Home Blog Page 3078

“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எழுதப்பட்ட கடிதங்களும், அவரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செவ்விகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டிற்குப் பின்னர், சர்வதேசக் கூட்டுமுயற்சிகளுடன் தமிழ் இனவழிப்பு எனும் நிகழ்ச்சி நிரல் மிகத்தெளிவான முறையில்  ஐந்தாக் கட்ட ஈழப்போராக நடாத்தப்பட்டு வருகின்றது. ஏராளமான தமிழர்களும், தமிழீழச் செயற்பாட்டாளர்களும் இத்திட்டங்களுக்குள் அறிந்தும் அறியாமலும் சிக்குண்டுவிட்டனர்.

தேச விடுதலை, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற எமது தவிர்க்கமுடியாத,தவிர்க்ககூடாத கோட்பாடுகளை புறந்தள்ளி எம்மவர்கள் பலர் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மெய்யான விடுதலை பற்றி மீள வலியுறுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.book 2 cover print a4 “எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

இந்த நிலையில் இதுபோன்ற நூலின் மீள் வெளியீடு காலத்தின் தேவையாகிறது

எமது தேசிய சொத்தான இத்தகைய நூல்களை நாம் காண்பது அரிதாகிவிட்டது. இருக்கின்ற பல்வேறுபட்ட ஆவணங்கள் நூல்களை பலர் பதுக்கிவைத்து தமது தனியுடைமை போல் சொந்தம் கொண்டாடிவருகின்றனர்.

எமது தேசத்தின் வரலாற்றையும் , நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதையையும் தெளிவாக உணர்த்திநிற்கும் இத்தகைய நூல்கள் மற்றும் ஆவணங்கள் இன்றைய சந்ததிக்கு மட்டுமன்றி எமது எதிர்கால சந்ததிக்கும் அவசியமானவை.

எனவே இதனையுணர்ந்து நாம் அனைவரும் இவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்றி பரவலாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். இதன் அடிப்படையிலேயே ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஒப்பற்ற நூல் மீளவும் வெளிவருகிறது

நிகழ்வின் விபரங்கள்:

காலம்  –  04.08.2019 ஞாயிற்றுக்கிழமை,  காலை 11.00 மணி முதல்

இடம் –    தமிழர்களரி, 01 ஐரோப்பாத்திடல்  3008 பேர்ண், சுவிற்சர்லாந்து

                       தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.  

 

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது – தயாசிறீ

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறீ ஜெயசேகரா நேற்று (12) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து வழக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனியான பிரதேச செயலகத்தை வழங்குவதற்கு உறுதி வழங்கிய ரணில் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் ஒவ்வொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

தற்போதைய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் தான் இயங்கி வருகின்றது. எனவே ஐ.தே.க – த.தே.கூ அரசு என நாம் அதனை அழைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்!, கூட்டமைப்பின் தந்திரோபாயம் வெற்றி” அத்தனையும் வெறும் புனைவு என்கிறார் ஹரிஸ எம்பி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாமலிருக்கும் போது நிரந்தர கணக்காளரை நியமித்ததாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது போன்று அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பணிபுரியும் கணக்காளரை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தராக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததில் எந்தவித மாற்றமும் நடைபெற வில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மேலும்  எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வெளியான செய்தி முற்றிலும் சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். அதில் உண்மைகள் எதுவுமில்லை என மறுக்கிறேன் என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

கல்முனை உப செயலக விவகாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நிலையில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து பிரேரணை தொடர்பில் வாக்களிக்கும் தினமாக இருந்தது. கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழுவொன்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் பிரதமர் ரணிலை சந்தித்து கல்முனை பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் உப பிரதேச செயலக தரமுயர்த்தலினால் முஸ்லிம் சமூகத்துக்கு நடைபெற உள்ள அநீதிகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்ட போது பிரதமரினால் முஸ்லிங்களுக்கு அநீதி ஏற்படாவண்ணம் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முஸ்லிம் தூதுக்குழுவுக்கு திருப்தியாக அமைந்தது.

