Home Blog Page 3038

இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி  ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும்,  சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு  வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கு வதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு,  சனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

போர்க் குற்றவாளி தலைமை தளபதியா? அதிர்ச்சியளிக்கிறது.பழ நெடுமாறன் கண்டனம்

சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத்தின் தலமை தளபதியாக நியமித்தது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர்இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.2009ஆம் ஆண்டு போரின்போது

இவர் தலைமையில் இயங்கியசிங்கள இராணுவத்தின் 58ஆவது பிரிவு கிளி நொச்சி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான

அப்பாவித் தமிழர்களைக்கொன்று குவித்தது.விடுதலைப்புலிகளின் தளபதிகளான  நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் ..

வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய முன்வந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஒருவரை இலங்கைப் படையின் தலைமை தளபதியாக இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்திருப்பது

ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படு கொலைகளைசிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பதுஇதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.அத்துடன் நின்றுவிடாமல்சில்வா மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமெனஅவரை வேண்டிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திர சில்வா பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப்பாவி – வைகோ கண்டனம்.!

ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணம் மாறும்எனவும்  தமிழீழ இனப்படு கொலையாளிகள்தப்ப முடியாது என மதிமுக பொதுச்செயலர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வைகோதெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்குற்றவாளி  சவேந்திர சில்வா இலங்கையின் தலைமை இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு  கண்டனம் தெரிவித்துள்ளார்
அதில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும்.

ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாதஅரசு நடத்திய தாக்குதல்களில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள இராணுவ த்தின் 58 ஆவது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களைக் கொன்றுகுவித்த அடால்ப் இச்மனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டியகொலைகாரப் பாவி ஆவான்.

ஐ.நா.வழங்கிய உதவிப் பொருட்கள்,யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து, காடுகளுக்குள் நிர்கதியாக நின்ற அப்பாவித் தமிழர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தவன்;

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப்பிடித்துச் சுட்டுக்கொல்ல  ஆணை இட்டவன்;

தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச்சூறையாடி, கொன்று குவித்தஅரக்கன் இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி,அங்கே சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தத மிழர்களைக் கொன்றவன்;

பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்கவரிசைகளில் நின்ற தாய்மாய்கள் மீதும்குண்டுகளை வீசக்காரணம்ஆனவன்;கொலைகார இராணுவத்தினரைவெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களைஇரத்த வேட்டை ஆடியவன்;

அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கிமூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன்தலைமையிலான மூவர் குழு வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப்பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்தகயவன்தான் சவேந்திர சில்வா.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிலும், டப்ளின், பிரெம்மன் தீர்ப்பு ஆயங்களிலும் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கைகளில் சவேந்திர சில்வாவின் கொலை பாதகச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திரசில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனாநியமித்த போதே தமிழர்கள் தலையில் இடிவிழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார்.

கொலைகார ராஜபக்சே அரசில் இராணுவஅமைச்சராக இருந்த, சிறிசேனாவும்இனப்படுகொலைக் குற்றவாளியே.

இலக்கு 39 18-08-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 39 18-08-2019

வட்டக்கச்சியில் படையினர் குவிப்பு பாரிய தேடுதலுக்கு ஏற்பாடு

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன .குறித்த பகுதியில் பாரிய தேடுதல் ஒன்றை படையினர் மேற்கொள்ளலாம் என தெரிய வருகிறது.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப் பட்டுள்ளனர். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய சிறிதரன் ‘லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழரின் இரத்தம் வடிகிறது’ கூறியிருந்தமை இங்கு குறிப்பிட த் தக்கது

 

சில்வாவின் நியமனம் இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் – சிறீலங்கா

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது ஒரு இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் அதனை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசு நேற்று (20) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் தலைவராலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே ஒரு இறைமையுள்ள நாட்டின் தலைவர் எடுத்த தீர்மானத்தை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. எமது நிர்வாகச் செயற்பாடுகளில் அவர்கள் மேற்கொள்ளும் தலையீடுகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளிநாடுகளும், அமைப்புக்களும் சில்வா மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் கவலைதருக்கின்றன என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, கனடா மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு ஆகியன தமது கவலைகளை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP): போரினால் மரணித்தவர்களைக் கணக்கிடல்

சிறீலங்காவில் 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணாமற் போனார்கள் என்ற அறுதியான ஒரு இலக்கத்தைத் தர அரசுக்கு இணக்கமில்லை, தமிழர் தரப்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.

இத் துயரமான நிலைமைக்கு தென்னிலங்கை அரசுகளும் அரசியல்வாதிகளும் காரணிகளாக இருந்ததனாலோ என்னவோ பாதிக்கப்பட்டவர்களின் தவிப்புக்களைத் தீர்க்குமளவுக்கு உண்மையயும் நீதியையும் நிலைநாட்டவேண்டுமென்ற எந்த அவசரமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அபயம் அனைத்துலக நாடுகளும் ஐ.நா. போன்ற அவற்றின் சாதனங்களும் தான்.

இருப்பினும் நடைபெற்ற அநியாயத்துக்கு நாம் நியாயமான தீர்ப்பொன்றை எதிர்பார்க்கும்போது நடைபெற்ற அநியாயம் இது தான் என்று ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் தரவுகளைக் கொடுப்பதும் அவசியமாகிறது. துர்ப்பாக்கியமாக, இதுவரையில் அரச தரப்பிலிருந்தோ, அல்லது தமிழர் தரப்பிலிருந்தோ தரவுகள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வருடா வருடம் ஐ.நா. முன்றலில் நாம் என்னதான் அழுது புரண்டாலும் நம்பகத்தன்மையுடன் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை.

