Home Blog Page 69

முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையிர் தாக்குதல் : இம்ரான் மஹ்ரூப் கண்டனம்

முத்து நகர் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை – முத்து நகர் பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டது.

இந்த அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் கண்டிக்கதக்கது என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லாத நிலை!

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயல்களான யாழ்ப்பாணம் நல்லூர் சங்கானை, உடுவில், சாவகச்சேரி கரவெட்டி ,பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமைகள் உள்ள நிர்வாக உத்தியோத்தர் அனேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றம் நிர்வாக உத்தியோத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை  இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக தொடர்ந்து கடமையில் உள்ளார்.

ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை ,நெடுந்தீவு ஊர்காவற்துறை, காரைநகர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோத்தர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபு: அம்பிகா சற்குணநாதன் கருத்து

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபைத் தயாரிப்பதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அண்மையில் வேண்டுகோள்விடுத்திருந்தது. அதற்கமைய அம்பிகா சற்குணநாதனால் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9 ஆவது பிரிவானது குறித்தவொரு நபரைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். எனவே உயிரிழப்பையோ அல்லது படுகாயத்தையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அரச பயங்கரவாதத்தைத் தூண்டுதல், குறித்தவொரு சமூகப்பிரிவினரை ஒடுக்குதல் அல்லது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பொன்றையோ கட்டாயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சர்வதேச பிரகடனங்களில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகிய மூன்று விடயங்களும் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தில் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு அவ்வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும்.

அதேவேளை இவ்வரைவிலக்கணம் ‘தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு’ அல்லது ‘ஒடுக்குமுறை வன்முறை’ அல்லது ‘அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு’ போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும்.

சட்ட அமுலாக்கத்தில் இராணுவமயமாக்கல்

பயங்கரவாதக்குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சரத்துக்கள் புதிய வரைபில் உள்வாங்கப்படக்கூடாது.

பொலிஸ் காவல்

கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நபர், கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.

சட்ட உதவி மற்றும் குடும்பத்தாருடனான தொடர்பாடல்

பயங்கரவாதக்குற்றத்துக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சட்ட உதவியை நாடுவதற்கான உரிமை கட்டாயம் உறுதிசெய்யப்படவேண்டும். ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நபரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவரிடம் சட்டத்துக்கு முரணான வகையில் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும், குடும்பத்தினர் தமது உறவினர் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றி அறிந்துகொள்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவரை பார்வையிடல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையேனும் முன்கூட்டிய அறிவிப்பின்றி நீதிவான் சென்று பார்வையிடல் மற்றும் கண்காணித்தல் எனும் சரத்தின் செயற்திறனை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.

ஜனாதிபதிக்கான மட்டுமீறிய அதிகாரங்கள்

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் நீதிமன்ற அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது.

செம்மணியில் இன்றும் 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளில் 3 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் முதலாம் அமர்வில் 15 நாட்கள் அகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டாம் அமர்வு இன்றுடன் 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த 9 நாட்களில் மொத்தமாக 34 என்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இதுவரையில், மொத்தமாக 111 என்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 99 என்புக்கூடுகள் முழுமையான அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் 199 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 199 இந்திய கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்தி 27 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கை காரணமாக தங்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் பாதுகாப்பு தரப்பினர் உரிய முறையில் செயற்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தங்களிடம் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று விசாரணை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய கடற்றொழிலாளர்களை கவனத்திற் கொள்வதில்லை என்றும் அந்த மக்கள் கூறுகின்றனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கான சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கான எல்லை நிர்ணய செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய தேர்தல் முறைமைக்கான வரைவு விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதற்கான சட்ட வரைவை விரைவாக நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று பெபரல் அமைப்பு உட்பட்ட பல அமைப்புக்கள்  கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வையை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே வலியுறுத்தல்!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே என்ற சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, குறித்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இந்த அகழ்வினை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாக விபரித்துள்ளது.