சட்டமுதுமானியும்,அரசியல் ஆய்வாளரும் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வரும் வை.எல்.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஹாலித், தொழிலதிபர் ஜிப்ரி (கம்பளை ஜிப்ரி), கல்முனை வர்த்தகசங்க தலைவர் கே.எம்.சித்திக், சட்டத்தரணி யூசுப், போன்ற கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழு கலந்துகொண்டிருந்த பிரதமருக்கும் முஸ்லிம் தரப்புக்குமான சந்திப்பின் போது அங்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை விவகாரத்தில் சில விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாகவும் அது சம்பந்தமாக பேச விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்புடன் பேச விரும்புவதாக தெரிவித்த சுமந்திரன் அவர்கள் கணக்காளர் விவகாரத்தை தெரிவித்த போது ஓரிரு வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்க இருக்கும் இவ்வேளையிள் இது தேவையில்லாத ஒன்றாகும் என முஸ்லிம் தூதுக்குழு கடுமையாக எதிர்த்தவுடன் பிரதமரும் கணக்காளர் நியமனம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என அங்கு தெரிவித்தார். நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து நிரந்தர கணக்காளரை நியமிக்க உடன்படாமல் இருந்தோம்.

பின்னர் பிரதமரின் சந்திப்பில் நடைபெற்ற விடயங்களை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் அடங்கலாக அங்கிருந்த எங்கள் 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தெரிவித்தவுடன் மாலை ஆறு மணிமுதல் பிரதமரை நாங்கள் எல்லோரும் சந்தித்து எங்களுடைய பிரச்சினைகளை தெளிவாக விளக்கினோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எவ்வித முன்னெடுப்புக்களுக்கும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்பதை தெளிவாக வலியுறுத்தி பேசினோம். வாக்களிப்பு நடைபெற சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கணக்காளர் விவகாரத்தில் எவ்வித முடிவும் செய்யவில்லை என்பதை உறுதிபட கூறினார்.

பிரதமரின் சந்திப்பில் என்ன நடைபெற்றது, அங்கு என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பதை கலந்து கொண்டிருந்த கொழும்பு வாழ் முஸ்லிம் புத்திஜீவிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்றாக அறிவார்கள் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்

இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் மண்ணை விட்டு மறைந்தமை வேதனையே.

1996இல் முல்லைத்தீவு பகுதியிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து, பின்னர்  அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .66287131 619701611852527 3878257938170642432 n இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.

உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் அன்பை வென்றெடுத்தார்.

2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .

2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உக்கிரம் அடைந்த நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .

தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் மறைவுக்கு தமிழர் நாம் எமது இறுதி வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்.

நன்றி – சிவவதனி பிரபாகரன்

 

தமிழர்களின் நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளைப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் சொந்த நிலங்களில் 27.5 ஏக்கர் காணிகளை பொது மக்களுக்கு மீள வழங்கும் நிகழ்வு நேற்று (12) அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இக்காணிகளை மீளவும் தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமைவாக இந்த காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் ஆளுநர் இந்தக் காணிக்குரிய ஆவணங்களை யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கினார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த 2963 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டதுடன், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் சொந்த நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்குவது போன்ற ஒரு நிகழ்விற்கு தலைமை தாங்கிய தமிழரான ஆளுநர், தனது செயலில் ஒரு தன்னிறைவை எட்டியது போல படங்கள் அமைந்துள்ளது.

 

 

 

 

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD – 11 விமானம் நேற்று (12) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்தது.  அமெரிக்கத் தயாரிப்பான இந்த விமானம் அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடியது.

கடந்த நாட்களில் இந்த விமானம் சிலநாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. NCSA உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த விமானமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த USS John C.Stennis போர்க் கப்பலுக்கு கட்டுநாயக்க ஊடாக ஏற்கனவே பொருட்கள் பரிமாறப்பட்டுள்ளன.

