Home Blog Page 3075

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா களனியில் ஊடக சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார்

புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியிடாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பயங்கரவாத தாக்குதுல்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றால், அது தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

சாட்சியத்திற்காக பிரதமர், ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சாட்சியங்கள் மிகவும் பெறுமதியானவை. சாட்சியமளித்த பின்னர் மீண்டும் தெரிவுக் குழுவிற்கு சிலர்  அழைக்கப்படவுள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கன்னியா விவகாரம் அவசர கூட்டத்திற்கு மனோ அழைப்பு – பங்குபற்றுமா கூட்டமைப்பு

கன்னியாவில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பெருமளவில் நேற்று (16) மேற்கொண்ட போராட்டத்தை தடுப்பதற்கு சிங்களக் காடையர்களும் சிங்கள பௌத்த துறவிகளும் வன்முறைகளைத் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ் மக்கள் மீது கொதி நீரையும் ஊற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறீலங்காவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறசேனவை அமைச்சர் மனோ கணேசன் தொடர்பு கொண்டபோது கன்னியாவில் விகாரை அமைக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்கு தான் கூறவில்லை என மைத்திரி தெரிவித்துள்ளார்.

இந்த விவாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு மைத்திரிபால இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாளை (18) காலை அரச தலைவர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனோவின் இந்த அழைப்பை ஏற்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒற்றுமையை காண்பிப்பார்களா? என்பது தான் தற்போது உள்ள முக்கிய கேள்வி?

ஏனெனில் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றிவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரட்டக்களத்தில் மக்களுடன் நின்று போராடுவது போன்று நாடகம் ஆடிவிட்டு பின்னர் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக சந்திப்புக்களை தவிர்ப்பது வழமையான செயற்பாடுகள் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதியான முடிவு எட்டப்படும்வரையில் விகாரை கட்டும் பணிகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என திருமலைமாவட்ட செயலாளர் புஸ்பாகுமாராவை பணித்துள்ளதாக மனோ மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதி சிறையில் உண்ணாவிரதம்

புதிய மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான,   திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்பவர் பிணை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

2008  ஜனவரி கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஒரு வழக்கில்  ஆயுள் தண்டனையையும் மற்றைய வழக்கில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும், அதனால் போதுமான சாட்சியங்களைத் திரட்ட முடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியிருந்தார்.

கன்னியாவில் முஸ்லிம்கள் பிரதேசங்களும் உள்ளன – உலமா சபை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் முஸ்லிம் அடையாளங்கள் உள்ளதாகவும், முஸ்லிம்களே அதனை பாதுகாத்ததாகவும் முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கன்னியா என்பது தமிழ் பேசும் மக்களின் éமியாகும். இங்கு காலகாலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். கன்னியா வெந்நீரூற்று கிணற்றிற்கு அருகில் ஒரு சிறிய பள்ளிவாசலும் 40 அடி இரு முஸ்லிம் சமாதிகளும் இருக்கின்றன. இவை பல்லாயிரம் வருடத்திற்கு முந்தியவை. இவை இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி என சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இராவணன் இந்துவா, முஸ்லிமா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும், இந்த சமாதிகளை பாதுகாத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு கன்னியாவிற்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த போது பள்ளியும், சமாதியும் சிதைக்கப்பட்டன. இதனை சிங்களவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு ஐ.தே.க. ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது.

இதேவேளை கன்னியாவில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய தமிழ் மக்கள் மீது வெந்நீர் ஊற்றியமை மிகமோசமான இனவாத செயற்பாடாகும். இந்த ஆக்கிரமிப்பை தமிழ் பேசும் சமூகம் இணைந்து கண்டிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்காவே மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு காரணம் – ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள தனக்கு சார்பான நாடுகளுக்கு பெருமளவான ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, ஏனைய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய கிழக்கில் பதற்றத்திற்கான காரணம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் சரீப் கடந்த திங்கட்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய கிழக்கில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளதாரத் தடைகள் நீக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆணுவாயுத உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணைந்தாலே நாம் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்போம்.

