Home Blog Page 3058

பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி திறக்கப்படும் ; ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படாது – ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த 100 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புகள் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், மட்டக்களப்பில் கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கான நிதி எங்கிருந்து வருகின்றது என்பது குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்காரணமாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு இவ்விடயம் குறித்து ஆராய்ந்ததுடன், குறித்த பல்கலைக்கழகத்தினை அரசுடமையாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, குறித்த பல்கலைக்கழகத்தினை கட்டுவதற்கான நிதி சரியான முறையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றதாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதில் மூன்று பௌத்த பீடங்கள் இணைந்து தீர்மானம்

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளிலிருந்து வேட்பாளராக களமிறக்கப் போகின்றவர் கொண்டிருக்க வேண்டிய  பொது நியதிகளை முன்வைப்பதற்கு மூன்று பௌத்த பீடங்களினதும் மகா சங்கத்தினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

இந்த நியதிகளில், ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை நிருவகிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைமை தொடர்பிலும் கொள்கை ரீதியிலான விடங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அஸ்கிரிய பீட பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் இந்த விடயங்களை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்று மகா சங்கத்தினர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் பெளத்த சமயத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் – யாழ்.நாக விகாரை விகாராதி

இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்கவேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம்.

இந்து சமயம் சார்ந்த மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அநாகரிகமான செயற்பாடுகளும் அடாத்தான செயற்பாடுகளும் பெளத்த மதத்தின் நிலைப்பாடாகது.

அவர்கள் பிக்குகளா? என்ற சந்தேகமும் எமக்கு எழுவதுண்டு. யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய மக்களுக்கு அசம்பாவிதங்கள் உண்டாகாது.

மேற்கண்டவாறு யாழ்.நாக விகாரை விகாராதி பதிஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார். இந்து சமய மக்களுக்கிடையிலும், பெளத்த சமய மக்களுக்குமிடையில் உருவாகியிருக்கும்

முரண்பாடுகள் குறித்து யாழ்.ஊடக அமைந்ததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், பெளத்த மதத்திற்கு இந்து மதத்திற்கும் தலமை இல்லை. தர்மம் தான் இரு மதங்களுக்குமே தலமை. மேலும் இந்த இரு சமயங்களுக்குமிடையில் பிரிவுகள் இல்லை.

இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது. மேலும் பெளத்த சமயத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமய கடவுள்களே இருக்கின்றனர்.

எந்த விகாரைக்கு சென்றாலும் இந்து சமய கடவுள்களை பார்க்கலாம். இந்நிலையில் இந்த இரு சமயங்களுக்குமிடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது.

அதற்கு ஒரு சில பெளத்த பிக்குகளே காரணம். அந்த ஒரு சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் பெளத்த சமயத்தின் நிலைப்பாடாக அமையாது. அது பெளத்த சமயத்தின் நிலைப்பாடல்ல.

பெளத்த பீடங்களுக்குள் உள்ள பிரச்சினைகளி னால் சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் இந்து சமயத்திற்கு பங்கம் உண்டாக்குவதாக அமைந்துள்ளது.

இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பெளத்த பிக்குகள் தானா என சந்தேகம் எழுகிறது. நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கிடையிலான உறவு பாலமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இந்து பெளத்த மக்களிடையில் நல்லிணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பை நாம் எடுப்போம். மேலும் யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய பங்கம் விளைவிக்கப்படாது.

அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதனை எதிர்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன். இந்து சமயத்தை பெளத்தர்களும், பெளத்த சமயத்தை இந்துக்களும் பாதுகாக்க வேண்டும்.

அதேபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்கவேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்றார்.

சிறீலங்கா வான்படைக்கு இந்தியாவின் சுற்றுக்காவல் விமானம்

சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறீலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியா வழங்கும் படைத்துறை விமானத்தை ஆய்வு செய்வதற்காக சிறீலங்கா வான்படை அதிகாரிகள் இந்தியாவின் கொச்சின் வான்படைத்தளத்திற்கு சென்றுள்ளனர்.

ஜேர்மனின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 என்ற இந்த விமானத்தை அவர்கள் ஆய்வு செய்வதுடன், அதற்கான பயிற்சிகளையும் பெறவுள்ளனர்.

