தமிழினத்திற்கு கொள்கையில் பற்றுறுதியான பலமான தலைமை யொன்று அவசியம்(நேர்காணல் -2) – வசந்தராஜா

தமிழினத்திற்கு கொள்கைப்பற்றுறுதியான பலமான தலைமையொன்று அவசியமாகின்றது என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் .வசந்தராஜா இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் இறுதிப்பகுதி வருமாறு,

 கேள்வி:- தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட பௌத்த, சிங்கள மயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை ஏனைய தரப்புக்களுடன் கூட்டிணைந்து எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது?

பதில்:- தாயகத்தில் தமிழர்களின் இருப்பினையே முதலில் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆகவே தாயகத்தில் பௌத்த, சிங்கள மயமாக்கல் நடைபெறுகின்றது என்று கூறுகின்ற அனைத்து தரப்புக்களும் பேதங்களை மறந்து அச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக முதலில் ஒன்றுபட வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணத்தினைக் கூற முடியும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை தரப்புக்களால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தமானது அவர்களை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. கேடுகெட்ட காலம் குடும்பத்தை நெருங்க இணைக்கும் என்றொரு பழமொழி உள்ளது.

அதற்கமைவாகவே இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகியிருந்தனர். தற்போது, தனித்தனியாக இருந்த முஸ்லிம் தரப்புக்கள் ஒன்றுபட்டு கூட்டாக தீர்மானித்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுபட்டு தம்மினம் சார்ந்த பிரதிநிதித்துவங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறான நிலைமையொன்று சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குள் ஏற்படுகின்றபோது ஏன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள் மத்தியில் ஏற்படக்கூடாது என்பது தான் கிழக்கு மாகாண மக்களின் மனக்கிடக்கையாக உள்ளது.

தமிழ் மக்கள் பேரவை என்பது சிவில் அமைப்பொன்றாகும். அது அதிகாரங்களைக் கொண்ட அரசியல் கட்சியல்ல. சிவில் அமைப்பென்ற வகையில் தனது முயற்சிகளை பேரவை எடுத்தே வருகின்றது. இருப்பினும் அரசியல் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்மூலம் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளால் எமது இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு முதற்கட்டமாக தடையை போட முடியும்.

கேள்வி:- ஒட்டுமொத்த தமிழ் தரப்புக்களின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைவதற்கான சிறந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. காரணம், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினை டெல்லிக்கு அழைத்திருக்கின்றார். தற்போதைய நெருக்கடியான சூழலை புரிந்து கொண்டு அனைத்து அரசியல் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அடுத்த கட்டம் தொடர்பான உரிய கலந்துரையாடல்களைச் செய்ய வேண்டும். அதனைவிடுத்து தனித்து இயங்க முயல்கின்றபோது காரியங்கள் கைகூடுவது சந்தேகம் தான். அரசியல்வாதிகள், தமது சுயவிருப்பில் தீர்மானங்களை எடுத்து தனித்தனியாக பிரிந்து நிற்கின்றபோது, பொதுமக்களின் பங்களிப்பு, புத்திஜீவிகளின் பங்களிப்பு என எதுவுமே முழுமையாக பெறமுடியாத சூழுலே தோற்றம் பெறும். இது தமிழ் மக்களின் எதிர்காலத்தினை ஆபத்திற்குள் தள்ளிவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு பேருக்கு சொந்தமான கட்டமைப்பு அல்ல. தமிழ் மக்கள் பலவீனமான தலைமையொன்றை விரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது தமிழ் மக்கள் கூட்டணியிலிருந்தோ பலமான கொள்கையில் பற்றுறுதியான தலைமையொன்றையே எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே அவ்விதமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான கரிசனைகளையே கொண்டிருக்கவேண்டும். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா தற்போது தான் கட்சியை உருவாக்கியுள்ளார். கொள்கை ரீதியிலானவர்களை ஒன்றிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருக்கான வளங்கள் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று கூறிவரும் கூட்டமைப்பே ஒன்றுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் நழுவிப்போகின்றபோது அது தமிழினத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தினையே ஏற்படுத்துவதாக அமையும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கட்டமைப்பாக செயற்படுவதற்கு தயாரில்லை. கொள்கையிலிருந்து விலகிச் செல்கின்றது. அண்மைய காலங்களில் பேரம்பேசும் சக்தியை இழந்து சரணாகதி அரசியல் நிலைக்குச் சென்றுவிட்டது என்பது தான் அதன் மீதுள்ள விமர்சனமாக உள்ளது. இந்த விமர்சனத்தினையே கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பால் ஒன்றுபடுத்துவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க முடியுமா?