நீண்டதூர ஏவுகணைகள் தொடாபில் பேசுவதானால் அதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பேச வேண்டும்.

82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாம் 16 பில்லியன் டாெர்களை ஆயுதங்களுக்கு செலவிட்டுள்ளோம், ஆனால் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஐக்கிய அரபு இராட்சியம் 22 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. எமது மக்கள் தொகையில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட சவுதி அரேபியா 67 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அவர்கள் அமெரிக்காவின் ஆயுதங்களையே வாங்கியுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் தான் இந்த பிராந்தியத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் இந்தியாவில் குழப்பம்

சிறீலங்காவின் திவிரும்போல பகுதியில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொட-ர்பில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் ஆலயம் அமைப்பதை நடைமுறைப்படுத்தாது, அதனை சரிபார்க்கும் நடவடிககைகளில் மத்தியப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவராஜ் சிங் சோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையில் நேற்று (16) பலத்த வாக்குவதாம் ஏற்பட்டிருந்தது.

சிறீலங்காவில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் இடத்தில் அவருக்கு ஆலயம் அமைப்பதாக 2010 ஆம் ஆண்டு பாரதிய ஜதனாக் கட்சி தீர்மானித்திருந்தது. அதற்கு சிறீலங்கா அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

தற்போது கமல்நாத் அரசு சீதை கடத்தப்பட்டது உண்மையா என விசாரணை நடத்தப்போதவதாக தெரிவிப்பது மக்களை வேதனைப்படுத்தும் செயல் என சிவராஜ் தெரிவித்துள்ளார்.

அசோக வனத்தில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததை உலகமே அறிந்திருந்தது ஆனால் அதனை தற்போது இந்த அரசு விசாரணை செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆலயம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் சிவாரஜ் அரசு எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பி.சி சர்மா தெரிவித்துள்ளார். அவர்கள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய ஐ.நா சிறப்பு தூதுவர் சிறிலங்கா வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கில்மென்ற் நைலெற்சொசி வோல் நாளை 18 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் மக்கள் அமைதியாகவும் உரிமைகளுடனும் வாழ்கிறார்களா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐ.நா சிறப்புத் தூதுவர் 9 நாள் பயணமாக சிறீலங்கா வருகின்றார்.

அவர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வதுடன், அரசாங்க, ஊடகத்துறை, பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெறும் எனது பயணம் சிறீலங்காவில் வாழும் மக்களின் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் என ஐ.நா தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பன எவ்வாறு மக்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது என்பது தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்வதுடன், எதிர்வரும் வருடம் ஜுன் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 44 ஆவது கூட்டத்தொடரில் அவர் தனது அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கப்பல்களுக்கான எரிபொருள் நிலையத்தை சிறீலங்காவில் அமைக்கின்றது சீனா

இந்து சமுத்திரக் கடல் பகுதியால் பயணிக்கும் சீனாவின் வழங்கல் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் சிறீலங்காவில் அமைக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு வசதியாக சிறீலங்கா எரிபொருள் நிறுவனம் என்ற நிறுவனத்தை சீனா சிறீலங்காவில் பதிவு செய்துள்ளது. கப்பல்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் நிலையத்தையே சீனா சிறீலங்காவில் அமைக்கவுள்ளது. இந்த எரிபொருளை மின்சக்தி நிலையங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கை சிறீலங்காவில் சீனாவின் அடுத்த மிகப்பெரும் முதலீட்டுத் திட்டமாகும். சுயஸ் கால்வாய் மற்றும்; மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அம்பாந்தோட்டையை கடந்த செல்வதால் அங்கு அமைக்கப்படும் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் அதிக பொருளாதாரத்தை ஈட்டவல்லது என சீனாவின் நிறுவனம் தெரிவித்தள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு விகித எண்ணைக்கப்பல்கள் இந்த பாதையால் தான் செல்வதுண்டு.

