Home Blog Page 3060

முஸ்லிம் தேர்தல் தொகுதி உருவாக்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணாணையை தனித் தொகுதியாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து வாகரை புணாணை பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.

வாகரை புணாணை பிரதேச மக்களால் புணாணை புகையிரத நிலைய முன்பாக கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் தமிழர்களை ஏமாற்றாதே, தமிழர் நிலங்களை கபடத்தனமாக அபகரிக்க நினைக்காதே, புணாணை தமிழர் பூர்வீகம் பறிக்க நினைக்காதே, வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், தேர்தல் தொகுதிகளை பிரித்து தூண்டாதே அரசியல்வாதிகளே, தமிழர் நிலத்தினை பிரித்து இன வன்முறையை தூண்டாதே என்ற பல்வேறு வாசகங்களுடன் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளருமான கு.குணசேகரன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்குடா தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்க அரசாங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனவும், இது தொடர்பில் எங்களுக்கு எந்தவித தகவலும் தெரியாமல் இருந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கையானது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த கல்குடா தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.

மலையக இளைஞர் யுவதிகளும் விரைவில் ஆயுதம் ஏந்த நேரிடலாம் – வடிவேல் சுரேஷ்

நாட்டின் வடக்கு கிழக்கில் 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. இறுதியில் முஸ்லீம்களும் ஆயுதம் ஏந்தினர். மலையக மக்கள் மட்டுமே இதுவரை ஆயுதம் எந்தாமல் வீதிக்கு இறங்காமல் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் அப்பாவிகளாக இருக்கின்றனர்.

மலையக இளைஞர்களை நாம் மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஆனால் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் நெருக்கடிகளால் அவர்களையும் விரைவில் ஆயுதம் ஏந்த வைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்  குறிப்பிட்டார்.

பிறருடைய ஒப்பந்தங்களுக்காக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் அதேநேரம் பதில் பொலிஸ் மாஅதிபர், இவ்வாறான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை அவசரகால சட்டம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்திருப்பதால் அதனை நீடிக்கும் வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

பதுளை தெமோதரையிலுள்ள பழமை வாய்ந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடிய இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதன் மூலம் அவர்களுக்கு அங்கு விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்தில் விளையாடிய இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதன் மூலம் அவர்களுக்கு அங்கு விளையாடுவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பெற்றுக் கொடுத்த தெமோதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். அதேநேரம் அவருக்கு எதிராக பதில் பொலிஸ் மா அதிபர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் – காந்தகார் நெடுஞ்சாலையில் தற்கொ லைப் படையினர் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வழி யாக சென்ற பேருந்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட  34 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இது தலிபான் பயங்கரவா திகளின்   செயற்பாடாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில்இ ஆப்கானிஸ்தானில் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்இ பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற் கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.

சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜிளிமி 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.

இதுவரை 21 புதிய கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், 3 புதிய கோள்களை தற்போது டெஸ் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதில் ஒன்று 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அதற்கு நியி 357பீ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போன்ற உருவத்தை உடைய அந்தக் கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. அந்த கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப் பிட்டுள்ளனர்.

பொதுவேட்பாளராகக் கரு ஜயசூரிய?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

 

இந்த சமரசத் திட்டத்துக்குச் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பச்சை சமிக்ஞையும் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா அல்லது கரு ஜயசூரியவா என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் – இந்தச் சர்சையை முடிவுக்குக் கொண்டுவரும் இணக்க ஏற்பாடாக கரு ஜயசூரியவின் பெயர் பிரேரிக்கப் பட்டிருக்கின் றது.

 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழித்தல் என்ற கோட்பாட்டுடன் அதற்கான பொது வேட்பாளராகக் கரு ஜயசூ ரியவை இறக்குவது குறித்தே கட்சியின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது.

 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கும்போது நாட்டின் பிரதமருக்கே அதிக அதிகாரங்கள் கிட்டும். அப்படியான சூழலில் பிரதமராகப் பதவியில் இருப்பது நாட்டின் அரச தலைவர் பதவிக்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதைக் கவனத்தில் எடுத்தே இந்தத் திட்டத்துக்குப் பிரதமர் ரணில் விக்கிரசிங்க பச்சை சமிக்ஞை காட்டியிருக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரிய ஒரு வாக்குறுதியை அளிப்பாராயின் அரசியல் நிலைப்பாட்டுக்காக அதை அவர் மாற்றமாட்டார் என்ற பொது அபிப்பிராயம் பரவலாக இருப்பதாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்படுவதற்கு சாதகமான நிலை கட்சிக்குள் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் 5ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கரு ஜயசூரிய பொது வேட்பாளராகக் களமிறக்கப்படவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.

 

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்…

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன.

பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன்.

மாணவர்கள் ஆவலோடு சேர் என்ன கட்டுரை என்று கேட்டனர்.

என்னிடம் இப்போது இருந்தால்… என்று கற்பனைக் கட்டுரை எழுதுங்கள் என்று கூறினேன்.

அவ்வளவுதான் மாணவர்கள் ஆர்வத்தோடு கட்டுரை எழுதத் தொடங்கி 30 நிமிடங்களுக்குள் பூர்த்தியாக்கினர்.