எனினும், அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மினசோட்டா நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக செம்மணி மற்றும் மன்னார் போன்ற பிற இடங்களில் தோல்வியுற்ற விசாரணைகளை மேற்கோள்காட்டி, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயத்தை முறையாக விசாரிப்பதற்கு ஒரு தேசிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததையும் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் அரசியல்மயமாக்கல் மற்றும் பயனற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ள ஆணைக்குழு, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று   (29) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் போரின் பின்னர் தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லாமையால், வேலைவாய்ப்பு சவாலாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பவற்றுக்கான வளம் சிறப்பாக உள்ளபோதும், மூலப்பொருட்களாகவே இங்கிருந்து ஏனைய இடங்களுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்த ஆளுநர், அங்கு பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் ஊடாக இங்குள்ள உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை இன்மையால் ஏற்படும் பாதிப்பையும் பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், போருக்கு முன்னர் இருந்த ஏற்று நீர்பாசனத்தையும் மீள ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தான விமான சேவைகள் தொடர்பிலும் தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்துக்கான நேரத்தை குறைக்கும் நோக்குடன், கட்டுநாயக்காக – பலாலி இடையேயான இணைப்பு விமானச் சேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

பொருளாதார மேம்பாட்டுக்காக முதலீடுகளின் அவசியத்தை தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதன் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடந்த காலங்களில் இங்கு நிலவிய இலஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக பெருமளவு முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்றதைக் குறிப்பிட்ட ஆளுநர் தற்போதைய சூழலில் பெருமளவு முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக முன்வருவதாகத் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து செல்வதாகவும், அதனுடன் தொடர்புடைய முதலீட்டுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக இணைப்பு வீதிகள், இறங்குதுறைகள் புனரமைப்பு என்பன முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். தற்போது திருவிழாக் காலம் என்பதால் வடக்கு மாகாணத்தை நோக்கி அதிகளவு சுற்றுலாவிகள் வருகின்றனர் எனத் தெரிவித்த ஆளுநர், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளும் வடக்கை நோக்கி அதிகம் வருகின்றனர் என்று கூறினார்.

அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளமையை இந்த சந்திப்பின் ஊடாக தெரியப்படுத்திய ஆளுநர், உலக வங்கியைக் கூட இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதி பணித்துள்ளமையையும் குறிப்பிட்டார்.

ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்வதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த காலங்களை விட வடக்கு மாகாணத்துக்கு மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளமையையும் ஆளுநர் தெரியப்படுத்தினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், செம்மணி புதைகுழி விவகாரம், தையிட்டி திஸ்ஸவிகாரை விவகாரம், மீள்குடியமர்வுச் செயற்பாடு, சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.

மேலும், மாகாண சபைத் தேர்தல், மாகாண சபை முறைமை தொடர்பாகவும் ஆளுநரிடம், தூதுக் குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த காலங்களில் மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுக்கு பயணம்

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த பேராளர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இளைஞர் அணி தலைவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இரு நாடுகளினதும் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த கட்சிகளிடையிலான அரசியல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் முதல் தடவையாக நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.

இக்குழுவினர்  இந்தியாவின் டில்லி – NCR,  மற்றும் பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விஜயத்தின் மூலமாக இந்தியாவின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், பொருளாதார நவீனத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஜனநாயக பாரம்பரியங்கள் மற்றும் அதன் செழிப்பான கலாசார மரபு ஆகியவை குறித்த கலந்துரையாடியுள்ளனர்.

போர் நிறுத்தத்தை கம்போடியா மீறுவதாக தாய்லாந்து குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன.

எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர்.

இந்த நிலையில், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நேற்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று இரு நாடுகளும் அறிவித்தன.

இந்த நிலையில், கம்போடியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி, “போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், கம்போடிய படைகள் தாய்லாந்து எல்லைக்குள் பல பகுதிகளில் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தியதை தாய்லாந்து தரப்பு கண்டறிந்தது. இது ஒப்பந்தத்தை வேண்டுமென்றே மீறுவதாகவும், பரஸ்பர நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சியாகவும் அமைகிறது. எனவே, கம்போடியாவின் மீறல்களுக்கு தாய்லாந்து சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்