இன் நிலையில் அனைத்துலக உண்மை, நீதிக்கான செயற்திட்டம் (International Truth and Justice Project – ITJP) என்ற அமைப்பும், மனித உரிமைகள் தரவாய்வுக் குழுமம் (Human Rights Data Analysis Group – HRDAG) என்ற இரு அனைத்துலக அமைப்புகள் சிறீலங்காவின் 2009 இறுதிப்போரின் முன்னரும் பின்னரும் மரணித்த, காணாமற் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.. அமெரிக்காவில் இயங்கி வரும் ‘இலங்கைத் தமிழ்ச் சங்கம்’ மற்றும் கனடிய தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இம் முயற்சிக்கு ஆதரவளிப்பதுடன் இது குறித்த விருப்பப்பாடுள்ள அனைத்து அமைபுக்கள், தனியார் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, ITJP யின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜஸ்மின் சூக்கா ஏற்கெனவே ஐ.நா.வில் இது குறித்துப் போராடி வருபவர். HRDAG உலக அரங்கில் மதிக்கப்படும் புள்ளிவிவரம் மற்றும் தரவுகளை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அறிக்கைகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாகும். குவாட்டமாலா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி இவ்வமைப்பு தகவல்களைச் சேகரித்து ஆய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறது.. தமிழர் தரப்போ அல்லது எந்த பாதிக்கப்பட்ட தரப்பினரோ தாமாகச் சேகரித்துத் தரும் தகவல்களுக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. எனவே இப்படி சர்வதேச அரங்கில் அனுபவமும் நம்பகத்தன்மையும் கொண்ட நிறுவனங்களின் மூலம் நம் பணிகளை முன்னெடுப்பது நல்லதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

இத் தருணத்தில் இவ்விரு அமைப்புக்களும் எதிர்பார்ப்பது போர்க்காலத்தில் மரணிததவர்கள் பற்றிய சில தரவுகளையே. பல தமிழ் அமைப்புக்களும், தனிப்பட்டவர்களும், ஊடகங்களும் இறந்துபோனவர்கள், காணாமற் போனவர்கள் பற்றி ஏற்கெனவே பல தகவல்களைத் திரட்டி வைத்திருப்பார்கள் அல்லது தகவல்களை வழங்கக்கூடிய தொடர்புகளைக் கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் தகவல்களை இவ்வமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் கையளிக்கலாம். தகவல்களைத் திரட்டக்கூடியவர்கள், தொடர்புகளை வைத்திருப்பவர்கள் தாமாக இத் தகவல்களைப் பெற்றுப் பதியக்கூடியதான படிவங்களை இவ்வமைப்புகள் ஏற்கெனவே தயாரித்துள்ளன. அவற்றைப் பெறும் வழி வகைகளை இங்கு தருகிறோம்.

இந்த மாதம் (ஆகஸ்ட்) 24, 25ம் திகதிகளில் கனடிய தமிழ்க் காங்கிரஸ் நடாத்தும் 5 வது ‘தெரு விழாவில்’ மேற்கூறிய அமைப்புக்கள் ஒரு சாவடியை அமைப்பதாக எண்ணியுள்ளன. தகவல்களைத் திரட்டுவதற்குத் தேவையான பத்திரங்களும் வழிகாட்டல் உதவிகளும் இச் சாவடியில் வழங்கப்படும்..

சிறீலங்கா அரசுகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருப்பதை விட நாம் எமது எதிர்காலத்தை எமது கைகளிலே எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதற்காக நாம் வேறு அணுகுமுறைகளைக் கையாளவேண்டும். சரியான தரவுகளும், ஆவணங்களும் அவற்றை உரிய முறையில் கையாளவல்ல நிறுவனங்களும் இன்றய காலத்தின் தேவையாக நாம் பார்க்கிறோம்.

அதையும் விடவும், மரணித்த இம்மக்களைக் காலம் பூராவும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு நினைவுக் கோர்வையை உருவாக்குவதற்கும் இத் தரவுகள் பயன்படுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களை நினைப்பது அவர்களின் மரணங்களுக்கு அர்த்தத்தைக் கொடுக்கலாம். அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் எனவே இது எங்கள் கடமை.

தகவல்களை வழங்கும் எவரின் அடையாளங்களோ, பெயர்களோ, முகவரிகளோ பிரத்தியேகமாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தொடர்புகளுக்கு: Canadian Tamil Congress – 416-240-0078.

நேரடியாக: தமிழர் தெருவிழா – August 24 &25 Markham Road, Scarborough

விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தியதாகவும் அது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு கூறியதாகவும் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெ.பிரதீபன்  தெரிவித்தார்.

பூமியை நெருங்கி வரும் ஆபத்து

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அதே போன்று  பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் இன்னொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த விண்கல் 4 தொடக்கம் 9கிலோமீற்றர் வரையான விட்டத்தைக் கொண்டது.

தற்போது சூரியனைச் சுற்றி வரும் இவ்விண்கல் 2027ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ஆம் திகதி பூமிக்கு மிகவும் அண்மையாக வரும் எனவும், இதன் போது ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமரா

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக 19.08 அன்று இரவு ட்ரோன் கமரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8. மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்தக் கமரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த ட்ரோன் கமரா தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் இவ்வாறான ட்ரோன் கமராக்களை கண்டால் சுட்டு வீழ்த்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.