இதனிடையே, அம்பாந்தோட்டைக்கு அருகில் 3.85 பில்லியன் டொலர்கள் முதலீடுகளைக் கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு இந்திய நிறுவனமான இந்தியன் அக்கோட் குழுமம் உடன்பாடு ஒன்றை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனமே முதலீடுகளை மேற்கொண்டு பராமரித்து வருவதுடன், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் தொன் கப்பல் எரிபொருளை தயாரிப்பதற்கும் சீனா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கு 34 14-07-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 34 14-07-2019

கன்னியா வெந்நீரூற்று கோவிலின் வரலாறு ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது!

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது என தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“சிங்கள–பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மகாவம்ச மைய வரலாறாக திரிபுபடுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றியலை திரிபுபடுத்தல்,புலமைசார் கற்கைநெறிகளின் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சிங்கள-பௌத்த மயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது, ஏனைய மதத்தலங்களோடு ஒப்பிடுகையில்,எல்லோருக்கும் தெரிந்த தரவுரீதியல் நிறுவப்பட்ட உண்மை.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மிகப் பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கம் குறிப்பாக பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் மிக வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான எதிர்வினை,நேர்மறையான, கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான பின்-முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் மிகச் சிறிய எதிர்வினை முயற்சிகள் அடித்தள மக்களால் ஒழுங்கமைக்ப்பட்டு வருவதோடு இவ் எதிர்வினை நடவடிக்கைகள் பாரியளவில் தமிழ் மக்கள் அரசியல் உரிமைசார்ந்து மாற்றத்தை கொண்டு வந்ததா என்பதை கடந்த ஒரு தசாப்தமாக ஆராயவேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறான எதிர்வினைகளை ஒரு சமூக இயக்கமாக மாற்றுகின்ற தலைமைத்துவவெளி இன்னும் வெறுமையாகவே உள்ளது.

சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட தந்திரோபாய நகர்வுகள் கட்டமைக்கப்படும் வரை காலனித்துவம் இன்னும் அகலமாக விரிந்து கொண்டே போகும்.

இன்று கன்னியா பிள்ளையார் கோவில் நாளை கோணேசர் கோவிலாகவும் இருக்கலாம்.

இந்த சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை தமிழ் அரசியல் தலைமைகள் இல்லை என்று நிராகரிக்க முடியாது.

இவ்வாறான சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரான மாற்றுவழியை தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்காதது அவர்களின் பொறுப்புக்கூறலிலிருந்து நழுவுவதாக அமையும்.

கன்னியா பிள்ளையார் கோவில் தொடர்பாக பல தரப்பினரிடம் இது பற்றி கலந்துரையாடி உள்ளோம். அது பற்றிய குறுகிய,நீண்டகால விளைவுகள் பற்றியும் தமிழின இருப்பின் கேள்விக்குட்படுதல் பற்றியும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தி உள்ளோம்.

ஆனால் இதுவரைக்கும் அசமந்தபோக்கு கடைப்பிடிக்கப்படுவது இது தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பவர்களின் வகிபங்கை சந்தேகம் கொள்ளச் செய்கின்றது.

இனியும் இவ்வாறான நிலைமை தொடரும் என்றால் மக்கள் மயப்படுத்தப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் மைய முன்னெடுப்புப் போராட்டங்கள் சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு தீர்வாக அமையும் என்றால் அவற்றை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறான போராட்ட முனைப்புக்கள் நாங்கள் வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்கு அப்பால் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையில் பல்லினத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு உறுதி செய்யும்.

இன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் எதுவுமே நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைக்குள் தமிழினம் வாழத் தள்ளப்படுகின்றது.

சிங்கள-பௌத்த காலனித்துவம் சிறீலங்காவில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை விரைவுபடுத்துகின்றது.

இது தொடர்பாக பரந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டு தீர்வுகள் தொடர்பாக விரைந்து செயற்பட ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழைத்து நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.