மாணவர்களிடம் இருந்து குறித்த கட்டுரைகளை வாங்கும்போது அவர்கள் இட்ட தலைப்புக்களை அவதானித்தேன்.

என்னிடம் விமானம் இப்போது இருந்தால் என்று ஒரு மாணவன் எழுதியிருந்தான். என்னிடம் நாட்டை ஆளும் அதிகாரம் இப்போது இருந்தால் என்பது இன்னொரு மாணவனின் கட்டுரை.

மற்றொரு மாணவன் இட்டிருந்த தலைப்பு என்னைத் திகைக்க வைத்தது. என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் என்பதுதான் அவன் இட்ட தலைப்பு.

தலைப்புத் தந்த ஆச்சரியத்தோடு அந்த மாணவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் அதனைப் பெறுமதியாகப் பயன்படுத்துவேன்.

அதன்மூலம் எங்கள் மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ முடியும்.
இதை நான் எழுதும்போது ஏ.கே.47 ஆயு தத்தால் எப்படி நிம்மதியான வாழ்வை உருவாக்க முடியும் என்று இதைப் படித்துப் பார்க்கின்ற என் ஆசிரியர் தனக்குள் கேள்வி எழுப்பலாம்.

அந்தக் கேள்விக்கான பதிலையும் நான் தந்தாக வேண்டும்.
இன்று ஈழத் தமிழ் மக்கள் நாதியற்று இருப்பதற்குக் காரணமே நான் கூறிய ஏ.கே.47 எங்களிடம் இல்லாததுதான்.

அது இருந்திருந்தால்; தமிழ் அரசியல்வாதிகள் என்னிடம் வந்து, வரவு செலவுத் திட்டத் துக்கு ஆதரவு வழங்கலாமா? நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க முடியுமா? நீங் கள் சொல்வதன்படி நாங்கள் செய்கிறோம் என்று கைகட்டி நின்றிருப்பர்.

என்ன செய்வது அந்த 47 இல்லாததால், தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றி இம்மியும் சிந்திக்காமல் தங்கள் பாட்டில் எங்கள் அரசியல்வாதிகள் நடக்கின்றனர்.

தவிர, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விகாரை கட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்.

இருந்தபடி இருக்க விடுங்கள். இல்லையாயின் உங்கள் காயத்தை மாற்ற வேண்டி வரும் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பேன்.

அவ்வளவு தான் எல்லாம் சரியாக நடக்கும். இவற்றுக்கு மேலாக, இன்னும் சிலருக்கு ஏ.கே.47 பதிலளிக்கும்.

அதில் நுண்கடன் வழங்கிவிட்டு பாலியல் இலஞ்சம் கேட்பவர்கள் முன்னுரிமை பெறுவர் என்று அந்த மாணவனின் கட்டுரை இருந்தது.

கட்டுரையைப் பார்த்து விறுவிறுத்துப் போன நான் அதனைக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ஏதும் நடக்காதது போல இருந்து கொண்டேன்.

நன்றி: வலம்புரி

ஆலயங்கள் மீதான பௌத்தமயமாக்கலை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்

இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிர்வரும் 03ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

சமீப காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களான வெடுக்குநாரி சிவன் கோவில், கன்னியா பிள்ளையார் ஆலயம், கந்தப்பிள்ளை விநாயகர் ஆலயம் போன்றவையும், திருக்கேதீஸ்வர ஆலய வளைவு பிற மதத்தவர்களால் அழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு வருவதாலும் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதும் இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செயல்களை கண்டித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் எதிர்வரும் சனிக்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் நல்லை ஆதீன முன்றலில் இந்து அமைப்புக்களின் ஒன்றியமும் இந்து சமயப் பேரவையும் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அமைதிவழி செயற்பாட்டில் அனைத்து இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய அறங்காவலர், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு இந்துக்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வருமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கலை இலக்கியப் பேரவை மாநாடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ். பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் உள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில், தேசிய கலை இலக்கியப் பேரவை தலைவரும், தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டில் இணைந்து இயங்க விரும்புகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆரமவலர்கள் அனைவரையும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைத்துள்ளனர்.

சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவிந் எந்தவொரு பகுதியையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமாட்டாது என அமெர்க்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்க உதவுவதன் மூலம் சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்களிக்க அமெரிக்கா விரும்புகின்றது. புனரமைக்க முன்மொழியப்பட்ட அனைத்து வீதிகளின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை சிறிலங்காவே வைத்துக் கொள்ளும். எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா சொந்தமாகவோ, கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு எதிர்வரும் செம்டெம்பர் 7ஆம் திகதி அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் மக்கள் பேரவையின்  ஏற்பாட்டில் எதிர்வரும்  செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்.

இலங்கை மண்ணில் பெரும்பான்மை இனத்தின் ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றி காலம் கடத்துகின்ற தந்திரோபாயத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்தேறிய யுத்தம் தமிழின அழிப்புக்கானது என்பதைச் சர்வதேச சமூகம் ஏற்றுள்ள போதிலும்  தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புகளுக்கும் அவலங்களுக்கும் இன்னும்  நீதி கிடைக்கவில்லை என்பதை நடுநிலை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்வர்.