பதில்:- உலக சரித்திரங்களை எடுத்துப்பார்க்கின்றபோது பிரிந்து நின்றவர்கள் ஒன்றிணைந்து எத்தனையோ காரியங்களை செய்துள்ளார்கள். ஆகவே முடியாது என்று எதுமில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளும் விட்டுக்கொடுப்புக்களும், மக்கள் நலன்கள் சார்ந்த மனப்பான்மையுமே அவசியமாகின்றது. தமிழர் தரப்பினைப் பொறுத்தவரையில் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்படாத நிலைமையல்லவா தொடர்கின்றது.

கேள்வி:- கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ஏதேச்சதிகார போக்கினால் தான் தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்து வருகின்றதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் மாற்று தமிழ்த் தேசிய தளம் வலுவடைவதற்கான சந்தர்ப்பங்களை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

பதில்:- மாற்று அணி உருவாகுவதில் தவறில்லை. கொள்கைரீதியான அவ்வாறான அணி உருவாக்கப்படவேண்டியது தற்போது அவசியமாகின்றது. எனினும், அத்தகைய அணியொன்று உருவாக்குகின்றபோது, பலவீனங்களையும், விமர்சனங்களையும் கொண்ட தமிழரசுக்கட்சியையும், கூட்டமைப்பையும் அதற்குள் உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனைகளும் இல்லாமலில்லை. ஏனெனில் தமிழரசுகட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீண்டகாலமாக செயற்பட்டு வருவதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஆகவே அக்கட்சியின் பலவீனத்தன்மையை உணர்ந்து மாற்று அணியில் உள்வாங்குவது தமிழ் மக்களுக்கே நன்மை பயப்பதாக இருக்கும்.

கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கு வாழ் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? எதிர்காலத்தில் தமிழர் தாயகம் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- கிழக்கில் ஒருசில சிறு தமிழ் குழுக்கள் வடக்குடன் கிழக்கு சேரக்கூடாது என்ற மனநிலையிலும் இருக்கின்றார்கள். பெரும்பாலான தமிழர்களின் விருப்பம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு ஒன்றிணைந்து சமஷ்டி ஆட்சி உருவாக வேண்டும் என்பதே ஆகும். ஆனால், இஸ்லாமிய சமூகத்திடம் வடக்குடன் இணைவது தொடர்பான விடயத்தில் எதிர்மறையான சிந்தனையையே கொண்டிருக்கின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் என்றால் ஆகக்குறைந்தது ஒருமொழிபேசுகின்ற இரு சமூகங்களும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டியுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இரு சமூகங்களிடையே மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனையும் தாண்டி இரு சமூங்களும் ஒன்றுபட வேண்டும் என்றால் இருதரப்பிற்கும் இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக தாக்குதலின் பின்னர் இஸ்லாமியர்களைப் பார்த்து தமிழர்கள் அச்சப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. இவ்வாறான அச்சமான சூழல் நிலவுகின்றபோது எவ்வாறு இரு சமூங்கள் ஒன்றுபட முடியும் என்ற கேள்வியும் உள்ளது. ஆகவே அச்சத்தினை உருவாக்கும் சமூகமான இஸ்லாமிய சமூகமே அதனை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வெண்டும்.

மேலும் முஸ்லிம்கள் வடக்கும் கிழக்கும் இணைவதற்கு விரும்பாத சூழலில் அதனை தாண்டி வடக்குகிழக்கினை இணைப்பதற்கான அணுகுமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இராசதந்திர ரீதியான நகர்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது. முஸ்லிம்களுக்கான  தனியலகினை வழங்கியாவது  வடக்கும் கிழக்கும் இணைந்தால் தான் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டும். அதற்கான யுக்திகளை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து வகுக்க வேண்டும்.

கேள்வி:- கூட்டமைப்புமாமா வேலைபார்க்க கூடாது என்று மிகக்கடுமையாக நீதியரசர் விக்கினேஸ்வரன் விமர்சித்துள்ள நிலையில் பிரதான தலைவர்களுக்கு இடையிலான இடைவெளி பகிரங்கமாகின்றதல்லவா?

பதில்:- ஆம், விக்கினேஸ்வரன் ஐயா, நல்லெண்ணங்களையும், சிந்தனைகளையும், யதார்த்தங்களையும், தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாடுகளையும் கொண்டவர். தமிழ் மக்களின் உள்ளத்து வலிகளையும் மக்கள் மீதுள்ள அதீத அக்கறையின் வெளிப்பாடாக அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழ்த் தலைவர்கள் தமக்குள் முரண்பாடுகளை வளர்க்காது கொள்கைப்பற்றுடன் மக்களின் உரிமைக்காக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் மனநிலையாகின்றது. இதனை அவர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.