திருமலையில் சீனன்குடாவில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படையின் கடல் கண்காணிப்பு படைப்பிரிவுடன் இணைந்து வான்படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்த விமானம் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது.இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை திருட்டுத் தனமாக பிரதமராக்கி அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார்.

இதனால் பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. அதிலும் முக்கியமாக இனப் பிரச்சினைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது.அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன.வேலை வாய்ப்பு,காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதமாகியுள்ளன. இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது.

எனினும் தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான் என்றார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளில் வாய் திறக்காத கூட்டமைப்பு – ஜயசேகர எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது வேட்பாளரையன்றி, தேசிய வேட்பாளரையே களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த அவர்;

ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் மீது பற்றுள்ளவராகவும் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பொறுப்புடன் செயற்படுபவராகவும், தேசிய வளங்களை விற்காதவராகவும் இருப்பது அவசியம்.

நிறுத்தப்படும் வேட்பாளர், அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவன்றி சகல கட்சிகளுக்கும் தலைமைத்துவம் வகிப்பவராகவும் சிறந்த நோக்கம் கொள்கையுடையவராக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் தெரிவித்த அவர்: வட,கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், வட, கிழக்கு மாகாண சபையின் காலம் நிறைவுற்றுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பில் வாய் திறக்காமல் இருப்பது விந்தையாக உள்ளது என்றார்

வடக்கு ஆளுநர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு; இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேச்சு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது..

இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது அமைப்பிடம் உள்ளதாகவும், இதனை முன்னெடுக்கும்போது எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதால் அகதிகளை அழைத்து வருவதில் தாமதங்கள் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவித்த திரு.சரத் டோஷ், இதற்கு உதவுமாறு ஆளுநர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை IOM நிறுவனம் மேற்கொள்ள உதவிபுரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு முழுமையாக உரிமை உள்ளதென்றும் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பும்போது அவர்களுக்கு தேவையான வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர், மீண்டும் இலங்கையில் அவர்கள் அகதிகளாக வாழ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் விமான நிலையங்கள் தரமுயர்த்தப்படுகின்றன

பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களை வணிக விமான சேவைகளை நடத்துவதற்காக அவற்றை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும், இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந் திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்  சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான நிலைய ஓடுபாதை தரமுயர்த்தப்படும். இங்கிருந்து முதலாவது விமானம் செப்ரெம்பர் மாதம் சேவையை ஆரம்பிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தென்னிந்தியாவில் சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் பணியாற்றிக் கொண் டிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.பலாலி விமான நிலையத்தை சுமார் 110 மில்லியன் டொலர் செலவில் தரமுயர்த்தும் பணிகள் கடந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தியின் மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை நீர்த்துப்போகச் செய்யவும் சிறீலங்கா அரசு எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும் என கருதப்படுகின்றது.

 

சிறைச்சாலை அதிகாரியை கைது செய்ய பிடியாணை

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக இருந்த இமதுவகே இந்திக சம்பத் என்பவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் 8 கைதிகளை படுகொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதல் நிலையை கட்டுப்படுத்த 8 கைதிகளை சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இமதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவில் சிங்களக் கைதிகள் தமிழ் கைதிகள் மீது காலம் காலமாக சிறை அதிகாரிகளின் உதவிகளுடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1983 ஆம் ஆண்டும் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இனப்படுகொலையில் 37 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் சிறுபான்மை மக்கள் கொல்லப்படும் போது சிறீலங்கா அரசு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் தற்போது அனைத்துலக அழுத்தங்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை,  நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

அங்கு நடைபெற்ற ஒன்றுகூடலில் உரையாற்றிய சுசில் பிரேமஜயந், மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இரணைமடு விலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வடமாண முதலமைச்சராக இருந்த  விக்னேஸ்வரன் பதவிக்கு வந்த பின்னரே இது இடை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசாங்கம் ஹோட்டல்களையும், கட்டிடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றப்பட்டதாகவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா பேசும் போது, மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்போம் என தெரிவித்தார். அத்துடன் நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது நமது கட்சி உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கேயாகும் என்றார்.

ppf jaffna 2 வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்சிறிலங்கா பொதுஜன  முன்னணி யாழ். மாவட்ட காரியாலத்தில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என 200இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிங்களக் கட்சிகளின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியத்துவத்தை குறைக்கும் தகமையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.