இதேவேளை பஹ்ரெனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு WGN 1710 இலக்க விமானம் வருகை தந்துள்ளது. பஹ்ரெனிலிருந்து கட்டுநாயக்காவிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள், விசேட சரக்கு விமானங்களின் ஊடாக, கட்டுநாயக்காவிலிருந்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விமானம் வந்ததை உறுதி செய்த சுங்கப்பகுதியினர் அதில் என்ன பொருட்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் இல்லை, சோதனை செய்யவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் போதிலும், விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட மாட்டாது என சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

 

சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி

சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் தேர்தல் தொடர்பாக சட்டவாளர்களும், வயதானவர்களும் கலந்துயைரடல் ஒன்றை மேற்கொண்டிருந்தவேளையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அல்கைடாவுடன் தொடர்புடைய அல்-சபாப் எனப்படும் ஆயுதக்குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், சோமாலியா அரசை கவிழ்ப்பதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும், சோமாலியா காவல்த்துறை தெரிவித்துள்ளது.

முதலில் கார்க் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் ஆயுததாரிகள் விடுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது, பெருமளவான சடலங்கள் விடுதிக்குள் கிடக்கின்றன. எனினும் நாம் விடுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என படைத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் – இந்தியா கடுமையான எதிர்ப்பு

அமெரிக்காவுக்கும் – சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒப்பந்தத்தை இந்தியா விரும்பவில்லை எனவும், அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் படைத்தளங்களை சிறீலங்காவில் அமைப்பதற்கு வழி ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்காவுடன் எந்த உடன்பாட்டிலும் கைச்சாத்திடவில்லை என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை (10) தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தியா மதிக்கின்றது.

தனது அயல்நாட்டில் இடம்பெறும் அன்னியநாட்டு ஊடுருவலை இந்தியா கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் கேந்திர நலன்களுக்கு அது அவசியமானது எனவும் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை தான் அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவின் இறைமையை பாதிக்கும்வண்ணம் அன்னிய நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை, ஜே.ஆர் ஜெயவர்த்தனா மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் பரிமாறப்பட்ட கடிதங்களிலும் திருமலைத்துறை முகத்தையோ அல்லது வேறு எந்த துறைமுகத்தையோ அன்னிய நாடுகளுக்கு வழங்ககூடாது என்ற உடன்பாடுகள் இருந்ததாக ரணில் கடந்த புதன்கிழமை தனது உரையில் தெரிவித்திருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கு கொள்கையில் பற்றுறுதியான பலமான தலைமை யொன்று அவசியம்(நேர்காணல் -2) – வசந்தராஜா

தமிழினத்திற்கு கொள்கைப்பற்றுறுதியான பலமான தலைமையொன்று அவசியமாகின்றது என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் .வசந்தராஜா இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் இறுதிப்பகுதி வருமாறு,

 கேள்வி:- தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட பௌத்த, சிங்கள மயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை ஏனைய தரப்புக்களுடன் கூட்டிணைந்து எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது?

பதில்:- தாயகத்தில் தமிழர்களின் இருப்பினையே முதலில் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆகவே தாயகத்தில் பௌத்த, சிங்கள மயமாக்கல் நடைபெறுகின்றது என்று கூறுகின்ற அனைத்து தரப்புக்களும் பேதங்களை மறந்து அச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக முதலில் ஒன்றுபட வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணத்தினைக் கூற முடியும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை தரப்புக்களால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தமானது அவர்களை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. கேடுகெட்ட காலம் குடும்பத்தை நெருங்க இணைக்கும் என்றொரு பழமொழி உள்ளது.

அதற்கமைவாகவே இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகியிருந்தனர். தற்போது, தனித்தனியாக இருந்த முஸ்லிம் தரப்புக்கள் ஒன்றுபட்டு கூட்டாக தீர்மானித்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுபட்டு தம்மினம் சார்ந்த பிரதிநிதித்துவங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறான நிலைமையொன்று சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குள் ஏற்படுகின்றபோது ஏன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள் மத்தியில் ஏற்படக்கூடாது என்பது தான் கிழக்கு மாகாண மக்களின் மனக்கிடக்கையாக உள்ளது.