நல்லாட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்று   உறுதியளிக்கப் பட்டது. ஆனால் எதுவுமே நடந்தாகவில்லை. மாறாகப் புதுப் புதுப்பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின்பால் தமிழ்மக்களைத் திசை திருப்பி தமிழ்மக்களை உளவியல் ரீதியில் தாக்குகின்ற மிக மோசமான நடவடிக்கைகளை  பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும்  செய்து கொண்டே இருக்கின்றனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தமும் அப்படியே நின்று போயிற்று. அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பிய தமிழ் அரசியல் தரப்புகளும்  இப்போது கைவிரித்து,  இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டனர் என்ற உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுள்ளன.

இவைதவிர,  காணாமல் போனவர்களின் உறவுகள் இன்றுவரை  தங்கள் உறவுகள் எங்கே?, அவர்களுக்கு நடந்தது என்ன? என்று கேட்கின்றனர். மனிதவுரிமைகள் பற்றி அதிகமாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில்;  காணாமல் போன எங்கள் தமிழ் உறவுகளுக்கு நடந்தது என்ன? என்பதைக்கூட அறிய முடியாத அளவில் எங்கள் அவலங்கள் அவதானிக்கப்படாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் தமிழின விரோத செயற் பாடுகளைக் கண்டும் காணாமல் விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமை சர்வதேச சமூகத்திடம் இருப்பது  வேதனைக்குரியது.

ஆயினும் இத்தகையதோர் நிலைமைக்குப் பின்னால், பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்ற அதர்மங்களும் அட்டூழியங்களும் வலுவான முறையில்  சர்வதேசத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும்  முன்வைக்கப்படவில்லை என்பதை  ஏற்றுத்தானாக வேண்டும்.

இவைதவிர, தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களை சிறைகளில் முன்னெடுத்தனர்.  ஆனால்  இன்றுவரை  அவர்களுக்கு விடுதலை வழங்கப்படவில்லை என்றால், எங்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எவ்வாறாக  உள்ளதென்பதை  எவரும் புரிந்து கொள்ளமுடியும்.

இவையாவற்றுக்கும் மேலாக, தமிழர்களின் வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களை ஆக்கிரமிப்பதும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் அதனூடு தமிழர்களின் வரலாற்றுச் சான்றாதாரங்களை அழிப்பதும்  குறித்த இடங்களில் ஏலவே பௌத்த விகாரைகள் இருந்துள்ளன என்றும் அவை பௌத்த சிங்கள வரலாற்றிடங்கள் என்றும் பொய்ப்பிரசாரம் செய்கின்ற கொடுமைத்தனம்  வேகமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதன் உச்சமே கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை அமைக்கின்ற  நடவடிக்கையாகும்.
இந்நிலையில் தடுக்கவும் தட்டிக்கேட்கவும் தமிழர்கள் நாதியற்றவர்கள் என்று நினைக் கும் பேரினவாதத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

அதிலும் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் ஒன்றுபட்டு தங்கள் உரிமைக்காகப் பேரெழுச்சி கொண்டெழுவர் என்பதை  உலகிற்கு உறுதியாகச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில்  நாம் இருக்கின்றோம்.

இந்நிலையில் எமக்குள் இருக்கக்கூடிய அகமுரண்பாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு அரசியல் பேதங்களை மறந்து, எம் தமிழினம் சுதந்திரத்தோடும் உரிமையோடும் வாழவேண்டும். எங்கள் இனத்திற்கு அவலம் இழைத்தவர்கள் தண்டனை பெற வேண்டும். இன்றுவரை கண்ணீரும் கம்பலையுமாய் அலையும் எங்கள் உறவுகளின் துயரம் தீர்க்கப்படவேண்டும்;. தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பற்ற தமிழர் தேசமாக எழுந்து நிற்கவேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி  நடைபெறும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டுமென தமிழ்மக்கள் பேரவை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும்  கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது  அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில்  பங்கேற்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை.எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம்  திகதி  வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்களின்  மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகள், அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், மதபீடங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய, கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள் என அனைத்து அமைப்புகளும் ஒன்றாகத் திரண்டெழுந்து தமிழர்களின்  எழுச்சிப் பிரவாகத்திற்கு  உத்வேகம் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்கு மேலாக, தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும்  அநீதி கண்டு கொதிப்படைகின்ற முற்போக்கு சக்திகள் சிங்கள- முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கவே செய்கின்றன.எனவே தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற  சிங்கள, முஸ்லிம்  முற்போக்கு அமைப்புக்கள் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தங்கள் தார்மீக ஆதரவை வழங்குவதோடு அவர்கள் கலந்துகொள்ளவும் வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில்  தமிழ்மக்கள் பேரவை கேட்டு நிற்கிறது.

அன்பார்ந்த தமிழ்மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு  தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடு விக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது.

இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான  எழுகை.

உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால்  செப்டெம்பர் 7 ஆம் திகதி  பேரலையாய் எழுந்து  பேரணியில் கலந்து  கொள்ளுங்கள் என  தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது