மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிட்டவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, 13 ஆண்டுகள் ஆகியும் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் நான்காம் நாள் சிறீலங்கா படையினரே 17 பணியாளர்களையும் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் பகுதியில் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

திட்டமிட்ட முறையில் படுகொலைகளை மேற்கொண்டவர்களை 13 ஆண்டுகள் ஆகியும் சிறீலங்கா காவல்துறையினரால் அணுகக்கூட முடியவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது இந்த படுகொலை மட்டுமல்லாது ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துவதற்கு அனைத்துலக நீதி உதவிகள் தேவை என்பதை உணர்த்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் உட்பட 16 தமிழர்களும் ஒரு முஸ்லீம் இனத்தவரும் அடங்கியிருந்தனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகளை இந்த அரச சார்பற்ற நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மனத்தை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.