுடன் பிரதமரின் கருத்தை அதற்கான ஆரம்பமாகவே நாம் கருதுகிறோம்.

அதற்கமைய 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இயங்கிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளைத் திரட்டும் குழுவினால் நாடளாவிய ரீதியில் சகல பகுதிகளையும் உள்வாங்கி பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

அப்போது அந்நடவடிக்கைக்கு தலைமைத்துவம் வழங்கியவர் இப்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பின்களில் ஒருவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க ஆவார். எனவே அந்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் ஊடாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக செலவிடப்படக்கூடிய நேரம் மற்றும் நிதியின் அளவைக் குறைத்துக்கொள்ளவும், ஒட்டுமொத்த நாட்டுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் முடியும்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதோ அல்லது அதற்கு முன்னதாகக் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தின்போதோ அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப்பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிர்வாக தீர்ப்பு சபை ஆகிய கட்டமைப்புக்களை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கக்கூடாது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் தலைமைத்துவம் வழங்கும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையையும், இவ்விடயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டையும் பெரிதும் வரவேற்கிறோம்.

எனவே அத்திருத்தத்தின் ஊடாக கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கலாசாரத்தை எதிர்வருங்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் எவ்வகையிலும் பின்தள்ளுவதற்கு இடமளிக்கக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொத்துவில் படுகொலை நினைவு நாள்…

1990.07.30 அன்று இராணுவமும் ஊர்காவல் படையும் இணைந்து சுமார் 132 பேரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று அன்று முதல் 1990.08.02 வரை அந்த அப்பாவிப் பொதுமக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டும்,வெட்டியும்,எரித்தும் கோரமாகக் கொலை செய்தார்கள்.

இந்த 132 பேரில் 6 அல்லது 7 பேர் தப்பினார்கள் ஏனையோர் கொல்லப்பட்டார்கள். எனவே இங்கும் விரைவில் அகழ்வுப் பணிகள் நடக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அன்று ஊர்காவல் படைகளில் இருந்தவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே சேவையாற்றியதாக ஹரி ஆனந்தசங்கரி கருத்து

பயங்கரவாதக் குழு உறுப்பினராகக் கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதிய போது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தனது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று ஹரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அத்துடன் அவர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கனேடிய பிரதமர் அறிவித்தார். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்த ஹரி ஆனந்தசங்கரி, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்ட விடயத்தில், தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமது கடமைகளை செய்ததாக ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் இன்று வரையில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (30) நடைபெற்றன.

இதன்போது சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா கூறுகையில்,

இந்நிலையில், இன்றைய தினம் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அகழ்வுப் பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.