தமிழ் மக்கள் பேரவை என்பது சிவில் அமைப்பொன்றாகும். அது அதிகாரங்களைக் கொண்ட அரசியல் கட்சியல்ல. சிவில் அமைப்பென்ற வகையில் தனது முயற்சிகளை பேரவை எடுத்தே வருகின்றது. இருப்பினும் அரசியல் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்மூலம் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளால் எமது இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு முதற்கட்டமாக தடையை போட முடியும்.

கேள்வி:- ஒட்டுமொத்த தமிழ் தரப்புக்களின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைவதற்கான சிறந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. காரணம், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினை டெல்லிக்கு அழைத்திருக்கின்றார். தற்போதைய நெருக்கடியான சூழலை புரிந்து கொண்டு அனைத்து அரசியல் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அடுத்த கட்டம் தொடர்பான உரிய கலந்துரையாடல்களைச் செய்ய வேண்டும். அதனைவிடுத்து தனித்து இயங்க முயல்கின்றபோது காரியங்கள் கைகூடுவது சந்தேகம் தான். அரசியல்வாதிகள், தமது சுயவிருப்பில் தீர்மானங்களை எடுத்து தனித்தனியாக பிரிந்து நிற்கின்றபோது, பொதுமக்களின் பங்களிப்பு, புத்திஜீவிகளின் பங்களிப்பு என எதுவுமே முழுமையாக பெறமுடியாத சூழுலே தோற்றம் பெறும். இது தமிழ் மக்களின் எதிர்காலத்தினை ஆபத்திற்குள் தள்ளிவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு பேருக்கு சொந்தமான கட்டமைப்பு அல்ல. தமிழ் மக்கள் பலவீனமான தலைமையொன்றை விரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது தமிழ் மக்கள் கூட்டணியிலிருந்தோ பலமான கொள்கையில் பற்றுறுதியான தலைமையொன்றையே எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே அவ்விதமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான கரிசனைகளையே கொண்டிருக்கவேண்டும். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா தற்போது தான் கட்சியை உருவாக்கியுள்ளார். கொள்கை ரீதியிலானவர்களை ஒன்றிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருக்கான வளங்கள் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று கூறிவரும் கூட்டமைப்பே ஒன்றுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் நழுவிப்போகின்றபோது அது தமிழினத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தினையே ஏற்படுத்துவதாக அமையும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கட்டமைப்பாக செயற்படுவதற்கு தயாரில்லை. கொள்கையிலிருந்து விலகிச் செல்கின்றது. அண்மைய காலங்களில் பேரம்பேசும் சக்தியை இழந்து சரணாகதி அரசியல் நிலைக்குச் சென்றுவிட்டது என்பது தான் அதன் மீதுள்ள விமர்சனமாக உள்ளது. இந்த விமர்சனத்தினையே கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பால் ஒன்றுபடுத்துவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க முடியுமா?

பதில்:- உலக சரித்திரங்களை எடுத்துப்பார்க்கின்றபோது பிரிந்து நின்றவர்கள் ஒன்றிணைந்து எத்தனையோ காரியங்களை செய்துள்ளார்கள். ஆகவே முடியாது என்று எதுமில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளும் விட்டுக்கொடுப்புக்களும், மக்கள் நலன்கள் சார்ந்த மனப்பான்மையுமே அவசியமாகின்றது. தமிழர் தரப்பினைப் பொறுத்தவரையில் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்படாத நிலைமையல்லவா தொடர்கின்றது.

கேள்வி:- கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ஏதேச்சதிகார போக்கினால் தான் தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்து வருகின்றதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் மாற்று தமிழ்த் தேசிய தளம் வலுவடைவதற்கான சந்தர்ப்பங்களை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

பதில்:- மாற்று அணி உருவாகுவதில் தவறில்லை. கொள்கைரீதியான அவ்வாறான அணி உருவாக்கப்படவேண்டியது தற்போது அவசியமாகின்றது. எனினும், அத்தகைய அணியொன்று உருவாக்குகின்றபோது, பலவீனங்களையும், விமர்சனங்களையும் கொண்ட தமிழரசுக்கட்சியையும், கூட்டமைப்பையும் அதற்குள் உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனைகளும் இல்லாமலில்லை. ஏனெனில் தமிழரசுகட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீண்டகாலமாக செயற்பட்டு வருவதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஆகவே அக்கட்சியின் பலவீனத்தன்மையை உணர்ந்து மாற்று அணியில் உள்வாங்குவது தமிழ் மக்களுக்கே நன்மை பயப்பதாக இருக்கும்.

கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கு வாழ் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? எதிர்காலத்தில் தமிழர் தாயகம் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- கிழக்கில் ஒருசில சிறு தமிழ் குழுக்கள் வடக்குடன் கிழக்கு சேரக்கூடாது என்ற மனநிலையிலும் இருக்கின்றார்கள். பெரும்பாலான தமிழர்களின் விருப்பம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு ஒன்றிணைந்து சமஷ்டி ஆட்சி உருவாக வேண்டும் என்பதே ஆகும். ஆனால், இஸ்லாமிய சமூகத்திடம் வடக்குடன் இணைவது தொடர்பான விடயத்தில் எதிர்மறையான சிந்தனையையே கொண்டிருக்கின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் என்றால் ஆகக்குறைந்தது ஒருமொழிபேசுகின்ற இரு சமூகங்களும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டியுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இரு சமூகங்களிடையே மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனையும் தாண்டி இரு சமூங்களும் ஒன்றுபட வேண்டும் என்றால் இருதரப்பிற்கும் இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக தாக்குதலின் பின்னர் இஸ்லாமியர்களைப் பார்த்து தமிழர்கள் அச்சப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. இவ்வாறான அச்சமான சூழல் நிலவுகின்றபோது எவ்வாறு இரு சமூங்கள் ஒன்றுபட முடியும் என்ற கேள்வியும் உள்ளது. ஆகவே அச்சத்தினை உருவாக்கும் சமூகமான இஸ்லாமிய சமூகமே அதனை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வெண்டும்.

மேலும் முஸ்லிம்கள் வடக்கும் கிழக்கும் இணைவதற்கு விரும்பாத சூழலில் அதனை தாண்டி வடக்குகிழக்கினை இணைப்பதற்கான அணுகுமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இராசதந்திர ரீதியான நகர்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது. முஸ்லிம்களுக்கான  தனியலகினை வழங்கியாவது  வடக்கும் கிழக்கும் இணைந்தால் தான் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டும். அதற்கான யுக்திகளை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து வகுக்க வேண்டும்.

கேள்வி:- கூட்டமைப்புமாமா வேலைபார்க்க கூடாது என்று மிகக்கடுமையாக நீதியரசர் விக்கினேஸ்வரன் விமர்சித்துள்ள நிலையில் பிரதான தலைவர்களுக்கு இடையிலான இடைவெளி பகிரங்கமாகின்றதல்லவா?

பதில்:- ஆம், விக்கினேஸ்வரன் ஐயா, நல்லெண்ணங்களையும், சிந்தனைகளையும், யதார்த்தங்களையும், தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாடுகளையும் கொண்டவர். தமிழ் மக்களின் உள்ளத்து வலிகளையும் மக்கள் மீதுள்ள அதீத அக்கறையின் வெளிப்பாடாக அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழ்த் தலைவர்கள் தமக்குள் முரண்பாடுகளை வளர்க்காது கொள்கைப்பற்றுடன் மக்களின் உரிமைக்காக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் மனநிலையாகின்றது. இதனை அவர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

 

சூடானில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டது – சூடான் அரசு

சூடானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியை தாம் முறியடித்துள்ளதாக சூடானை ஆட்சிபுரியும் படைத்துறை சபை நேற்று (11) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்ட 16 படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணிபுரிந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற படை அதிகாரிகளுமே இந்த புரட்சிக்கு திட்டமிட்டவர்கள். ஆனால் சூடான் இராணுவத்தினர் அதனை முறியடித்துள்ளனர்.

தற்போதைய இந்த நடவடிக்கையானது படைத்துறை சபையின் அதிகாரங்களை சனநாயக நடைமுறைகளுக்கு மாற்றும் பேச்சுக்களுக்கு தடையாக அமைந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு உதவிபுரிந்த மேலும் பல படை அதிகாரிகளை நாம் தேடிவருகின்றோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.