சில்வாவின் நியமனம் இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் – சிறீலங்கா

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது ஒரு இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் அதனை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசு நேற்று (20) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் தலைவராலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே ஒரு இறைமையுள்ள நாட்டின் தலைவர் எடுத்த தீர்மானத்தை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. எமது நிர்வாகச் செயற்பாடுகளில் அவர்கள் மேற்கொள்ளும் தலையீடுகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளிநாடுகளும், அமைப்புக்களும் சில்வா மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் கவலைதருக்கின்றன என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, கனடா மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு ஆகியன தமது கவலைகளை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.