Home Blog Page 68

பொத்துவில் படுகொலை நினைவு நாள்…

1990.07.30 அன்று இராணுவமும் ஊர்காவல் படையும் இணைந்து சுமார் 132 பேரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று அன்று முதல் 1990.08.02 வரை அந்த அப்பாவிப் பொதுமக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டும்,வெட்டியும்,எரித்தும் கோரமாகக் கொலை செய்தார்கள்.

இந்த 132 பேரில் 6 அல்லது 7 பேர் தப்பினார்கள் ஏனையோர் கொல்லப்பட்டார்கள். எனவே இங்கும் விரைவில் அகழ்வுப் பணிகள் நடக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அன்று ஊர்காவல் படைகளில் இருந்தவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே சேவையாற்றியதாக ஹரி ஆனந்தசங்கரி கருத்து

பயங்கரவாதக் குழு உறுப்பினராகக் கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதிய போது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தனது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று ஹரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அத்துடன் அவர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கனேடிய பிரதமர் அறிவித்தார். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்த ஹரி ஆனந்தசங்கரி, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்ட விடயத்தில், தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமது கடமைகளை செய்ததாக ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் இன்று வரையில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (30) நடைபெற்றன.

இதன்போது சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா கூறுகையில்,

இந்நிலையில், இன்றைய தினம் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அகழ்வுப் பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட மற்றுமொரு களமுனை – வேல்ஸில் இருந்து  அருஸ்

சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த களமுனை திறக்கப்பட்டுள்ளது. தற்போது அது தென்கிழக்கு ஆசியாவில். Association of Southeast Asian Nations (ASEAN) என்ற கூட்டமைப்பின் பங்காளி நாடுகளும் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய நாடுகளுமான கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று மோதல்கள் வெடித்துள்ளன.
கம்போடியப் படையினர் 122 மி.மீ BM21 பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூலம் தாய்லாந்தின் எல்லைக் கிராமங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களில் எரிபொருள் நிரப்பு நிலையம் வைத்தியசாலை பாடசாலைகள் ஆகியவவை தாக்கப்பட்டதாகவும் 14 பேர் கொல்லப்பட்டதாக வும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.  இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து 100,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து தாய்லாந்து வான்படையினரின் 6 எப்-16 விமானங்கள் கம் போடியாவில் குண்டுகளை வீசியிருந்தன. இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் எல்லையில் இருந்த கம்போடியப் படையினரின் பிராந்திய கட்டளை மையங்கள் இரண்டை தாம் தாக்கி அழித்துள்ளதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
வான் தாக்குதலை உறுதிப்படுத்திய கம்போடியா, படைத்தளங்கள் தாக்கப்பட்டது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உக்ரைன் ரஸ்ய போர் இஸ்ரேல் பாலஸ்தீன போர் இஸ்ரேல் ஈரான் போர் அமெரிக்கா ஈரான் போர் இந்தியா பாகிஸ்த்தான் போர் என களமுனைகள் விரிவடைந்து செல்கையில், தற்போது அதில் மேலும் இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ளன.
இந்திய பாகிஸ்த்தான் போர் 10 நாட்களும் ஈரான்- இஸ்ரேல் -அமெரிக்கப் போர் 12 நாட்க ளும் இடம்பெற்றிருந்தவேளை தற்போது உருவாகி யுள்ள புதிய போரும் மேலும் சில நாட்கள் மோசமாக தொடரலாம் என தாய்லாந்தியின் Chulalongkorn பல்கலைக்கழகத்தின் அரசியற்றுறை பேராசிரியர் Thitinan Pongsudhirak தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. அங்கு ஒற்றுமையும் இல்லை. கம்போடியா இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம். ASEAN என்ற அமைப்பில் உள்ள பிராந்திய நாடுகள் அவர்களின் எல்லைப் பிரச்சினை காரணமாக ஒரு சமநிலையற்ற தன்மைக்குள் சென்றுள்ளன. இந்த குழுவில் தாய்லாந்து கம்போடியா மியான்மார் ஆகிய நாடுகள் அடங்கும். இந்த நாடுகளில் உள்நாட்டு கலவரங்கள் பிராந்திய மோதல்கள் பூகோள அரசியல் நெருக்கடிகள் உச்சம் பெற்றுள் ளதாகவும் அது இந்த கூட்டணியை பலப்படுத்தும் சீனாவின் திட்டத்திற்கு பலத்த பின்னடைவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் 817 கி.மீ நீளமான எல்லைகளை கொண்டுள்ளன. பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியில் இருந்த கம்போடியா சுதந்திரம் பெற்றபோது 1000 வருடம் பழமைவாய்ந்த Preah Vihear இந்து ஆலயத்தை அவர்கள் கம்போடியாவிடம் விட்டுச் சென்றிருந்த னர். அதனை கம்போடியா யுனெஸ்கோ என்ற ஐநாவின் தொல்லியல் கலாச்சார மையத்தில் 2008 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த ஆல யம் கம்போடியாவுக்கே சொந்தமானது என ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதி மன்றம் (ICJ) தனது தீர்ப்பை 1962 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது. பின்னர் அந்த தீர்ப்பை 2013 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. எனினும் அதனை தாய்லாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. ஆலையத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தாய்லாந்து முயற்சி செய்திருந்தது.
அதற்கு எதிராக அந்த பிரதேசத்தில் மிதி வெடிகளை கம்போடியா படையினர் புதைத்ததில் தாய்லாந்தின் படைவீரர் ஒருவர் காலை இழந்தது டன் இருவர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து மோதல்கள் வெடித்திருந்தன.
படைப் பலத்தை பொறுத்தவரையில் தாய்லாந்து மிகவும் பலமான நிலையில் உள்ளது. அதனிடம் 360000 படையினர் உள்ளனர். கம் போடியாவிடம் 170000 படையினரே உள்ளனர். தாய்லாந்து அமெரிக்காவின் நேட்டோ அல்லாத கூட்டணி நாடாகவே இயங்கி வந்துள்ளது. அதனிடம் அமெரிக்காவின் எப்16 எப்5 சுவீடனின் Gripen  வகை தாக்குதல் விமானங்கள் மற்றும் அமெரிக்காவின் கொப்ரா மற்றும் Black Hawk ஆகிய தாக்குதல் உலங்குவானூர்திகளும் உள்ளன.
ஆனால் கம்போடியாவிடம் தாக்குதல் விமானங்கள் இல்லை; சீனா மற்றும் முன்னைய சோவியத்து ஒன்றியத்தின் தாக்குதல் உலங்கு வானூர்திகளே உள்ளன. தாய்லாந்தின் பாதுகாப்புச் செலவீனம் 5.8 பில்லியன் டொலர்கள் ஆனால் கம்போடியாவின் பாதுகாப்புச் செலவீனம் 668 மில்லியன் டொலர்கள். அதாவது தாய்லாந்தின் படைத்துறைச் செலவீனம் கம்போடியாவை விட ஏறத்தாழ 8 மடங்கு அதிகம்.
எனினும் கெரில்லா போர் முறை மற்றும் ஆளஊடுருவும் போர் முறைகளில் கம்போடிய இராணுவம் அதிக அனுபவம் வாய்ந்தது. மேலும் தாய்லாந்தில் உள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் பலவீனங்களை கம்போடியா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம்.
எனினும் அமெரிக்கா இந்த சமருக்குள் நுழையுமாக இருந்தால் சமர் மேலும் மோசமாக லாம். அமெரிக்காவும் தாய்லாந்தும் 1982 ஆம் ஆண்டில் இருந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சி களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் 7 ஆவது பசுபிக் பிராந்திய கடற்படைப் பிரிவுக்கும் தாய்லாந்து கடற்படையினருக்கும் இடையில் கடந்த மாதம் கடற்பயிற்சிகள் நடந்திருந்தன.
இருந்தபோதும் அண்மைக்காலமாக தாய்லாந்து சீனாவுடனும் உறவுகளை வளர்த்து வருகின்றது. சீனாவின் நவீன VT4 வகை 60 டாங்கிகளை தாய்லாந்து கொள்வனவு செய்திருந் தது. அதேசமயம் கம்போடியாவுடனும் சீனா நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றது. எனவே இந்த சமரை தணிப்பதற்கு சீனா முயற்சி செய்யலாம். ஆனால் அமெரிக்கா இந்த போரை ஊக்கப்படுத்தி தனது ஆயுதங்களை விற்பனை செய்யவும் தாய்லாந்தில் தளத்தை அமைத்து சீனாவை சுற்றிவளைக்கவும் முற்படலாம்.
எனவே இந்த போர் மேலும் மோசமாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. தற்போது தாய்லாந்து படையினர் தமது 155 மி.மீ ஆட்டிலறி பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதுடன் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் கம்போடியப் படையினரின் ஆயுதக்கிடங்குகளையும் தாக்கிவருகின்றனர். இரு தரப்பும் எல்லைகளை நோக்கி தமது படையினரை யும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஆசியா வில் அதுவும் சீனாவுக்கு அண்மையாக ஒரு போரை அது ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகின்றது. ஆனால் அது தாய்வானில் அல்ல யாரும் எதிர்பார்க்காத வேறு ஒரு களமுனை.

விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் கைது

விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்க டொலர்களையும், குடிவரவுத் திணைக்களத்துக்கு 500 அமெரிக்க டொலர் அபராதத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கொழும்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லலித், குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு – யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது – கோட்டாபய தெரிவிப்பு

மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும்  குகன்முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்ல தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு உச்சநீதிமன்றத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க தயாராகயிருக்கின்றார் என தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி  சில்வா அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சிக்காரர் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய எந்த பகுதியிலும் சாட்சியமளிக்க தயார் என ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காணாமல்போன செயற்பாட்டாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை கோட்டாபயவின்  சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தரணி நுவான் போபகே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

ஆட்கொணர்வு மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஆஜராகவேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம்2019 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த முன்னைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது.

ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது.

இதற்கிடையே சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர பெரு, ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்!

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது, தொடர்ச்சியான கோரிக்கையை ஐ.நா புறந்தள்ளுகிறது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அவ்வாறிருந்தபோதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.

இந்த நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நிலையே  தொடர்ச்சியாக இருக்கின்றது.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கிறது.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரி போராடிவரும் நாம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.

செம்மணியில் எதிர்வரும் திங்கள் ஸ்கான் பரிசோதனை!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சு குறிக்கப்பட்ட பகுதிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால்  ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலையின் தொழில்நுட்பப் பிரிவின் உதவியோடு எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்று சட்டத்தரணி ரணித்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டாம் கட்ட 9ஆவது அகழ்வில் நேற்றைய அகழ்வில் 7 எலும்புக்கூடுகள் பிரதேசம் 1இலும் பிரதேசம் 2 இலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வில் முழுமையாக 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் சித்துப்பாத்திக்கு வந்து கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அகழ்வுப் பணியைப் பார்வையிட்டனர். அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் ஒரு பகுதியின் ஸ்கான் பரிசோதனைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் இதனால்  ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலையின் தொழில்நுட்பப் பிரிவின் உதவியோடு எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால்,இஸ்ரேலுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

“இறுதியில், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான். பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன் பாதுகாப்பான இஸ்ரேல் எங்கள் இலக்கு.

உண்மையான அமைதிக்கான பங்களிப்பாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது இரு நாடுகள் தீர்வுக்காக செயல்பட வேண்டிய நேரம் இது,” என்று கெய்ர் ஸ்டார்மர் மேலும் கூறினார்.

சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் முன்னர் கூறியிருந்தது. செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது, ஐநாவின் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. இவற்றில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் அரபு குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணி சேர நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் தொடங்கி 662 நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேல் காசாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இறப்பு எண்ணிக்கை 60,034 ஐ எட்டியுள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 36 பேர் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, 88 குழந்தைகள் உட்பட 147 பேர் மரணமடைந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.