பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி திறக்கப்படும் ; ஒருபோதும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படாது – ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த 100 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புகள் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், மட்டக்களப்பில் கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கான நிதி எங்கிருந்து வருகின்றது என்பது குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்காரணமாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு இவ்விடயம் குறித்து ஆராய்ந்ததுடன், குறித்த பல்கலைக்கழகத்தினை அரசுடமையாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, குறித்த பல்கலைக்கழகத்தினை கட்டுவதற்கான நிதி சரியான முறையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றதாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.